இவற்றைத் தொடர்ந்து, 1956 ஆம் ஆண்டு முதலாக இலங்கைத் தமிழரைப் பெருமளவிற் பாதிக்கக் கூடிய நிர்வாக ஏற்பாடுகளும் கொள்கைகளும் கடைப்பி டிக்கப்பட்டன. 1972 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு இலங்கையின் ஆட்சி முறையினைச் சிங்கள மயமாக்கியது.
சமஷ்டியாட்சி பற்றிய யோசனைகள்
இலங்கையில் ஒரு சமஷ்டியாட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தினைச் சிங்களத் தலைவர்களே முதன் முதலாக முன்வைத்தனர். 1926 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவ இளைஞர் சங்கம் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயக்காவால் சமகால அரசியல் நிலை பற்றிச் சிறப்புரையாற்ற அழைத்து இருந்தது.
அச்சமயத்தில் இலங்கை கரையோரச் சிங்களவர், கண்டிச் சிங்களவர், இலங்கைத் தமிழர் ஆகியோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கள் மொழி, கலாசாரம் ஆகிய துறைகளிலே தங்கள் தனித்துவத்தைப் பேணிக் கொண்டார்கள் என்றும் இதனடிப்படையில் ஒரு சமஷ்டியாட்சி முறையே இலங்கைக்குப் பொருத்தமானது என்றும் மத்திய மயமான ஆட்சி முறை ஒவ்வாதது என்றும் அவர் தனது உரையிலே குறிப்பிட்டார். ஆயினும், அக்காலத்துத் தமிழ் அரசியல்வாதிகள் இக்கருத்தினைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவில்லை.
அதற்குப் பின் இரு தடவைகள் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குள் பிரித்தானிய அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமித்திருந்த போது அதற்குச் சாட்சியமளித்த கண்டிப் பிரதிநிதிகள் இலங்கையில் ஒரு சமஷ்டியமைப்பை ஏற்படுத்த வேண்டுமென வாதிட்டார்கள்.
அவ்வாறு அமைக்கப்படும் ஆட்சி முறையானது கரையோரச் சிங்களவர் வாழும் தென்மேற்குப் பகுதி, கண்டிச் சிங்களவர் வாழும் மலைநாட்டுப் பகுதி, இலங்கைத் தமிழர்கள் வாழும் வட கிழக்கு மாகாணங்கள் ஆகியன அரசின் மூன்று பிராந்தியங்களாக அமைய வேண்டுமென வாதிட்டார்கள். அவர்கள் இந்தக் கோரிக்கையை இரு தடவைகள் முன்வைத்தார்கள்.
முதன் முதலாக டொனமூர் ஆணைக்குழு வினரிடமும் இரண்டாம் தடவையாகச் சோல்பரி ஆணைக் குழுவினரிடமும் முன்வைத்தார்கள். ஆயினும், தூரநோக்கற்ற அக்காலத் தமிழ்த் தலைமை இவற்றில் நாட்டம் கொள்ளவில்லை. பிரதேச அடிப்படையிலான ஆட்சியமைப்பை ஏற்படுத்த வேண் டுமென்ற சிந்தனை அவர்களிடம் இருக்கவில்லை. ஒற்றையாட்சியில் சமபல பிரதிநிதித்துவம் மூலமாகச் சிறுபான்மையினருக்குக் காப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் உணர்ச்சி பூர்வமான வாதமாக இருந்தது.
ஆனால், அவர்களுடைய அந்த வாதங்களைப் பிரித்தானிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் நிராகரித்து விட்டன. எனினும், டொனமூர் ஆணைக் குழுவினர் மாகாண சபைகளை அமைக்க வேண்டும் என்ற யோசனையைத் தமது பரிந்துரையிலே முன்வைத்தனர். அந்த யோசனையை எவரும் பொருட்படுத்தவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதிலும் இலங்கையிலுள்ள சனப்பரம்பலின் அடிப்படையில் இந்நாட்டில் மூன்று பெரும் பான்மை இனங்கள் இருப்பதாகப் பிரித்தானிய அரசாங்கங்கள் கருதின. உத்தியோக பூர்வமான அறிக்கைகளிலும் அது வலியுறுத்தப்பட்டது. கரையோரச் சிங்களவர், கண்டிச் சிங்களவர், இலங்கைத் தமிழர் ஆகியோர் பெரும்பான்மைச் சமுகங்கள் என்று கொள்ளப்பட்டனர். எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தனியான தேசிய இனம் என்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டிருந்தது.
பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம்
1958 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் பயனாக ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அது பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் என்று சொல்லப்படும். அதில் கீழ்வரும் அம்சங்கள் அடங்கியிருந்தன.
01. தமிழ், தேசியச் சிறுபான்மையினரின் ஆட்சி மொழி ஆகவேண்டும்.
02. வடகிழக்கு மாகாணங்களில் பிராந்திய சபைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
03. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், நிலப்பங்கீடு, நீர்ப்பாசனம், கைத்தொழில், மீன்பிடித் தொழில், வீடமைப்பு முதலான பிரதான துறைகளில் அதிகாரம் பிராந்திய சபைகளுக்கு வழங்கப் படும்.
04. பாராளுமன்ற அங்கத்தவர்கள், நகர சபைத் தலைவர்கள், மாநகர சபைத் தலைவர்கள், பிரதேச சபையின் அங்கத்தவர் களாக இருப்பர். இந்தப் பிரதேச சபைகள் விரும்பினால் ஒன்றாக இணைந்துகொள்ளலாம்.
இதனை நடைமுறைப்படுத்தினால் நாடு பிரியும் என்பதை வலியுறுத்தி மகாசங்கத்தின் ஒரு பகுதியி னரும் பிரபலமான ஊடகங்களும் U. N.P. தலைவர் J. R.ஜெயவர்த்தனாவும் கடுமையான இன உணர்வுகளைத் தூண்டும் பிரசாரங் களை மேற்கொண்டனர். அவற்றால் பீதியடைந்த பிரதமர் உடன் படிக்கையை ரத்துச் செய்வதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு தமிழருக்கு விரோதமான இனக் கலவரம் ஏற்பட்டது. இதன்பின் 1960 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு சுதந்திர கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா S. J. V. செல்வநாயகம் ஆகியோருக்குமிடையில் ஓர் இணக்கம் ஏற்பட்டது. அது கைச்சாத்தி டப்படாத வாய்மொழியிலான ஒரு ஒப்பந்தமாகும்.
தமிழர் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்கு பதிலாக பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தத்தை தனது கட்சி நடைமுறைப்படுத்தும் என சிறிமாவோ வாக்குறுதியளித்தார். தேர்தலில் சுதந்திரக்கட்சி 75 ஆசனங் களைப் பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றது. பாராளுமன்றம் கூடிய போது தேசாதிபதியின் கொள்கைப் பரிந்துரை தமிழிலும் வாசிக்கப்பட்டது.
இதனைத் தவிர, உறுதிமொழிகள் தொடர்பாகப் புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அது தமிழருக்கு எதிரான போக்கினைத் தீவிரப்படுத்தியது. நீதி பriபாலனமும் சிங்கள மொழியில் மட்டும் நடைபெற வேண்டும் என்ற சட்டத்தையும் நிறைவேற்றியது. இதனால், அரசாங்கத்தின் அரச கரும மொழிச் சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் சாத்வீகப் போராட்டங்களை நிகழ்த்தினார்கள். அரசாங்கம் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் முலம் எதிர்ப்பியக்கத்தை அடக்கியது.
இந்திய இலங்கை உடன்படிக்கை 1987
இதற்குப் பின் 29 வருடங்கள் சென்றதும் தமிழரின் நிலைமை ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றது. 1970 களில் பல புதிய தமிழ் இளைஞர் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தன. அவற்றை ஒடுக்க அரசாங் கங்கள் மேற்கொண்ட அடக்குமுறையும் ஜனநாயக விரோதமான மனித உரிமை களை மீறிய சட்டங்களும் வெளிநாடுகளின் கவனத்தைப் பெற்றன.
அப்பொழுது அதிக சக்தி வாய்ந்தவரான இந்திராகாந்தி இந்தியப் பிரதமராக இருந்தார். இலங்கையில் இனங்களுக்கிடையில் அமைதியும் சமத்துவமும் ஏற்படுத்தக் கூடிய ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடாகும்.
அந்தத் தீர்வு இலங்கையின் ஐக்கியத்தைப் பேணக் கூடிய நிலையில் அமைய வேண்டும் எனவும் கூறினார். 1984 இலே அவர் அகால மரணமடைந்த பின்பு அவரின் புதல்வரான ராஜீவ்காந்தி இந்தியப் பிரதமர் ஆனார்.
இலங்கை தொடர்பாகத் தாயார் கடைப் பிடித்த கொள்கையைப் பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு அவருக்கிருந்தது. அந்தக் கட்டத்தில் இலங்கையிலே உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை அழித்துவிட்டார்கள்.
போர் அவர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான நேரடியான போராகியது.
அமெரிக்கா போன்ற பலம்பொருந்திய மேற்குலக நாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பிரதே சத்தினை உக்கிரமான போரின் மூலமாக அரச படைகள் கைப்பற்றின. அந்தப் போரிலே ஏறக்குறைய 8,000 பொதுமக்கள் மறைந்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து அரச படைகள் யாழ்ப்பாண நகரத்தை நோக்கி முன்னேற பாரிய முயற்சிகளை மேற் கொண்டன. அந்த நகரத்தைக் கைப்பற்றுமிடத்து 50,000 பொதுமக்கள் வரை உயிரிழக்க நேரிடும் என பதவியில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இவ்வாறு ஏற்பட விருந்த பெருவிபத்தினைத் தடுப்பதற்காகவே இந்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுப் போரை நிறுத்தியது.
இலங்கை அரசாங்கத்தோடு இந்தியா 1987 இல் ஓர் உடன்படிக்கையை உருவாக்கியது.
அதன் முன்னுரையிலே கீழ்வரும் விடயங்கள் அழுத்தமாகக் கூறப்பட்டன.
01. இலங்கை, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகியோர் வாழ்கின்ற நாடு. அவர்கள் எல்லோரும் தங்கள் மொழி களையும், சமய நெறிகளையும், பண்பாட்டு மரபுகளையும் பேணிக்காப்பதற்கு உரிமையுடையவர்கள்.
02. சிங்களமும், தமிழும் இலங்கையின் ஆட்சிமொழிகளாக அமையும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகும்.
03. வட கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களுடைய வரலாற்று வதிவிடம்.
அங்கு அவர்கள் காலாகாலமாக வேறு மக்களோடும் கூடிவாழ்ந்துள்ளனர்.
04. வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஓர் ஆண்டிற்குள் இந்த இணைப்பு தொடர்பாகக் கிழக்கு மாகாணத் தில் ஒரு சர்வஜன வாக்குரிமை நடத்தல் வேண்டும்.
05. இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குதல்.
அடிப்படையில் இவ் உடன்படிக்கை 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ள சிங்கள மயமாக்கம் தொடர்பான அம்சங்களை நீக்குவது போல அமைந்தது.
இவ் உடன்படிக்கை இலங்கை ஒரு பல்லினச் சக பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாடு என்பதும் அவர்கள் அனை வரும் இலங்கை அரசியலிற் பங்குபெறவும் மனித உரிமைகளின் அடிப்படையில் தங்கள் உரிமைகள் அனைத்தையும் பேணிக் கொள்வதற்கும் தகுதியுடையவர்கள் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. அமெரிக்கா, சோவியத் யூனியன் போன்ற வல்லரசு நாடுகளும் அதன் அடிப்படை அம்சங்களை ஒப்புக் கொண்டன. இடைக்கால நிர்வாக மொன்றை உருவாக்குவதற்கு ராஜீவ்காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. உத்தேச இடைக்கால நிர்வாக சபையில் உள்ள 15 அங்கத்த வர்களில் 12 பேரையும் அவர்களே நியமிப்பார்கள் என்றும் சபையின் தலைவரை அவர்கள் சிபாரிசு செய்யும் மூன்று பேர்களிடையே ஒருவரை அரசாங்கம் நியமிக்கும் என்றும் இரு அரசாங்கங்களும் ஒப்புக் கொண்டன.
70,000 இந்திய இராணுவத்தினர் இலங்கையிலே தங்கி இருந்த காலத்தில் இடைக்கால நிர்வாகத்தைத் தமிழர் தரப்பினர் ஏற்றுக்கொண்டிருப்பின் வட கிழக்குப் பிராந்தியத்தில் எல்லா ஆட்சி அதிகாரங்களையும் தமிழ் பேசும் மக்களின் சார்பில் அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது.
ஆனால், தமிழ்த் தரப்பினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளைப் பொறுத்தவரையில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் பாரதூரமானவை. மாகாண சபைகள் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடைப்படையில் உருவாக்கப்பட்டன.
மாகாணங்களின் நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் அதிகாரங்கள் மூன்று தொகுதிகளாக வகை செய்யப்பட்டன. மாகாண சபைகளின் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ்வரும் விடயங்கள், பொது விடயங்கள் என்று மூன்று பகுதிகளாக அமைந்தன. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சொற்பமானவை. அவை அரசாங்கத்தால் ரத்துச்செய்யக் கூடியவை.
ஆயினும், தெரிவுசெய்யப்பட்ட அங்கத்த வர்களையுடைய மாகாண சபைகளை உரு வாக்கியமையும் பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவுடைய ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதற்கு வகை செய்தமையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
ஆயினும், தமிழர் தரப்பில் அரசாங்கத்தோடு போர் புரிந்த பலமான இயக்கமானது மாகாண சபை நிர்வாகத்திற் பங்குகொள்ள மறுத்ததனால் வட கிழக்கு மாகாண சபை உறுதியாகச் செயற்பட முடியவில்லை.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவொரு மாகாண சபையினையும் தனியாகக் கலைக்க முடியாது என்றும், எல்லா மாகாண சபைகளையும் ஏககாலத்திலேயே கலைக்க வேண்டுமெனவும் சொல்லப்பட்டமை வர வேற்கத்தக்க சட்ட வரையறையாகும். ஆயினும், 1989 இல் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிய தமிழ்ப்பிரதிநிதிகள் ஏனையோருடன் கூடி மூன்றில் இரண்டு பெரும்பான் மையுடன் வட கிழக்கு மாகாண சபையைக் கலைப்பதற்கு துணை புரிந்தனர்.
சட்டத்தில் வழங்கப்பட்ட காப்பீட்டையும் நிராகரிப்பதற்கு எம்மவர்களே துணையாக இருந்துவிட்டனர். இலங்கையிலே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மிகக்குறைவானவை என்பதனை அக்கால இந்திய அரசாங்கம் உணர்ந்து கொண்டது.
இந்தியச் சிந்தனையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் ஜனநாயக ஆட்சி நிலவுகி ன்ற நாடுகளின் அரசாங்கங்களும் இக்கால கட்டத்தில் சமஷ்டி லமான ஓர் அரசியல மைப்பே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வாகும் என்று கருதத் தொடங்கினார்கள்.
தென்னிலங்கையில் புதிய அரசியற் கட்சியான மகாஜனக் கட்சியை உருவாக்கிய, மக்களின் அபிமானத்தைப் பெற்ற முதன்மை நடிகரான விஜயகுமாரதுங்க இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டார். தீவிரமான இனவா திகளினால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இருபதாம் நூற்றாண்டின் முடிவிலே புதிய தலைமுறையினர் இலங்கையிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளினது தலைமைப் பதவியைப் பெற்றனர்.
இவர்கள் இருவரும் ஒரு சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாட்டம் கொண்டிருந்தனர்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் மூலம் சந்திரிகா பண்டாரநாயக்க பிரதமரானார். பின்பு நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார். பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அமுலாக்கப் பட்ட யுத்த நிறுத்தம் நெடுங்காலம் நீடிக்கவில்லை. மிகவும் சிக்கலான, உணர்ச்சிபூர்வமாகி விட்ட பிரச்சினைகள் பற்றி சுமூகமாகப் பேசக் கூடிய இராஜதந்திர முறையிலான நுட்பங்கள் இரு சாராருக்கிடையிலும் காணப்பட வில்லை.
1996 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புதிய அரசியலமைப் பிற்கான நகல் திட்டம் பல முன்னேற்றமான அம்சங்களைக் கொண்டிருந்தது.
இறைமை எல்லோருக்குமுரியது. இந்த ஆவணத்திலே தான் இறைமையானது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்ற சிந்தனை ஒப்புக்கொள்ளப்பட் டது. அது மக்களின் சார்பில் தெரிவுசெய்யப் பட்ட ஜனாதிபதியாலும் பாராளுமன்றத்தினாலும் பிராந்திய சபைகளினாலும் பிரயோ கிக்கப்படுமென்று சொல்லப்பட்டது.
பெரும்பான்மையினர் ஆளும் இனம் சிறு பான்மையினர் ஆளப்படுவோர் என்ற நிலைக்குப் பதிலாக, அனைத்து இனங்களும் சமத்துவமானவை என்ற கருத்து இதில் அடங்கியிருந்தது.
தென்னாபிரிக்காவிலுள்ள சமஷ்டி முறையைப் போன்ற ஆட்சியமைப்பை ஏற்படுத்துவது, அந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இலங்கை இறைமையுடையது என்றும் பிராந்தியங்களின் இணைப்பான ஐக்கியப் படுத்தப்பட்ட நாடு என்றும் அதிலே சொல்லப்பட்டது. இந்த யோசனை இலங்கை அரசியலமைப்பு வரலாற்றில் முதன் முதலாக அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கப் பட்ட சிந்தனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிராந்தியங்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள்
மாகாண சபை அமைப்பிலுள்ள பலவீனங்களை நீக்குவதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டன. 13 ஆம் அரசியல மைப்பு திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களைப் பற்றிச்சொல்லப்படுகின்ற மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்திற்கும் பொதுவானவை என்ற அதிகாரங்கள் பிராந்திய சபைக்கு வழங்குவது என்றும் அதிலே சொல்லப்பட்டது.
காணி முதலாக பிரதானமான எல்லா விடயங்களிலும் பிராந்திய சபைகள் அதிகாரம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதில் அடங்கி யிருந்தன.
இந்திய மாநிலம் ஒன்றுக்குரிய எல்லா அதிகாரங்களையும் பிராந்திய சபைகள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தன.
பேச்சுவார்த்தையின் மூலம் மேலும் கூடுதலான வாய்ப்புக்களைப் பெற்றிருக்கக் கூடும்.
ஆயினும், அன்று பலம் கொண்டிருந்த தமிழர் தரப்பு இதனை முற்றாக நிராகரித்து விட்டது. ஊடகங்களும் இந்த அம்சங்கள் பற்றி எதனையும் வெளியிடவில்லை.
பொது மக்களும் இவை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கவில்லை.
சர்வதேச முயற்சிகளால் ஏற்பட்ட ஒஸ்லோ பிரகடனம்
2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த புதிய அரசாங்கம் (ஐக்கிய தேசிய முன்னணி) இலங்கையிலே போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு உடன்பட் டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற சர்வதேச முயற்சியின் விளைவாக நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகள் ஏற்பட்டன. அவற்றின் விளைவாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத் தின் சார்பில் ஒஸ்லோ பிரகடனத்திற் கையொப்பமிட்டார்.
சமஷ்டி அமைப்பு முறை மூலமாக இரு சாராரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண் பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இணங்கினார். அதன் விளைவாகப் போர் நிறுத்த உடன்படிக்கையும், போர் நிறுத்தத் தைக் கண்காணிப்பதற்கு வெளிநாட்டு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன.
ஆயினும், பேச்சுவார்த்தைகளில் இடைக்கால நிர்வாக அமைப்புத் தொடர்பாக ·ரண்பாடுகள் தோன்றின.
2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வட கிழக்கு மாகாணங்களில் பங்குகொள்ளாதமையினால் ரணில் விக்கிரமசிங்க தோல்விய டைந்தார். ஒஸ்லோ பிரகடனம் முடிவடைந்தது.
அதன் பாரதூரமான விளைவுகள் யாவரும் அறிந்ததே. கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போர் சடுதியாக முடிவுற்றதும் 1987 இல் உருவாகிய இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலமாக ஏற்பட்ட மாகாண சபை அமைப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. ஜனநாயக முறையான அரசியலும் பொதுமக்களின் உணர்வுகளும் கவனத்தில் கொள்ளப்படாததன் விளைவாகவே இந்த விபரீதம் ஏற்பட்டது போலும்.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் அரசியற் குறைபாடுகளைப் போக்குவதற்கும் மனித உரிமையான தங்கள் சுயாட்சி உரிமையை ஐக்கிய இலங்கைக்குள் நிலைநாட்டவும் புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புத்திசாதுரியமும், புரிந்துணர்வும் நெகிழ்ச்சிப் போக்கும் இருசாராரிடமும் வேண்டற்பாலது. 1994 முதல் 2005 வரை யுள்ள காலப் பகுதியில் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி, தமிழ் பேசும் மக்களுக்கு சுயாட்சியுரிமை வழங்குவது ஜனநாயக பாரம்பரியங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் மதிப்பளிப்பவர்களின் கடமை ஆகும்.
சி.பத்மநாதன்
தகைசார் பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக