திங்கள், 20 செப்டம்பர், 2010

ஓன்லைனில் அஞ்சலி

சமாதிக்கு போறது போயே போச்சு! கொள்ளுப்பாட்டிக்கு ஓன்லைனில் அஞ்சலி

வாழும்போதுதான் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் மனித வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்ட சங்கதிகள் என்று நினைக்க வேண்டாம். இறந்த பின்பும் ஒருவரைத் தொடர்கிறது என்றால் வியப்பாகத்தானே இருக்கிறது. இன்னொரு உலகத்துக்குப் போனாலும் விடுவதாக இல்லை கம்ப்யூட்டர்.

ஆம், இப்போதெல்லாம் சமாதிக்குச் சென்று ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவது குறைந்து வருகிறது. உறவினர்களும் நண்பர்களும், இறந்தவரின் வெப்சைட்டுக்கு சென்று தங்கள் இரங்கலை மட்டுமல்ல, பல விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து விடுகின்றனர். ஃபேஸ்புக் உட்பட சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்களில், இறந்தவரின் பெயரில் நினைவுப் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அல்லது தனியாகவே வெப்சைட் ஆரம்பிக்கவும் செய்யலாம். அதற்கு வசதி உள்ளது.

ஆண்டுதோறும் மறக்காது! ஒருவர் இந்துவாக இருந்தால், இறந்த பின் அவருக்கு திதி கொடுக்க தேதியைக் குறிக்க வேண்டும். அதுபோலத்தான் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். ஆனால், கம்ப்யூட்டர் யுகத்தில் அதற்கெல்லாம் கவலை வேண்டாம். குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே நம்மை நினைவுபடுத்தவும் இன்டர்நெட்டில் வசதி உள்ளது.

மேலும், அந்த ஒரு நாள் மட்டுமின்றி, ஆண்டு முழுக்கவும் அந்த வெப்சைட்டை திறந்து பார்த்து, முகமறியா உறவினர், நண்பர்கள் கூட அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வழி வகுக்கிறது. எந்த இடத்தில் இருந்தபடியும் அவர்கள் விவரம் அறிய சோஷியல் வெப்சைட்கள் உதவுவது போல, இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தவும் பல வெப்சைட்கள்
உள்ளன.

ஆண்டுதோறும் மறக்காமல் இந்த வெப்சைட்டுக்கு விசிட் செய்து, எந்த நாட்டில் இருந்தாலும் அவர் நினைவைப் போற்றி பலரும் கவிதை, கடிதம், மறக்க முடியாத சம்பவம், வீடியோ காட்சிகள் என்று பதிவு செய்ய முடிகிறது. அதைப் பார்க்கும் இறந்தவர் குடும்பத்தினர், தங்கள் முகமறியா உறவினர், நண்பர்கள் பற்றிய விவரங்களை அறிய
முடிகிறது.

வந்தாச்சு இந்தியாவுக்கும்!

அமெரிக்கா போன்ற நாடுகளில், கடந்த சில ஆண்டுகளாகவே வெப்சைட் மூலம் அஞ்சலி செலுத்தும் முறை வந்து விட்டது. பல ஐரோப்பிய நாடுகளில் இப்போதும், மறைந்த தன் நெருங்கியவருடன் நெட் மூலம் பலரும் மனம்விட்டுப் பேசி ஆறுதல் அடைகின்றனர். சமாதிக்கு போவதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, அவரைப் பற்றி சில வார்த்தைகள் பேசுவது, சம்பவங்கள் பதிவு செய்வது என்பது திருப்தியான விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போதுதான் இது ஆரம்பமாகியுள்ளது.

எனினும் இன்னும் பிரபலமாகவில்லை. ஏகப்பட்ட வெப்சைட்கள்!

சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்களில் மட்டுமல்ல, தனியாகவும் பல மெமோரியல் வெப்சைட்கள் உருவாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை பணம் கட்டிப் பராமரிக்க வேண்டும். சிலவற்றில் இலவசமாகவே இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், பாதுகாப்பான வெப்சைட்தானா, நம்பகத்தன்மை உள்ளதா என்று அறிந்து அதில் தகவல்களை அளிப்பது நல்லது.

சில தரமான வெப்சைட்களில்தான் பாதுகாப்பு முறைகள் உள்ளன. ஒருவரின் தகவல்களை அவரின் அனுமதி இல்லாமல் பார்க்கவோ, படங்கள் போன்றவற்றை காப்பி எடுக்கவோ அனுமதிப்பதில்லை. ஆனால், சில வெப்சைட்களில் திருட்டு வேலைகள் நடக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருவரின் ரகசிய தகவல்கள் எல்லாம் கசிய இதுபோன்ற ‘சைபர் திருட்டு’கள்தான் காரணம்.இன்றைய தலைமுறையினருக்கு உறவு முறைகள் எல்லாம் தெரியாது. தங்கள் குடும்பத்தைத் தவிர, மற்ற உறவினர் பற்றி எதுவும் தெரியாத நிலையில், அவர்களுக்கு கைகொடுப்பது இன்டர்நெட்தான். தந்தை இறந்த தகவலை அவரின் தூரத்து உறவினர், நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்பிய மகன், மெமோரியல் வெப்சைட்டை ஆரம்பித்தான். அடுத்த சில நாட்களில், அப்பாவின் உறவினர், நண்பர்கள் யார் யார் என்ற விவரம் கிடைத்தது. அந்த அளவுக்குக் கைகொடுக்கிறது இன்டர்நெட் என்றால் கண்டிப்பாக நாம் அதற்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.

இறந்தவர் பேசினால்...

நீங்கள் கம்ப்யூட்டர் விரும்பியாக இருந்தால், இது போன்ற மெமோரியல் வெப்சைட்களுக்கு போய்ப்பாருங்கள். சிலர் வித்தியாசமான தகவல்களைத் தெரிவித்திருப்பர். சமீபத்தில் சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட் மூலம், ஒருவரிடமிருந்து அவரின் நண்பர்கள், உறவினர்களுக்கு மெயில்கள் வந்திருந்தன.

‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்’ என்பதில் ஆரம்பித்து, பழங்கதைகளை எல்லாம் பதிவு செய்திருந்தார் அவர். இதில் ஒரு உண்மை என்னவென்றால், அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. விஷயம் தெரியாத பலரும், தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்; சிலர் அவருடன் எடுத்துக்கொண்ட பழைய வீடியோ காட்சிகளை ‘அப்லோடு’ செய்திருந்தனர். அவரின் நண்பர் ஒருவர்தான் இப்படி அவர் பெயரில் மெயில் அனுப்பியிருந்தார். இதையெல்லாம் பார்த்ததும்தான் அவர் குடும்பத்தினருக்கே, அவரைப் பற்றிய பெருமை தெரிந்தது.

எக்குத்தப்பாகக்கூட நடக்கும்!

இப்படி மெமோரியல் வெப்சைட் ஆரம்பித்தால், அதில் வரும் தகவல்கள் சிலருக்கு தர்மசங்கடமாகவும் அமையும். இப்படித்தான் ஒருவர் மறைந்ததும், அவர் பெயரில் மெமோரியல் வெப்சைட்டை அவர் மகன் அமைத்தார். அதில் வந்த மெசேஜ்கள், படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த மகனுக்கு ஒரு படத்தைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது. அப்போதுதான் தெரியும், தந்தைக்கு சின்ன வீடு இருந்தது என்ற விஷயம். மகன் அதன்பின் வெப்சைட்டை ‘க்ளோஸ்’ செய்தும் விட்டார்.

ஆனாலும், கண்ணுக்குத் தெரியாத பலரையும் ஒன்றிணைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்கள், இறந்தவர்களுடனும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது என்றால் உச்சகட்ட ஆச்சரியம்தானே! இனி கொள்ளுப்பாட்டிக்குக்கூட ஆன்லைனில் அஞ்சலி செலுத்தலாம்.

வி.ராமன்


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல