சனி, 13 நவம்பர், 2010

கடத்திச்செல்லப்பட்ட என் கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதையாவது தெரியப்படுத்துங்கள்

எனது குழந்தைக்கு ஒன்பது மாதங்களாக இருந்தபோது நீர்கொழும்பில் வைத்து எனது கணவர் 2006ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டார். அவர் இல்லாமல் நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். பல கஷ்டங்களுக்கு மத்தியில் பிள்ளையை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். எனவே எனது கணவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா? என்பதையாவது எனக்குத் தெரியப்படுத்துங்கள் என நெய்னா முகமட் றிஸானா என்ற குடும்பப்பெண் ஆணைக்குழு முன்னிலையில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

றிஸானா அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்: நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். எனினும் 90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். அங்கு 2005ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற்றது. ஆனால் 2006ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 18ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் வைத்து எனது கணவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார். அப்போது எனது பிள்ளைக்கு 9 மாதங்கள். எனது கணவர் எங்கிருக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. உயிருடன் இருக்கின்றாரா இல்லையா? என்று கூடத் தெரியவில்லை.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நான் வாழ்க்கையை நடத்திச் செல்லும் அதே வேளை எனது பிள்ளையையும் வளர்த்து வருகின்றேன். முன்னர் ஒரு தடவை முன்னாள் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனின் உதவியுடன் ஜனாதிபதியைச் சந்தித்து இந்த விடயத்தைத் தெரிவித்தேன். எனது கணவரை மீட்டுத்தர உதவிசெய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்தேன். அவர் உதவிசெய்வ தாகக் கூறினார். தற்போது நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே தயவு செய்து எனது கணவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற தகவலையேனும் வெளியிடுங்கள் என்றார்.

நற்பிரதாபன் சுகிர்தா என்பவர் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில்:

நான் திருமணம் முடித்து புங்குடுதீவில் வாழ்ந்து வந்தேன். 2006ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 19ஆம் திகதி எனது கணவரும் அவரின் இரண்டு தம்பிமாரும் இனந்தெயாதோரால் கடத்திச் செல்லப்பட்டனர். எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தேன்.

கிடைக்கவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு என பல இடங்களிலும் முறைப்பாடு செய்தேன். ஆனால் எனக்கு இதுவரையிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நான் தற்போது எனது தாயுடன் வசித்துவருகிறேன்.

கடத்தப்பட்ட எனது கணவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது தொடர்பில் எந்தத் தகவலும் இல்லாமல் உள்ளது. நான் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறேன்.

எனக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கின்றார்.

அவர் பாடசாலை செல்கின்றார். பல கஷ்டங்களுக்கு மத்தியிலேயே மகனை படிப்பிக்கின்றேன். எனவே எனது கணவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என எனக்குத் தெரிந்தாக வேண்டும்.

ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு நானே இந்தளவு கஷ்டப்படுகிறேன் என்றால் ஏனைய பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தளவு கஷ்டப்படுவார்கள்? எனவே எங்களைப் போன்ற பெண்களுக்கு வாழ்வதற்கான வழியொன்றை ஏற்படுத்தித் தருமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.



ரங்கநாதன் வசந்தி என்பவர் ஆணைக் குழு முன் சாட்சியமளிக்கையில்:

2009ஆம் ஆண்டு 2ஆம் மாதம் 28ஆம் திகதி முதல் எனது பிள்ளையைக் காண வில்லை. புதுமாத்தளன் பகுதியிலேயே அவர் காணாமல் போனார். அவர் 1993ஆம் ஆண்டு பிறந்தவர். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கணவரும் நானும் கஷ்டப்படுகின்றோம். எங்களுக்கு ஆறு பிள்ளைகள். மூத்தவர் தான் காணாமல் போயுள்ளார். மூத்த பிள்ளைதான் உழைத்து எங்களுக்கு உதவி வந்தார். எனது நான்காவது பிள்ளையினால் நடக்க முடியாது. அத்துடன் யுத்தகாலத்தில் நானும் எனது கணவரும்கூட காயமடைந்தோம் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல