வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தனது தந்தையான செல்வதாசன் ஏரியல் தாக்குதலில் உயிர்இழந்தார். எனது தாயார் செல்வதாசன் சுகந்தி தோளில் காயமடைந்தார் இந் நிலையில் நானும் எனது தாயாரும் முகா மிற்கு அழைத்துச் செல்லப்பட் டோம். அங்கு வந்த இராணுவத்தினர் அம்மாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் அவரைக் காணவில்லை. எனது அம்மா உள்ளூராட்சி திணைக்களத்தில் பணியாற்றியவர். நான் தற்பொழுது பெரியம்மாவுடன் வசித்து வருகின்றேன் என சிறுமி கூறினார்.
வீடுகளை பார்வையிட முடியுமாயின் குடியமர ஏன் அனுமதிக்க முடியாது - மருதங்கேணி மக்கள் சுட்டிக்காட்டு
வீடுகளுக்குச் சென்று பார்வை யிடவும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடவும் அனுமதித்த இராணுவம் அங்கு மீள்குடியமர்வதற்கு மட்டும் கண்ணிவெடி உள்ளதாக கூறுவதற்கு காரணம் என்ன? என வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி மக்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேள்வியயழுப்பினார்கள்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுக் காலை வடமராட்சி கிழக்கு குடத்தனையில் நடைபெற்றது.இதன்போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சாட்சியமளிக்க வந்த மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். இதில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணியைச் சேர்ந்த மக்கள் தற்போது இடைத் தங்கல் முகாமில் உள்ள தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
இதில் விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தினர் வெற்றிலைக்கேணியை மீட்டெடுக்கும்வரை நாங்கள் எமது வீடுகளில் தங்கியிருந்தோம்.எனவே அப்பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பது ஏற்றுக்கொள் ளமுடியாது. அத்துடன் அண்மையில் எமது வீடுகளைச் சென்று பார்வையிடவும் ஆலயங் களுக்குச் சென்று வழிபடவும் இராணுவத் தினர் அனுமதி வழங்கினர். எனவே கண்ணிவெடிகள் இருந்தால் இரா ணுவத்தினர் அனுமதி வழங்குவார்களா? என ஆணைக் குழு உறுப்பினர்களிடம் மக்கள் கேள் வியயழுப்பினர். இதற்குப்பதிலளித்த ஆணைக் குழு உறுப்பினர்கள், இது தொடர்பில் யாழ். அரச அதிபரிடம் கலந்துரையாடி விரைவில் தீர்க்கமான முடிபை பெற்றுத்தருவோம் என்றனர்.
இவ்விசாரணையின் போது சாட்சியமளித்த திருமதி கமலேஸ்வரி,
எனது கணவர் தவக்குமார் பத்மநாதன் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். அவரின் இயக்கப் பெயர் விமல் மாஸ்ட்டர்.
எனது கணவர் விடுதலைப்புலிகள் அமைப் பில் இணைந்தபோது யுத்த காலத்தில் கால் ஒன்றையிழந்தார். அதன் பின் களப்பயிற்சி வழங்குபவராக அந்த அமைப்பில் இருந் தார். வன்னி இறுதி யுத்தம் முடிபடைந்த நிலை யில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வட்டுவாகலில் வைத்து இராணுவத் தினரிடம் சரணடைந்தார். எனினும் அதன் பின் அவர் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. எனவே எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என தனது குழந்தையுடன் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
சரணடைந்த புலி உறுப்பினர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில்!
வன்னி இறுதி யுத்தத்தின் பின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்து சரணடைந்தவர்களை இராணுவம் இரகசிய தடுப்பு முகாம்களிலும் வைத்துள்ளது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் பொதுமக்கள் சாட்சியமளித்தனர்.
இக் கருத்தை ஏற்றுக் கொண்ட ஆணைக் குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா, பதிவு செய்யபடாத தடுப்பு முகாங்களிலும் தாம் விசாரணைகளை மேற்கொள்வோம் எனப் பதிலளித்தார். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நேற்று கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செய லகப் பிரிவு மக்களின் சாட்சிகளை நெல்லியடி கலாசார மண்டபத்தில் பதிவு செய்தது.
இதன்போது சாட்சியமளித்த உதயபாஸ்கரன் பத்சலா என்ற தாயார் தெரிவிக்கையில்,
எனது மகள் உதயபாஸ்கரன் நிரோயினி (வயது 17) விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்று தமது அமைப்பில் உறுப்பினராக வைத்திருந்தனர். நான் இறுதியாக எனது மகளை 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி சந்தித்தேன். அதற்குப் பின் நான் இராணுவக் கட்டுப்பாட்டுக் குள் வந்துவிட்டேன். பின்னர் எனது மகள் 2009 ஆம் ஆண்டு ஏப் ரல் 20 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அவருடன் கல்வி கற்ற நண்பியயாருவர் என்னிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றில் முறைப்பாடு செய்தும் மகள் தொடர்பில் எதுவித தக வல்களுமில்லை. அத்துடன் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து முகாம்களுக்கும் சென்று பார்த்தபோது அங்கேயும் எனது மகள் இல்லை.ஆனால் எனது மகள் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.எனவே இராணுவம் இரகசியத் தடுப்பு முகா மில் எனது மகளை தடுத்துவைத்துள்ளது என கண் ணீருடன் தெரிவித்தார்.
காயமடைந்திருந்த மகன் இராணுவத்தினரிடம் உள்ளார்
இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த பருத்தித்துறையைச் சேர்ந்த வல்புரன் மார்க் கண்டு தெரிவிக்கையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடம் கணிதத்துறையில் படிப்பை மேற்கொண்டு வந்த எனது மகன் மயூரன் பல்கலைக்கழகப் பகிஷ் கரிப்பினால் வீட்டில் தங்கியிருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி நானும் மனைவியும் ஏனைய 05 பிள்ளை களும் கோயிலுக்குச் சென்றபோது மயூரன் மட் டும் வீட்டில் இருந்தார். எனினும் பிற்பகல் வீட் டுக்கு வந்து பார்த்தபோது மயூரன் வீட்டிலில்லை. ஆனால் வீட்டு வாசலில் இரண்டு மோட்டார் சைக் கிள்கள் வந்துசென்ற அடையாளத்தைக் கண்டு சந்தேகமடைந்த நான் உடனடியாகவே பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் உடனடியாகவே முகமாலைப் பொலிஸாரிடம் கேட்டபோது அதே தினம் 3.20 மணிக்கு மார்க் கண்டு மயூரன் என்பவர் வவுனியா தேசிய கல்வி யற் கல்லூரிக்கு செல்லக் குறிப்பிட்டு முகமாலை சோதனைச் சாவடியைத் தாண்டி விடுதலைப்புலி களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தெரியவந்தது.
பின்னர் 6 மாதங்களின் பின் வன்னியிலிருந்து இணையத்தளத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மகன் விடுதலைப்புலிகள் அமைப்பில் மீளமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார். பின்னர் அவரைப் பார்ப்பதற்கு பல முயற்சி கள் எடுத்தும் முடியாமற் போனது.
இந்நிலையில் 2009 ஆம் ஆணடு மே மாதம் 10 ஆம் திகதி இணையத்தள தொலைபேசி மூலம் வேறொருவர் அழைத்து மயூரன் காயமடைந்து விட்டதாகத் தகவல்தந்தார். இதனைத் தொடர்ந்து போர் நிறைவடைந்த நிலையில் நான் வெலிக்கந்த, பொலநறுவை, ஓமந் தை என விடுதலைப்புலிகளின் முன்னாள் போரா ளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற் றும் செட்டிக்குளம் நலன்புரி முகாம் என அனைத்தி லும் தேடியும் மயூரன் இல்லை.
ஆனால் கடந்த யூன் மாதம் குருநாகல் வைத் தியசாலையில் வைத்து மகனை சந்தித்ததாக ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து நான் அங்கு சென்றேன்.ஆனால் மயூரன் என்று மட்டும் குறிப்பிடப் பட்டிருந்த ஒருவர் குருநாகல் வைத்தியசாலை யிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு இராணுவத்தினரால் அழைத் துச் செல்லப்பட்டமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசா லைக்குச் சென்றும் அங்கு எனது மகன் இல்லை. எனவே எனது மகனின் தகவலைப் பெற்றுத் தரு மாறு கேட்டுக் கொள்கின்றேன் என தந்தையார் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
இராணுவம் தூக்கிச் சென்ற எனது கணவரை மீட்டுத்தாருங்கள் இவ் விசாரணையில் திருமதி ரஞ்சிதன் சாட்சிய மளிக்கையில்,
வன்னி இறுதி யுத்தத்தின்போது ஏரியல் வீச்சில் காயமடைந்த எனது கணவரான இரட்ணம் ரஞ்சிதனே இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வரும் போது என்னால் அழைத்து வரமுடியவில்லை.
எனது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அவரை அங்கேயே விட்டு நான் இராணுவக்கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்டேன். நான் வவுனியா வலயம் 4 முகாமில் தங்கியி ருந்தேன் எனினும் முள்ளிவாய்க்காலில் காயமடைந்திருந்த எனது கணவரை 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இராணுவத்தினர் தூக்கிச் சென்றதாக கண் டவர்கள் கூறினார்கள்.
ஆனால் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் அதற்குப்பின் எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் எனது சகோதரனும் அவரது மனை வியும் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலை யில் அவர்களது 3 பிள்ளைகளையும் என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். தற்போது சசோதரனும் அவரது மனைவியி னதும் தகவல் ஏதுமில்லாத நிலையில் பிள்ளை கள் என்னிடம் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் வைத்துஎனது கணவரை இராணுவம் கடத்தியது
இவ் விசாரணையில் சாட்சியமளித்த கரணவா யைச் சேர்ந்த திருமதி பிரேமசிறி சுதர்சினி, 2006 ஆம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி கொழும்புக்கு சென்ற எனது கணவர் செல்லையா பிரேமசிறியை காணவில்லை.கொழும்பில் புதிய செட்டித்தெருவில் விடுதி யயான்றில் வெளிநாடு செல்வதற்காக தங்கியி ருந்த எனது கணவரை 2006 ஆம் ஆண்டு 3 ஆம் திகதி சீருடையில் வந்த இராணுவத்தினர் கடத்திச் சென்றனர் என அவர் தெரிவித்தார்.
கருணா குழுவினர் எனது கணவரை கடத்தினர்
இவ்விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பாலகுமார், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு சென்ற எனது கணவர் செல்வராசா பாலகுமார் கொழும்பில் தங்கியிருந்த வேளை கருணா குழுவினரால் கடத்தப்பட்டார். இக்கடத்தலில் கருணா குழுவைச் சேர்ந்த குணபாலசிங்கம் ஜிதைஸ் தலைமையில் 10 பேர் கொண்ட ஆயுதக் குழுவினரே கடத்திச் சென்றனர் என திருமதி பாலகுமார் சாட்சியமளித்த வேளை இரகசியமாக உங்கள் சாட்சியத்தைப் பதிவுசெய்து கொள்கிறோம் என ஆணைக்குழுவினர் தெரிவித் தனர். இவற்றை செவிமடுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா, பதிவுசெய்யப்பட்ட மற்றும் இரகசிய இராணுவ முகாம்கள் குறித்து விசாரணை செய்வதாக உறு தியளித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவில் பொன்சேக்காவின் சாட்சியத்தைப் பதிவுசெய்யும் தேவை இல்லை என்கிறார் அதன் தலைவர்!
இறுதிக் கட்ட யுத்தம் சம்பந்தமாகவோ வெள்ளைக்கொடி விவகாரம் குறித்தோ முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய எந்தத் தேவையும் இல்லையென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக தற்போதைய இராணுவத் தளபதி மற்றும் அப்போதிருந்த படையணிகளின் தலைவர்களிடமும் இறுதிக் கட்ட யுத்தத்திற்கு பங்களிப்புச் செய்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் சாட்சியங்களைப் பெற்றதாகவும் மேலும் பல்வேறு நபர்கள் மற்றும் குழுக்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்களில் ஒருவரான சரத் பொன்சேக்காவிடம் சாட்சியத்தைப் பதிவு செய்யாததன் மூலம் ஆணைக்குழுவின் நடுநிலைத் தன்மை தொடர்பாக கேள்வி எழுகிறது அல்லவா எனக் கேட்டபோது இதற்குப் பதிலளித்த ஆணைக்குழுவின் சிரே~;ட உறுப்பினர் ஒருவர் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக தற்போது வழக்கொன்று விசாரிக்கப்பட்டு வருவதால் அவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தால் அவருக்கு பாதகமான நிலைமை உருவாகக் கூடும் எனத் தெரிவித்தார்.
அதேபோல் வழமையான நடைமுறைகளின்படி வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் இவ்வாறான சாட்சியமளிப்புகளில் கலந்துகொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் தயாரிக்கப்படும் இறுதியறிக்கை எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் சட்டமா அதிபருமான சி.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக