சனி, 13 நவம்பர், 2010

சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் ‐ சகோதரர் கோரிக்கை!

கடலில் வைத்து கைது செய்யப்பட்ட புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் என என சூசையின் சகோதரர் இன்று நெல்லயடிப்பகுதியில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

நெல்லியடி முருகமூர்த்தி கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற வாக்குமூலப் பதிவுகளின் போது அங்கு வாக்குமூலமளித்த சூசையின் சகோதரர், முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து வெளியேறி பருத்தித்துறை நோக்கி கடல்வழியாக வர முற்பட்ட வேளை தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் சகோதரரான சூசையின் குடும்பத்தினர் என அனைவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் திருகோணமலை கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தாங்கள் சந்தேகப்படுவதாகவும் ஒரேயொரு தடவை தொலைபேசி மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டாதாகவும் பின்னர் அவர்கள் குறித்த எந்தவித தகவல்களையும் அறிய முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசு மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாக பல ஊடகங்கள் மூலம் அறிவித்த போதும் தற்போது அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய முடியாதிருப்பதாகவும் சூசையின் சகோதரர் தெரிவித்தார்.

இதனிடையே நெல்லியடியில் இடம்பெற்ற வாக்குமூலப் பதிவுகளின் போது தலைவர் நீண்ட நேரமாக அங்கு பிரசன்னமாகியிருக்காத நிலை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது. தலைவர் ஆரம்ப நிகழ்வில் மட்டும் ஆஜராகி விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார். எனினும் இறுதி வரை அங்கு அவர் வந்து சேர்ந்திருக்கவில்லை.

2மணி வரை நெல்லயடியில்; இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள் பெருமளவில் ஆஜராகவில்லை. எனினும் நேமாக நேரமாக பொதுமக்கள் பலர் அதாவது யாழ்க்குடாநாட்டில் நெல்லயடியிலேயே அதிகமான மக்கள் பிரசன்னமாகியிருந்தனர் என்று சொல்லுமளவிற்கு மக்கள் வருகை தற்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இனியபாரதி குழுவினரால் கடத்தப்பட்ட தாங்கள் 75 லட்சம் ரூபா கப்பம் செலுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் சாட்சி!

யாழ்ப்பாணத்தில் இன்று நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் கருணா குழு தொடர்பான வாக்குமூலங்களும் பல அளிக்கப்பட்டிருந்தன. கருணா குழுவினரால் கொழும்பிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொடர்பாக அதிலிருந்து தப்பியவர்களும் மற்றும் அவர்களது குடும்ப ,உறவினர்களும் பல்வேறு வாக்குமூலங்களை அளித்திருந்தனர்.

மொனறாகலை வெள்ளவாயாவைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சிவஞானம் செல்வதீபன் என்ற யாழ் தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவிலாளர் ஒருவரும் வாக்குமூலம் அளித்திருந்தார்.

கருணாவின் இனியபாரதி குழுவினரால் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட தாங்கள் வெலிகந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும பின்னர்; 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் 28ம் திகதி விடுவிக்கப்பட்டடதாகவும் தெரிவித்திருந்தார். தனது மாமனார் சகிதம் பஸ் நிலையத்தில் வைத்துக் கடத்தப்பட்ட தாங்கள் 75 லட்சம் ரூபா கப்பம் செலுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனது சகோதரரான சிவஞானம் பார்த்தீபன் புத்தளத்தில் வைத்து படையினரால் கடத்தப்பட்டதாகவும் கடத்தப்பட்டவர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு திரியப்பட்டதாகவும் பின்னர் அவர் பற்றிய எந்தவித தகவல்களும் பெற முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்று கொழும்பிலுள்ள விடுதிகளில் வைத்து கருணா குழுவினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் குறிப்பிடப்பட்ட பலர் தொடர்பான முறைப்பாடுகளும் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வன்னியிலிருந்து வெளியேறிய பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில்; காணாமல் போயினர் ‐ பெருமளவிலானோர் சாட்சியம்!

வன்னி யுத்தத்தில் வன்னியிலிருந்து வெளியேறிய நிலையில் பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில் வைத்துக் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வட்டவாகல் மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பிலேயே குறிப்பிடச் சொல்லத்தக்க அளவில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று இடம்பெற்ற பல்வேறு வாக்குமூலங்களிலும் யுவதிகள் காணாமல் போனமை தொடர்பாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்பாக இன்று வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பின்னர் நண்பகல் 2 மணி அளவில் நெல்லியடிப்பகுதியிலும் அதனைத் தொடர்ந்து சாவகச்சேரியிலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நாளைய தினம் தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்துறைப் பகுதிகளிலும் வாக்குமூலம் இடம்பெறவுள்ளதுடன் வாக்குமூலப் பணிகள் யாழ்ப்பாணத்தில் பூரணமடைகின்றது செய்தியாளர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற வாக்குமூலப் பணிகளின் போது பலர் ஆஜராகி குறிப்பாக தமது மகள்மார்கள் காணாமல் போயிருந்தமை தொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தனர். தமது பிள்ளைகள் புலிகளுடன் எந்தவொரு தொடர்புகளும் அற்றவர்கள் எனவும் பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள் எனவும் பல்வேறு யுவதிகள் குறிப்பாக ஓமந்தைப்பகுதியில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறித்து எந்தவொரு தகவல்களும் இல்லாமல் இருப்பதாகவும் பெற்றோர்; அச்சத்துடன் தெரிவித்தனர்.

அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்ட பெண் போராளிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் 91 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறி வருகின்றது. ஆனால் அவர்கள் புலிப் போராளிகளாக இருப்பார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம். புலிகளின் பெண் போராளிகளாக இருந்தவர்கள் பற்றி அவர்களது குடும்பங்கள் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் அப்பாவிகளான எமது பெண் குழந்தைகள் அதுவும் குறிப்பாக 20க்கும் 25வயதிற்கும் உட்பட்ட பலர் இவ்வாறு ஓமந்தைப் பகுதியில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய முடியாதிருப்பதாகவும் இந்த வாக்குமூலங்களில் தெரிவிக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல