தென்னிந்தியர்களின் முகத்தோற்றம், உடலமைப்பு-, தேக நிறம் கொண்ட இந்நாட்டின் பூர்வீகக் குடிகள். இம்மண்ணின் சொந்தக்காரர்கள். ஊவா மாகாணத்தின் தம்பானையிலும் கதிர்காமத்தை அண்மித்த வனப்பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களில் ஒருவனாக-
கோரைப்புல்லால் வேயப்பட்டு மண்கட்டிகளையும் மூங்கில் கழிகளையும் கொண்டு எழுப்பப்பட்ட சுவர்களுமாய் அமைந்த தன்னுடைய குடிசைக்குச் சற்றுத் தள்ளி கடம்ப மரத்தடியில் அம்மிக்கல்லையொத்த ஒரு கல்லின் மீது அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிரன். மேற்கே தொலைதூர மலைமுகட்டில் மறைந்து கொண்டிருந்தான் கதிரவன். கருங்காலி மரக்கிளைகளில் தொங்கியபடியே தூங்கிக் கொண்டிருந்து விழித்து காததூரத்திற்கப்பால் பழுத்துக் குலுங்கும் கனிகளை மோப்பமிட்டு ராட்சத வேகத்தில் பறந்து செல்லும் வெளவால்களும் கூடுகளையும் மரப்பொந்துகளையும் நாடி ஓய்வெடுத்து அதிகாலை துயிலெழும்ப இறக்கை விரிக்கும் பறவைகளும் வேகமாக அன்றைய பொழுதை நகர்த்திக் கொண்டிருந்தன.
வேட்டையாடுதலை தொழிலாளாகக் கொண்டிருந்த சமூகம் சேனைப்பயிர் செய்கையாலும் வயிறு வளர்க்கிறது. சமூகப் பாரம்பரியத்தையும் பழைமையையும் பாதுகாக்க முயற்சிக்கும் வயதானவர்களும் இருளைவிட்டு வெளியேறவேண்டுமென நாகரீகத்தை நாடும் இளைஞர்களுமாய் பனிப்போர் மிக மிக மெளனமாக துளிர்விடத் தொடங்கியுள்ள இக்கானகத்தின் ஒரு கோடியில் வாழ்கின்ற பழமைவாதி இந்த கதிரன். உடும்போ, முயலோ,முள்ளம் பன்றியோ, காட்டுக்கோழியோ ஏதாவது ஒரு வேட்டையுணவோடும், காய்கனிகள், கிழங்குகளுமாய் தினசரி மாலை வேளை குடிசைக்குத்திரும்பும் அவன் இன்று வெறுங்கையுடன் வந்தான். ஆனால் குடிலுக்குள் நுழையவில்லை. கடம்பமரத்தடியில் தரித்துவிட்டான்.
வந்ததும் வராததுமாக தன்னுடைய ஒரே மகளை அனைத்து உச்சி மோந்து பாட்டு சொல்லிக் கொடுப்பவன் அந்த பச்சிளம் குழந்தையைப் பற்றி நினைக்கவேயில்லை. கடம்ப மரத்தடியில் தஞ்சமடைந்து விட்டான். அடுப்பில் கம்பஞ்சோற்றைக் கொதிக்க வைத்து அகப்பையால் கிண்டிக் கொண்டிருந்த மனைவி வெளியே வந்து கணவனின் இந்த மாற்றத்தைக் கண்டு புரியாதவளாய் அவனது பார்வையில் படும்படியாக அவன் முன்னால் இங்கும் அங்குமாக நடந்து பார்த்தாள். அவனது சிந்தனையைக் குலைக்காமல் நடமாடிய அவளை அவன் கண்டுகொள்ளவில்லை. வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தூக்கியணைத்துக் கொஞ்சிக் குலாவி பாட்டு சொல்லிக் கொடுக்கும் தகப்பனின் மாற்றம் அந்த சின்னஞ் சிறு குழந்தைக்கும் தெரிந்தது. மான்தோலில் படுத்துப் புரண்டுக் கொண்டே அப்பன் சொல்லிக் கொடுத்த வள்ளி பயிர் காக்க பறவைகளோட்டிய பாடல்களை மனப்பாடமாக ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்.
கதிரவன் போய் காரிருள் கௌவியது. அண்டவெளியை ஆக்கிரமித்துக் கொண்டன. இனந்தெரியாத புதிராய் கற்பனையுலகில் மூழ்கிக் கிடந்தான் கதிரன். பாடிக் கொண்டேயிருந்த குழந்தை மான்தோல் விரிப்பின் மீதே அயர்ந்து தூங்கிவிட்டது. மனம் பொறுக்கவில்லை தாய்மைக்கு. தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய பச்சிளம் பாலகன் சாப்பிடாமலேயே உறங்கிவிட்டது கண்டு மனம் புளுங்கினாள் தாய் குவினி. சற்று நேரம் கழித்து எழுப்பி உணவு கொடுக்கும் எண்ணத்தோடு பழந்துணியொன்றை கொண்டு வந்து குழந்தையைப் போர்த்திவிட்டாள். அடுப்பில் கொதித்த கம்பஞ் சோற்றை இறக்கி வைத்துவிட்டு முயல் இறைச்சிக் கறியை சூடாக்கி அவனது இராப் போசனத்தைத் தயார்ப்படுத்திவிட்டுக் கூப்பிட்டாள். வழமைபோல் இல்லாமல் தரையையே பார்த்துக்கொண்டு உள்ளே வந்தவன் கையலம்பாமலேயே தட்டிலிருந்த உணவை நொடிப் பொழுதில் விழுங்கி விட்டு மீண்டும் கடம்ப மரத்தடியில் தஞ்சமடைந்தான்.
வேட்டைக்காகவே வளர்க்கப்படும் நாய்கள் குரைத்தன. ஏதோ ஊர்வன நடப்பன- பறப்பனவைக் கண்டுபிடித்தது போல் அவை குரைத்தது. முயல் இறைச்சிக் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தபடியால். வேட்டைக்காக குரைக்கவில்லையென்பது அவனறியாத விடயமில்லை. அவை பசிக்காக குரைப்பது தெரிந்தும் அவன் சட்டை செய்யவில்லை இருட்டுக்குள்ளேயே கல்லையோ, தடியையோ தடவி எடுத்து வீசி எறிந்தான்.... ‘‘அடச்சீ....’’ என கோபத்துடன் எகிறினான். அவை குரைத்துக் கொண்டே ஓடி நின்றன. மீண்டும் அவன் உட்கார்ந்திருக்கின்ற பக்கமாக பார்த்து குரைத்தன. அவனோ அண்டவெளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மின் மினிப் பூச்சிகளை எண்ணிக் கொண்டிருப்பவனாக இருந்தான்.
குழந்தைக்காக ஒரு பகுதி உணவை ஒதுக்கி வைத்துவிட்டு கம்பஞ் சோறும் முயலிறைச்சிக் குழம்பும் சாப்பிட்டாள் குவினி. வெற்றிலை- பாக்குத் தட்டைக் கையிலெடுத்தவாறு கடம்ப மரத்தடியில் வந்து கணவனின் பக்கத்தில் தரையில் அமர்ந்தாள்.
கணவனின் இந்த மெளனமான செயற்பாடு புரியாத புதிராக தோன்றியது. மெதுவாக அவனது முதுகைத் தடவினாள். வழுவழுவென பரிசிக்கும் அவனுடம்பு கல்லாக கணத்தது. தலையைத் தடவி பரட்டைத் தலையின் மயிர்களைக் கோதி விட்டாள். எவ்வித சலனமுமின்றி கல்லாய் சமைந்தவனாய் காட்சி தந்தான் கதிரன். அடிபாதத்திலிருந்து முழங்கால் வரையும் தடவிக் கொடுத்தாள். அவன் மின் மினிப் பூச்சிகளுடன் மானசீகமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
‘அப்படியென்ன மூழ்கிப் போச்சு?’ அன்பாக அமைதியாக குவினி கேட்டாள். அவனிடம் பதிலில்லை. குவினிக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். மூத்தவளை வன்னியன் மணமுடித்திருக்கின்றான். அக்காவைக் கைப்பிடித்த ஒரு சில மாதங்களிலேயே அவன் குவினியின் பின்னால் வளைய வரவும், பேச முயற்சிப்பதும், சிரித்துப் பழகுவதாகவும் தோன்றியது. இன்னொரு குடிசையை அமைத்துக் கொண்டு தன்னையும் இழுத்துக் கொண்டு போய் விடுவானோ என்ற சந்தேகத்துடன் சற்றே ஒதுங்கியே இருக்க முயற்சித்துக் கொண்டாள் குவினி. கூடப் பிறந்த சகோதரியாக இருந்தாலும் சரி, வேறொருத்தியாக இருந்தாலும் சரி தனது கணவனாக வாய்க்கப் போகிறவன் தனக்கு மட்டுமே உரித்தானவனென நினைப்பவள் அவள். தனது வாழ்க்கையில் இன்னொருத்தி பங்காளியாவதை அவள் விரும்பாதவள். தனக்கென தனிக்குடிசை அதற்குள் கணவன்- பிள்ளை குட்டிகள். இதுவே அவளது வாழ்க்கைக் கனவாகக் கொண்டிருந்தாள்.
கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அச் சமூகத்தில் சுறுசுறுப்பாகவும் திடகாத்திரமாகவும் இருந்தான் கதிரன். முதுகைத் தொடும் அடர்ந்த தலைமுடி. காதருகே இருந்து அடுத்த காதுவரை தாடையை மறைக்கும் ஆஞ்சநேய தாடி. நிறம் கறுப்பாக! வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருக்கும் செவ்வாய். இடது தோளில் கைக்கோடரி. குனிந்தாலும் நிமிர்ந்தாலும் நடந்தாலும் ஓடினாலும் அது விழாது. அவ்வளவு பயிற்சி அந்த கோடரிக்கு, அகன்ற மார்பு. தொந்தி விழாத ஒட்டிய வயிறு. புஜபராக்கிரமசாலியாகவே தோன்றினான் கதிரன். அவனே தனக்கு கணவனாக வாய்க்க வேண்டுமென வள்ளியை முருகனை வேங்கை மரத்தடியில் நின்று வேண்டிக் கொள்வாள். அவள் வேண்டுதல் செய்யும்வேளையில் தூரத்து வனத்தில் யானையின் பின்னாளில் சத்தம் கேட்கும். முருகனுக்கு உதவியாய் விவாகப் பெருமான் இந்த வனத்துக்குள் வந்ததை நினைத்துக் கொண்டு மெய்சிலிர்த்தாள் இளம்குவினி.
தேவையறிந்தும் தேவையின்றியும் அவளது குடிலுக்கு முன்னால் அடிக்கடி போய்வந்தான் கதிரன். அவளை நோட்டம் விடுவதும் அவளை ஓரக் கண்ணால் பார்ப்பதுமாக தொடர்ந்து கொண்டிருந்தான். ஒருநாள் திடீரென இடது தோளில் கைக்கோடரியும் வலது கையில் புத்தம்புதிய வில்லோடு சில அம்புகளும் இடக்கையில் கனமான முயலொன்றை காதுகளைப் பிடித்துத் தூக்கியவாறு வந்தவன் குவினியின் தகப்பனின் காலடியில் வைத்து குனிந்து பணிந்து எழுந்து நின்றான்.
மண்சுவரின் ஓர் இடுக்கின் வழியாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த குவினி, அப்பன் என்ன சொல்லி அவனை அனுப்பப் போகிறானோ என பதை பதைத்தாள். ஓராயிரம் நினைவுகள் மனதுக்குள் வந்து போயின. கதிரன் கொண்டு வந்து சமர்ப்பணம் செய்த வேட்டைப் பொருளோடு தந்தையின் கோபக் கணைக்களாகிச் சென்று விடுவானோவென அச்சம் கொண்டாள். வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்த தகப்பன் சுரக்குடுவைக்குள் ‘தூ’ வென துப்பி உமிழ்ந்தான். சில நிமிட நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு துண்டுத் துணியால் முகத்தையும் பின்னர் கையிடுக்குகளையும் மார்பகத்தையும் வயிற்றையும் கடைசியாக தோள்வழியாக வீசி முதுகையும் துடைத்துக்கொண்டான். கதிரனுக்கோ வியர்த்தது. துடைக்க முடியாதபடி நின்றான். குவினியோ வாழ்வா? சாவா? போராட்டத்தில் மூழ்கிப் போயிருந்தாள். கிழவன் வாய்த்திறந்தான்.
‘‘ம்........ வட்டப்பாறைக்கு கீழே கருவேப்ப மரத்துக்குப் பக்கத்துல ஒருகுடிசை போட்டுக்கோ....!’’ என்றான். தென்றலில் தவழ்வதை உணர்ந்தாள் குவினி. பணிந்து நமஸ்கரித்து விட்டுவெளியேறினான் கதிரன் வில்வம்பூ அவித்த நீரையும் திப்பிலி வெல்லமும் கொண்டு சிரட்டையும் கையுமாக தகப்பன் முன் மலர்ந்த முகத்தோடு நின்றாள் குவினி. தாடி மீசைக்கு மேலே தந்தையின் புன் சிரிப்பு மலர்ந்தது. ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்க உள்ளே சென்றாள்.
‘குடிசை போட்டுக்கொள்! என்று சொன்னால் எனது மகளைக்கைப்பிடித்துக் கொள் என சம்மதம் தெரிவிப்பதாக பொருள். உங்கள் இரண்டு பேருக்குமாக குடிசையை நீயே அமைத்துக் கொள்ள வேண்டுமென்பது கட்டளை. மறுநாளே வட்டக் கற்பாறையின் கீழ்பகுதியில் கருவேப்ப மரத்துக்குப் பக்கத்தில் குடிசை அமைக்கத் தொடங்கிவிட்டான். இரண்டு மூன்று நாட்களில் குவினியுடன் குடும்ப வாழ்க்கையை அந்த குடிலுக்குள் ஆரம்பித்தான். கலகலப்பாக வாழ்ந்து ஒருபெண்ணையும் பெற்றார்கள்.
நீண்ட அமைதியைக் கிழித்துக்கொண்டு கதிரன் வாய்திறந்தான். ‘‘புதுசா ஒரு குடிசை போடப் போறேன்!’’ நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த வார்த்தைகள் அவளுடைய மண்டையில் சம்மட்டியாய் பாய்ந்து. பந்து போலொன்று அடிவயிற்றிலிருந்து மேலே கிளம்பி நெஞ்சை அடைத்தது. கண்களில் அருவி பெருகியது. ஆனால் அழுகை வரவில்லை. தொண்டை அடைக்கப்பட்டு விட்டதால் வாயைத் திறந்து அவளால் அழுது புலம்ப முடியவில்லை. மூச்சே நின்றுவிடும் நிலையை எய்தினாள். நெஞ்சுப் பகுதி வலித்தது. இதயத் துடிப்பு நின்றுவிடும் போலிருந்தது. ஒரு தலைக்கு மேலே பல தலைகள் சுமத்தப்பட்டுள்ளதாக கனத்தது. நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தவள் இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்துப் பார்த்தாள். சடாரென அவனது மடியின் மீது தலையை புதைத்துக் கொண்டு விம்மினாள்.
இவ்வளவு சீக்கிரமாக தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் இப்படியொரு திருப்பம் ஏற்படுமென கனவிலும் நினைக்கவில்லை. தமக்கையின் கணவனிடமிருந்து தப்பிக்க முயன்றது கூட இப்படியொரு வாழ்க்கையை விரும்பாத படியால் தானே. கருவேப்பமரத்தடியில் குடிசை போட்டுக் கொண்டு வந்தது கதிரன் தனக்கு மட்டுமே உரித்தானவனாக இருக்க வேண்டுமென்பதற்காகவே. அவனுடைய மான்தோல் படுக்கையையே உலகமாகக் கருதினாள். தனக்கென ஒரு கணவன்,- பிள்ளை குட்டிகள். தனியான வாழ்க்கை இவைதான் அவளது வாழ்கையின் இலட்சியமாகவிருந்தது. பருவப் பெண்ணாக இருந்தபோது கதிரனைத் தவிர வேறெவனையும் நினைத்துக்கூட பார்க்காதவள் அவள். தனது இலட்சியத்திற்கு கதிரனால் ஒரு போதும் இடையூறு வராதெனவே கருதினாள். அதனால் அவனையே விரும்பினாள். எத்தனையோ இன்ப துன்பங்களை அவனோடு பகிர்ந்து கொண்டாள். மனைவியாக, தோழியாக, தாயாக, பிள்ளையாக பல்வேறு பரிணாமங்களை அவனுக்காக எடுத்தவள் அவள். ஆனால் அனைத்தும் ஒருநொடிப் பொழுதில் மண்ணாகின.
‘சாமி! எனக்கெதுக்கு இந்த தண்டனை?’ கண்களில் அருவி பொழிய அவனைப் பார்த்து கேட்டாள். பதிலில்லை. ‘நான் ரொம்ப அவலட்சணமாக இருக்கிறேனா?’ இன்னொரு கேள்வியும்கேட்டாள். அவன் மின் மினிப் பூச்சிகளை எண்ணிக் கொண்டிருந்தான்.
‘‘என்னால உனக்கு கிடைக்கிற சுகம் திருப்திகரமா இல்லையா சாமி?’’ கெஞ்சிக் கேட்டாள் அப்பாவி குவினி. மடியில் இருந்த அவளது தலையை புறங்கையால் தள்ளிவிட்டான் கணவன். மான்தோல் விரிப்பில் புரண்டாள் மனைவி. அழுதாள். கதறினாள், கந்தனை- வள்ளியைக் கூப்பிட்டு மன்றாடினாள். கடம்ப மரத்தைக் கைகளால் அடித்துக் கத்தினாள், ‘‘கந்தா- கடம்பா!’’ பக்கத்துப் பாறையில் எதிரொலித்தது. கதிர்காமத்தில் அங்க பிரதட்சணை பண்ணுவது போல கடம்ப மரத்தைச் சுற்றி புரண்டாள்- அவனோ மெளனம் காத்தான். கல்லை விட்டெழுந்து நடக்க ஆரம்பித்தான். அவனது கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டும் கதறினாள். அவன் நடக்கவில்லை. நடக்க முடியாதபடி பிடித்திருந்தாள். அழுகையினால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி திணறிக் கொண்டு அலங்கோலமாக அமர்ந்து கொண்டாள். விரிந்து கிடந்த தலைமுடியை இரு கைகளாலும் அள்ளி முடித்துக் கொண்டு கண்களில் மட்டுமல்ல, நாசியிலும் வடிந்ததை கைகளால் சிந்தி எறிந்தாள்.
பனியும், குளிரும் அவனுக்கு ஒருபொருட்டாக தோன்றவில்லை. கடம்ப மரத்தடியில் நின்று கொண்டு மின் மினிப் பூச்சிகளை எண்ணிக் கொண்டிருந்தான். தாங்க முடியாத குளிரும், பனியும் உடம்பை நனைத்துக் கொண்டிருக்க அவனை விட்டு குடிலுக்குள் நுழைய அவள் விரும்பவில்லை. நடுங்கிக் கொண்டிருந்தாள்.
‘இது என்னோட தனிப்பட்ட விருப்பமில்ல. உங்க
அப்பனோட விருப்பம்’’
மின் மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை பனியை குளிரை கிழித்துக் கொண்டு அவளது செவிகளுக்குள் பாய்ந்தது. அவனது நீண்ட நேர மெளனத்தின் பின்னரான வார்த்தைகள். புறங்கையால் கண்களையும் மூக்கையும் தேய்த்துக் கொண்டு அவனது அடுத்த விளக்கத்திற்காக தயாரானாள். மின் மினிப் பூச்சிகள் தான் அவனது முகத்தை அவளுக்குக் காட்டின.
‘‘புதுசா ஒரு குடிசை போட்டு இளையவனையும் அழைச்சிக்கிட்டு போ!’’ ன்னு உங்கப்பன் சொன்னாலும் நான் பெருசா எடுத்துக்கல்ல. இருந்தாலும் நேத்து என்னைக் கூப்பிட்டு ‘‘என்ன? வேறெவனாவது ஒருத்தன் அவள இழுத்துக்கிட்டுப் போய் குடிசை போடுற வரைக்கும் பார்த்துக்கிட்டு இருக்கிறீயா?’’ ன்னு கேட்டாரு. அதுக்கப்புறம்தான் என்னோட சம்மதத்தை சொன்னேன்’’ விளக்கினான். அவள் சிலையானாள்.
ஆதிவாசிகள் சமூகத்தில் ஏற்ெகனவே மணமுடித்த ஒருவன் இன்னொரு பெண்ணையும் மணம் முடிக்க இயலும். தமக்கையில் கணவனுக்கு அவளது தங்கையையும் கைப்பிடிக்க சகல உரிமையும் உண்டு. அதற்காக மூத்தவள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அவள் விரும்பாவிட்டாலும் அதனைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
மூத்தவளை மணந்து நாளடைவில் மேலும் மூன்று நான்கு குடிசைகளை போட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர் இச்சமூகத்தில் உள்ளனர். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுப்பதும் அவர்களை வளர்ப்பதும் இம் மனைவிகளின் வேலை. கூழோ, கஞ்சியோ வேட்டை இறைச்சியோ தேனோ, திணையோ, சாப்பிடக் கொண்டு வந்து கொடுப்பது ஆணின் வேலை. இது ஆதிவாசிகளின் வழக்கம்.
இப்போதும் பள்ளத்து ஏரிக்கரையில் மரையின் குரல் ஆண்மையின் வெளிப்பாடாக கேட்கிறது. அந்த ஓசை கேட்டவுடன் வனத்தின் எப்பகுதியிலிருந்தாவது பெண் மரையொன்று அந்த ஓசை வந்த இடம் நாடிச் சென்றுவிட வேண்டும். அந்த பெண்மரை ‘கிடேரி’ யாகக் கூட இருக்கலாம். அவை ஒன்று சேர்வதை யாராலும் தடுக்க முடியாது. அது வனத்தில் வாழும் மரைக் கூட்டத்தின் வழக்கம்.
வனப்பகுதி குடில்களில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் ஆண்களையும் எழுப்பி நரம்புகளில் உணர்ச்சியை ஏற்றிவிடும் ஓசை அது. கடம்பமரத்தடியில் நின்று கொண்டு மரையின் ஓசையையும் கணக்கிலெடுக்காதவனாய் இருந்தான் கதிரன். தனது தாம்பத்திய உறவுக்குள் இன்னொருத்தியையும் பங்காளியாக்கிக் கொள்ள விரும்பாதவளாய் வாழ்ந்த அந்த அப்பாவிப் பெண் ஒரு முடிவுக்கு வந்தாள். மீண்டும் அவிழ்ந்து போன தலைமுடியை இரு கைகளாலும் அள்ளி முடிந்தவாறே எழுந்தாள்.
‘‘சாமி நானும் அவளும் ஒரே வயித்த கிழிச்சிக் கிட்டு பொறந்த அக்காளும் தங்கைச்சியும். எங்க ரெண்டு பேருக்கு இருக்கிற இந்த ஒரே குடிசைபோதும். இன்னொரு குடிசை போடாதே சாமி!’’
கெஞ்சிக் கேட்டாள் சமூக பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளித்தவளாய். சாப்பிடாமலே தூங்கிக் கொண்டிருக்கும் தன் பெண் குழந்தையை நினைத்துக் கொண்டே குடிசையை நோக்கி நடந்தாள். அவன் பின்னால் போனான்.
சி.கே. முருகேசு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக