வெள்ளி, 15 அக்டோபர், 2010

“வெள்ளைக்கொடிக்கு' விறுவிறுப்பான செய்திக்கான விருது கிடைக்கும் என நினைத்து விண்ணப்பித்தேன்; கிடைக்காமையால் இதயம் வலிக்கின்றது

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் வழங்கப்படுகின்ற ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான செய்திக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த விறுவிறுப்புச் செய்திக்கான விருது கிடைக்கும் என நினைத்து விண்ணப்பித்திருந்தேன். எனினும் அந்த விருது கிடைக்கவில்லை. அதனால் எனது இதயம் வலிக்கின்றது என்று “சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசியர் பிரட்ரிகா ஜான்ஸ் தெரிவித்தார். கட்டுரையின் இறுதிப் பந்தியில் வசனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பந்திகளில் மாற்றம் செய்யப்பட்டதா என்பது தொடர்பில் எனக்கு ஞாபகம் இல்லை; என்னிடம் பதிவுகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தெளிவுபடுத்தப் பட்டிருக்கும் கட்டுரைக்கு விருது கிடைக்குமா? என பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்கே சாட்சியிடம் கேள்வியெழுப்பினார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் முதலாவது சாட்சியிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெவ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின் போதே பிரட்ரிகா ஜான்ஸ் மேலும் தெவிக்கையில், பிரதிவாதியின் சட்டத்தரணி: இந்த நீதி மன்றத்தில் இதற்கு முன்னர் சாட்சியமளித்தீர்களா?

முதல் சாட்சி : ஆம்.

கேள்வி:அன்று சாட்சியமளிக்கும் போது பதிவுக்கருவியை எடுத்துச்செல்லவில்லை என்று தெரிவித்திருந்தீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: உங்களின் அனுமதியின்றியே நகரப்பதிப்பு அச்சுக்கு ஏற்றப்பட்டது?

பதில்: அனுமதியின்றி எனக்கூறவில்லை. தாமதிக்குமாறு கோரியிருந்தேன்.
நான் இன்னும் சில விடயங்களை சேர்க்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தேன்.

கேள்வி: அனுமதியின்றி என நேற்று (நேற்று முன்தினம்) சாட்சியமளிக்கும் போது கூறவில்லை?

பதில்: நிச்சயமாக.

கேள்வி: அனுமதியளித்ததாக?

பதில்: ஆம்.

கேள்வி: கட்டுரைகள் முழுமையுற்ற பின்னர் தானே அச்சில் ஏற்றுவதற்கு அனுமதியளிக்கப்படும்.

பதில்: தேவையில்லை.

கேள்வி: கட்டுரை முழுமையுறுவதற்கு முன்னர் சண்டே லீடரில் அச்சில் ஏற்றப்படுமோ?

பதில்: கூடுதலான நேரத்தில் முதலாவது பதிப்பு அச்சில் ஏற்றப்படும். மாற்றங்கள் அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பிந்திய பதிப்பில் அவை மேற்கொள்ளப்படும்.

கேள்வி: கேள்விகளில் முரண்பட்டுக் கொள்ள வேண்டாம், நான் தெளிவாக கேட்கின்றேன். முதலாவது பதிப்பு ஆசியர் அனுமதியளித்த பின்னர் தானே அச்சில் ஏற்றப்படும்.

பதில்:கட்டுரை அல்லது கதை அரைவாசியாக இருக்கலாம். அல்லது அதில் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் அனுமதி கிடைத்தவுடன் அச்சில் ஏற்றப்படும்.

கேள்வி: நீங்கள் அனுமதியளித்த பின்னரா அச்சடிக்கப்பட்டது?

பதில்: ஆம்.

கேள்வி: அனுமதியை வாபஸ் பெற்றுக் கொண்டால் மட்டுமே அச்சடிப்பது நிறுத்தப்படும்?

பதில்: ஆம் .

கேள்வி: அச்சிலேற்றுவதை தாமதிக்குமாறு வாய் மூலமாகவா கோரினீர்கள்?

பதில்: தொலைபேசியூடாக.

கேள்வி: கணனிமயப்படுத்தப்பட்ட கறுப்பு வெள்ளை பிரதி கிடைக்கும், ஒப்பு நோக்கப்படும், திருத்தங்கள் இருப்பின் அவை மேற்கொள்ளப்படும். மீண்டும் கறுப்பு வெள்ளை பிரதி உங்களுக்கு கிடைக்கும்?

பதில்: பொதுவாக ஆம், ஆம், ஆம், ஆம்.

கேள்வி: பின்னர் தான் அச்சடிக்கப்படும்?

பதில்: ஆம்.

கேள்வி: கறுப்பு வெள்ளை பிரதியிலும் பிரதம ஆசிரியர் கையெழுத்து இடல் வேண்டும்.

பதில்: ஆம்.

கேள்வி: மாற்றங்கள் செய்யப்படுமாயின் கையெழுத்து இடப்பட்ட கறுப்பு வெள்ளை பிரதி மீளவும் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை?

பதில்: இல்லை.

கேள்வி: அச்சடிப்போர் பிழைவிடவில்லை?

பதில்: இல்லை.

கேள்வி: மனக்குழப்பமான நிலை என்பது நீங்களாகவே உருவாக்கிக் கொண்ட ஒன்றாகும்?

பதில்:தாமதிக்குமாறு கோரியிருந்தேன்.
எனினும் அச்சடிக்கப்பட்டுவிட்டது.

கேள்வி: அச்சு ஏறிக்கொண்டிருக்கின்ற வேளையில் மிகத்தெளிவான பத்திரிகையின் முதல் பிரதி ஆசியருக்கு வழங்கப்படும்? மற்றுமொரு பிரதி நிர்வாகத்திற்கு வழங்கப்படும் அப்படித்தானே?

பதில்: ஆம், அப்படித்தான்.

கேள்வி: மிக முக்கியமான, குழப்பகரமான கட்டுரை ஊடகத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் எனக்கேள்வி பட்டிருந்தீர்களா?

(இதன்போது குறுக்கிட்ட பிரதி சொலி சிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார, சாட்சியினால் கூறப்பட்டதற்கு அப்பால் குறுக்கு கேள்விகளை கேட்கமுடியாது என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்)

இதனால் சாட்சி அக்கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனம் காத்தார்.

கேள்வி:முதல் பிரதியிலேயே திருத்தங்களை மேற்கொள்ள முடியாதா?

பதில்: பார்வையிடுவதற்கு அனுப்புவார்கள். ஆனால் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.

கேள்வி: நீங்கள் , பல ஊடகங்களில் கடமையாற்றியிருக்கின்றீர்கள். அந்த ஊடகங்களில் எல்லாம் அவ்வாறான முறைமை கடைப்பிடிக்கப்படும்?

பதில்: நான் பல ஊடகங்களில் கடமை யாற்றியிருக்கின்றேன். ஆனால் ஆசிரியராக இருக்கவில்லை.

கேள்வி: பத்திரிகை. ஆசிரியரின் கைகளுக்கு கிடைக்கும் போது அது ஆசிரியரின் விருப்பத்திற்கு ஏற்றவகையில் அமையப் பெற்றுள்ளனவா என்பதனை பார்வையிடுவதற்குதானே?

பதில்: இல்லை,

கேள்வி: முதலாவது பிரதி உங்களுக்கு கிடைத்ததா? அதில் முதலாவது மற்றும் நான்காம் பக்கங்களை புரட்டிப்பார்த்தீர்களா?

பதில்: ஆம், ஆம்.

கேள்வி:ஊடகவியலாளர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையா?

பதில்: திறந்து பார்த்தபோது இல்லை.

கேள்வி:உங்களுக்கு தெரியவில்லையா?

பதில்: ஆம்.

கேள்வி:என்ன செய்தீர்கள்?

பதில்:முதலாவது பதிப்பில் மாற்றமுடியாது, வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதற்காக ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு விட்டன?

கேள்வி: கட்டுரையின் உள்ளடக்கம் மற்றும் ஜெனரல் சரத்பொன்சேகா கூறியதற்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என நினைக்கவில்லையா?

பதில்: இல்லை.

கேள்வி:பிழையான அர்த்தத்துடன் வெளியாகிவிட்டதே என நினைக்கவில்லையா?

பதில்: முதலாவது பதிப்பு என்பதுடன் இரண்டாவது பதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைத்தேன்.

கேள்வி:மூன்றாவது தரப்பினர் பற்றி கட்டுரையின் இறுதிப்பந்தியில் குறிப்பிட்டுள்ளீர்கள் என்கின்றீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: ஜெனரல் சரத்பொன்சேகா மூன்றாவது தரப்பினர் தொடர்பில் கூறியிருந்த விடயத்தை மக்கள் தெரிந்து கொள்வதற்காக கட்டுரையில் எந்த பந்தியில் குறிப்பிட்டுள்ளீர்கள்?

பதில்: முதலாவது பதிப்பில் மூன்றாவது பந்தியில்.

கேள்வி:2010 ஒக்டோபர் 12 ஆம் திகதி சாட்சியமளித்தீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி:சரத்பொன்சேகா கேள்விப்பட்டதை அந்த கட்டுரையில் எந்த இடத்தில் எழுதியிருக்கின்றீர்கள் என்று தெரியுமா?

பதில்: கடைசி பந்தியில் இருப்பதாக கூறியது ஞாபகம் இருக்கின்றது.

கேள்வி: நீதிமன்றத்தின் பதிவுகளில் நம்பிக்கை இருக்கின்றதா?

பதில்: ஆம்.

கேள்வி: நான்காவது பக்கத்தில் மட்டுமே என்று கூறினீர்கள். முதலாவது பக்கத்தில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:(சாட்சி மௌனமாகவே இருந்து விட்டார்)

கேள்வி: நீதிமன்றத்தை வேண்டு மென்றே குழப்புவதற்கு முயற்சிக்கின்றீர்கள்?

பதில்: நான் அப்படியானவள் இல்லை.

கேள்வி: சாட்சியமளிப்பு ஆங்கிலத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முதலாவது பக்கத்தில் ஊடகவியலாளர் பற்றி கூறவில்லை.

பதில்: ஆம்.

கேள்வி: இந்த கேள்வி இரண்டாவது தடவையாக கேட்கப்படுவதாவது ஞாபகம் இருக்கின்றதா?

பதில்: ஆம்.

கேள்வி: முதலாவது பக்கத்தில் கூறவில்லை? நான்காவது பக்கத்திலேயே கூறி யிருக்கின்றீர்கள்?

பதில்: ஆம், ஆம்.

கேள்வி: சரத்பொன்சேகாவுடன் டிசம்பர் 12 ஆம் திகதி தொடர்பினை ஏற்படுத்த வில்லை எனில் மறுநாள் 13 ஆம் திகதி பிரசுரித்திருக்கமாட்டீர்கள். அப்படித்தானே?

பதில்: ஆம்.

கேள்வி: 20 ஆம் திகதி பிரசுத்திருப்பீர்கள் என்றால் ஊடகவியலாளர் பற்றி குறிப்பிடாத முதலாவது பதிப்பில் குழப்பகரமான நிலைமை இருப்பதாக தெரிந்து கொண்டா திருத்துவதற்கு முயற்சித்தீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: பிந்திய பதிப்பிலும் குழப்பம் இருந்தமையினாலா?

பதில்: இல்லை.

கேள்வி: நகரப்பதிப்பிலும் பிந்திய நகரப்பதிப்பிலும் ஒரே இடத்திலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?

பதில்: இறுதிப் பந்தியில்.

கேள்வி: இறுதிப்பந்தியில் மட்டுமா?
அல்லது வசனத்திலா? அல்லது ஏனைய இடங்களிலா?

பதில்: இறுதி பந்தியில், வசனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பந்திகளில் மாற்றம் செய்யப்பட்டதா? என்பது தொடர்பில் எனக்கு ஞாபகம் இல்லை. என்னிடம் பதிவுகளும் இல்லை.

கேள்வி: ரஜீவ் விஜயசிங்கவினால் (பாரா ளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் அமைச்சின் முன்னாள் செயலாளருமாவார்) எழுதப்பட்ட கடிதம் பற்றி குறிப்பிட்ட கட்டுரைக்கு கீழே வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

பதில்: ஆம். சண்டே லீடர் பத்திரிகையில் குறிப்பிட்டப்பட்டிருந்ததை தெளிவுபடுத்தியிருந்தார். வெள்ளைக்கொடியும் இல்லை விசாரணைக்கு தேவையும் இல்லை என குறிப்பிட்டிருந்தது.

கேள்வி:பேராசியர் ரஜீவ் விஜயசிங்கவின் கடிதம் பிலிப் ஹல்ஸ்டனுக்கு வழங்கிய பதிலாகவே இருந்தது?

பதில்: ஆம்.

கேள்வி: வேறு தரப்பினரும் தெளிவுபடுத்தியிருந்தனர், அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது?

பதில்: ஆம். அரச தரப்பில் ரஜீவ் விஜய சிங்க தெளிவுபடுத்தியிருந்தார்.

கேள்வி: ஐக்கிய தேசியக்கட்சியினால் அவ்வப்போது உங்களுடைய காரியாலயத்திற்கு பணம் வழங்கப்பட்டதா?

பதில்: நேரத்திற்கு நேரம் இல்லை. ஒரே தடவையில்.

கேள்வி: 10 இலட்சம் ரூபாய் 11 வாரத் திற்கு அப்படித்தானே?

பதில்: ஆம்.

கேள்வி: மலிக் சமரவிக்ரம ஒருங்கிணைப்பாளராக இருந்தார்?

பதில்: இல்லை, பலர் இருந்தனர். எனினும் எனது கட்டுரையில் குறிப்பிடவில்லை

கேள்வி: பணம் கொடுக்கும் வேளையில் மலிக் சமர விக்ரமவும் இருந்தாரா?

பதில்: ஆம்.

கேள்வி: நீங்களும் பணம் பெற்றுக் கொண்டீர்களா?

பதில்: இல்லை.

கேள்வி: பண விவகாரம் தொடர்பில் யார் கொடுத்தது. எவ்வாறு கிடைத்தது என கட்டுரை எழுதியிருந்தீர்கள் தானே?

பதில்: ஆம், ஆம்.

கேள்வி: பணம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் ஞாபகம் இருக்கின்றதா?

பதில்: ஞாபகம் இல்லை.

கேள்வி: கட்டுரையின் பிரகாரம் மலிக் சமரவிக்ரமவும் இருக்கின்றார்.

பதில்: ஆம்.

கேள்வி: அவளின் கதை தேவையில்லை என மலிக் சமரவிக்ரம கோரியிருந்தாரா?

பதில்: நிறுத்துமாறு கோரவில்லை.
எனினும் சண்டே லீடர் பத்திகையின் வியாபாரத்திற்கு உதவுவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஏனையோரிடம் கோரியிருந்தார்.

கேள்வி: சரத்பொன்சேகா தொடர்பான கட்டுரை முக்கால் பக்கத்தில் இருக்கின்றது.
அதற்கு கீழான கால் பக்கத்தில் இராணுவ ஆட்சி இருக்கின்ற நாட்டின் அச்சுறுத்தல் தன்மை தொடர்பானது?

பதில்: ஆம். அப்படித்தான்.

கேள்வி: “தலைக்கு தலை' என்ற கட் டுரை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் தொடர்பானது?

பதில்: ஆம்.

கேள்வி: இந்த கட்டுரையில் கூடுதலான இடம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என தயவு செய்து கூறமுடியுமா?

பதில்: வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு

கேள்வி: ஆசியர் பீடத்தின் கொள்கை சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பது தானே?

பதில்: ஆம்.

கேள்வி: பிரதான வேட்பாளர்கள் பற்றி எழுதுகின்ற போது ஒரு வேட்பாளருக்கு கூடுதலான இடம் வழங்கப்பட்டுள்ளதா?

பதில்: ஆம்.

கேள்வி: சரத்பொன்சேகாவிற்கு வழங்கப்படவில்லை?

பதில்: ஆம்.

கேள்வி: வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான கட்டுரை உங்களுடைய ஊடக வாழ்க்கையில் மைல்கல் என நினைத்தீர்களா?

பதில்: இல்லை. குழப்பகரமானது என நினைத்தேன். ஆனால் தனிப்பட்ட ரீதியில் முக்கியமானது என நான் கருதவில்லை.

கேள்வி: எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை?

பதில்: இல்லை, ஏனையோர் அறிக்கையிடுவது போலவே நானும் அறிக்கையிட்டேன்.

கேள்வி: அந்த கட்டுரைக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் விருது கிடைத்ததா?

பதில்: விருது கிடைக்கவில்லை.

கேள்வி: இதயம் வலித்ததா?

பதில்: இரண்டு கட்டுரைகளை அனுப்பி யிருந்தேன்.தனிப்பட்ட ரீதியில் எனக்கு இதயம் வலிக்கவில்லை. பத்திரிகைக்கு கிடைக்கவில்லை என்பதனையிட்டு வருத்தமடைந்தேன்.

கேள்வி: உங்களுடைய பெயரில் தானே அனுப்பினீர்கள்?

பதில்: சண்டே லீடர் பத்திகைரியின் பெயருக்கு.

கேள்வி: விருதிற்காக உங்களுடைய பெயரில் தானே அனுப்பினீர்கள்?

பதில்: இல்லை பத்திரிகையின் பெயரில்.

கேள்வி: இதயம் வலித்ததா?

பதில்: ஆம்.

கேள்வி: ஆண்டின் சிறந்த விறுவிறுப்பான செய்திக்காக விண்ணப்பித்தீர்கள்?

பதில்: ஆம், அப்படித்தான்.

கேள்வி:ஆனால், சிறந்த விறுவிறுப்பான செய்திக்காக விருது கிடைக்கவில்லை என்பதற்காக 2010 ஆகஸ்ட் மாதம் நடுவர் குழுவை விமர்சித்து கட்டுரை எழுதினீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: அந்த கட்டுரைக்குள் “நீலச்சடை அணிந்திருக்கும் பெண் பிசாசு' போன்ற படத்தையும் இணைத்திருக்கின்றீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: நீங்கள் தானே எழுதியிருக்கின்றீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: விருது கிடைக்காமையினால் நடுவர் குழுவை விமர்சித்து எழுதினீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: நடுவர் குழுவில் யார் யார் அங்கம் வகித்திருந்தனர் என்று தெரியுமா?

பதில்: லலித் அழஹகோன், அமல் ஜய சிங்க ஏனையோரின் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை.

கேள்வி: அவர்கள் ஊடகத்துறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களா?

பதில்: ஆம், கேள்வி: ஆண்டின் விறுவிறுப்பான செய்திக்காக விருது கிடைத்த பத்திரிகையை விமர்சிக்காமல் அந்த பத்திரிகையின் ஆசிரியரை விமர்சித்தீர்கள்?

பதில்:ஆம்.

கேள்வி:அது எந்த பத்திரிகை?

பதில்: சண்டே ரைம்ஸ்.

கேள்வி: விருது கிடைத்ததோ பத்திரிகைக்கு ஆனால் நீங்களோ ஆசியரை விமர்சித்தீர்கள். இது பண்பாடா?

பதில்: இல்லை, பண்பாடு இல்லை.

கேள்வி: நடுவர் குழு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் அழுத்தத்திற்கு முகம் கொடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான கட்டுரையை பின்னர் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.

பதில்: ஆம்.

கேள்வி: தெளிவுப்படுத்திய கட்டுரைக்கு விருது கிடைக்குமா?

பதில்: கட்டுரை மறுக்கப்படவில்லை.
அத்துடன் கேட்டு விலக்கிக்கொள்ளப்படவும் இல்லை.

கேள்வி: ஆனால், தெளிவுபடுத்தப்பட டது தானே?

பதில்: ஆம்.

கேள்வி: உங்களுடைய கொள்கையில் இருக்கின்ற பெண்ணா? நீங்கள் ?

பதில்: ஆம்.

கேள்வி: உங்களது கொள்கைக்கு இணங்காத எவரையும் பத்திரிகையை பயன்படுத்தி விமர்சனம் செய்வீர்?

பதில்: இல்லை, அப்படியில்லை.

இதனையடுத்து வழக்கின் விசாரணை இன்று வெள்ளிக்கிழமை காலை வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல