திங்கள், 20 செப்டம்பர், 2010

கே.பி மாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்:

நீங்கள் நல்லவரா – கெட்டவரா???


இது தான் தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நடைபெற்றுவரும் விவாதம்.

தங்களின் பொன்னான நேரத்தை இந்த வீணாய்ப்போன விவாதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் செலவு செய்வது தேவையற்றது.

ஏனென்றால், உனது நண்பன் யார் என கூறு, நான் உன்னைப்பற்றி கூறுகிறேன் என சொல்வதுண்டு. இந்த சிம்பிள் தத்துவம் உங்களுக்கும் பொருந்தும் அல்லவா.
உங்களின் உயிர் தோழனாக பிரதான போர்க்குற்றவாளி கோத்தபாயா ராஜபக்சா இருக்கும் போது. உங்கள் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு என்ன இருக்கிறது??

இருந்தாலும் சிறீலங்கா அரச ஊடகங்களுக்கு நீங்கள் திரித்துக் கூறும் நேர்காணல்களில் விடப்பட்ட, எனக்கு கிடைத்த தகவல்களையும், இங்கு ஆராய்ந்துவிடுவது பொருத்தமானது.

விடுதலைப்புலிகளின் ஆயுத வினியோக நடவடிக்கைகளில் இருந்து நீங்கள் 2002 ஆம் ஆண்டு வெளியேற்றப் படடிருந்தீர்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. நிதி மோசடி ஒரு காரணமாக இருந்தாலும், அதனை உங்களின் தனிப்பட்ட செலவு என நீங்கள் கூறியதை விடுதலைப்புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டிருந்தது.

வெளிநாடுகளில் பல பெயர்களில், பல கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் உங்களுக்கு செலவுகள் அதிகம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாத நிலையில் அவர்கள் இல்லை.

எனினும் அவர்கள் உங்களுக்கு ஓய்வு கொடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகம் செய்பவர் நீங்கள் என்பது பரகசியம், எனவே அனைத்துலகத்தினாலும் உற்று அவதானிக்கப்படும் உங்களை கொண்டு தொடர்ந்தும் ஆயுதங்களை தருவிப்பது ஆபத்தானது என்பது சிறுகுழந்தைக்கும் புரியும். அதனை தான் தேசியத் தலைவர் மேற்கொண்டிருந்தார்.

விடுதலைக்கு போராட புறப்பட்டவர்கள் பதவி நிலைகளுக்கு அப்பால் பட்ட உன்னதமான இலட்சித்தை கொண்டிருத்தல் வேண்டும் என்பது அடிப்படை விதி. தளபதி, பொறுப்பாளர் என்பது எல்லாம் அனுபவம், தேவை கருதி வழங்கப்படும் பதவி நிலைகளே தவிர விடுதலைப்போரில் அதனை கௌரவத்தின் சின்னமாகவோ அல்லது புகழின் உச்சமாகவோ கருத முடியாது.

தேசியத் தலைவரின் பிரதம பாதுகாவலராக விளங்கிய லெப். கேணல் இளங்கோ எல்லாளன் நடவடிக்கைக்கு சென்றதும், விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் நியூட்டன் இயக்கப் பணிகளுக்காக கொழும்பு சென்றதும் அதற்கான சிறு உதாரணங்கள்.

ஆறு மாதம் சமயல் கட்டில் பணிசெய்து கிடந்த கட்டளைத்தளபதி கேணல் ஜெயம், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு பழிவாங்க கோத்தாவின் காலை நக்க ஓடவில்லை.

சரி அதனை விட்டு நாம் நாலாம் ஈழப்போர் சம்பவங்களுக்கு வருவோம்.ஈழப்போர் உக்கிரமடைந்து பூநகரி வீழ்ச்சி கண்ட காலப்பகுதியில் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் என நினைக்கிறேன் நீங்கள் ஒரு திட்டத்தை முன்வைத் திருந்தீர்கள்.

அதாவது சிறீலங்கா படைகளின் தாக்குதலை எதிர்கொள்ளாது விடுதலைப்புலிகளின் முழு கட்டமைப்புக்களும் சரணடைவது என்பதே அது.

தேசியத் தலைவர் உட்பட முதற் கட்ட தலைவர்களும், தளபதிகளும் நோர்வேயிடம் சரணைடைவது, இரண்டாம் கட்ட தளபதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியுடன் வேறு ஒரு நாட்டிடம் சரணடைவது, இளநிலை தளபதிகளும், போராளிகளும் சிறீலங்கா அரசிடம் செஞ்சிலுவை சங்கததின் ஊடாக சரணடைவது என்ற திட்டத்தை நீங்கள் முன்வைத்திருந்தீர்கள்.

அது தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவரிடம் இருந்து ஒரு புன்முறுவல் மட்டுமே பதிலாக கிடைத்தது. அதன் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு மட்டுமல்ல ஒருவருக்குமே புரியவில்லை.

சிறீலங்கா இராணுவம் தனது இழப்புக்களை குறைப்பதற்காக முன்கொண்டுவந்த திட்டம் அது என்பது ஒருபுறமிருக்க, போர் நிறைவுபெற்றபோது ஐ.நா அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் ஆகியவர்களின் உத்தரவுகளுக்கு அமைய வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அரசியல் துறை பொறுப்பாளர் திரு பா. நடேசன், சமாதானச் செயலக பணிப்பாளர் திரு சி. புலித்தேவன், கட்டளை தளபதி ரமேஸ் ஆகியோர் கோரமாக படுகொலை செய்யப்பட்டபோது தலைவரின் புன்முறுவலின் அர்த்தம் எமக்கு மட்டுமல்ல உங்களுக்கும் புரிந்திருக்கும்.

அன்று விடுதலைப்புலிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்களும் சரணடைந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் நயவஞ்சகமாக கொல்லப்பட்டிருப்பார்கள், ஆனால் சிறீலங்கா அரசு போர்க்குற்ற விசாரணைகள், இனப்படுகொலை என்ற அனைத்துலகத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பியிருக்கும்.
எனினும் உங்களை அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைக்கான பொறுப்பாளராக தலைவர் நியமித்தார், அது ஏன்??????????

நீங்கள் குளறுபடிகள் செய்தபோதும், தலைவர் ஏன் உங்களை அனைத்துலக விவகாரங்களுக்கான பிரதிநிதியாக நியமித்தார் என்பது எல்லோருக்கும் புதிராகவே இருந்தது. ஆனால் அதன் நோக்கம் தெளிவானது.

அதாவது பல உளவு அமைப்புக்களின் முகவராக செயற்படும் உங்களை பயன்படுத்தி அந்த நாடுகளை ஏமாற்றவே அவர்கள் முயன்றிருந்தனர். கப்பலுக்கும், உலங்குவானூர்திக்கும் உங்களை நம்பி இருப்பதாகவே அவர்கள் காண்பித்துக் கொண்டனர்.

நீங்களும் கப்பலையும், உலங்குவானூர்தியையும் வாங்குவதாக நாடகம் போட்டீர்கள். உங்களுக்கு காவடி தூக்கும் நபர் ஒருவர் என்னுடன் கதைக்கும்போது கூறினார் (14.05.2009), அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை மையத்தின் கப்பல் தயாராக உள்ளதாகவும், ஆனால் அதற்கு உத்தரவுகளை வழங்கும் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரி விடுமுறையில் சென்றுவிட்டதாகவும் கூறினார்.

அவர் விடுமுறையில் சென்றால் தனது பணிகளை செய்வதற்கு வேறு ஓருவரை நியமித்துவிட்டு தானோ போவார் என நான் கேட்டேன், அதற்கு அவர் கூறினார் அவரால் மட்டும் தான் அதனை மேற்கொள்ள முடியும் என்று.
என்???? எனக்கு எதுவும் புரியவில்லை….

சரி, அவர் சென்ற நாட்டுக்கு தொடர்பை ஏற்படுத்தி அவரை தொடர்புகொள்ள முடியாதா? என நான் மீண்டும் அவரிடம் கேட்டேன் (இந்த உரையாடல் நடைபெற்ற சமயம் முள்ளிவாய்க்காவில் இறுதிச் சமர் ஆரம்பமாகியிருந்தது).
தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாத இடத்திற்கு அவர் சென்றுவிட்டதாக அந்த நபர் எனக்கு கூறினார். அதனை தான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனுக்கும் அவர் தெரிவித்திருப்பார் என எனக்கு புரிந்தது.

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெளிவானது, இந்த நாதாரி எனக்கும், விடுதலைப்புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களுக்கு காதில் பூ சுற்றுகிறான் என்று. விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்ததும் இந்த நாதாரி தான் உங்களை (கே.பியை) விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக பிரகடனப்படுத்துவதில் முன்னிலை வகித்தவன்.

சரி மாமா, நீங்கள் சிங்கள ஊடகங்களுக்கும், அதற்கு கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வழங்கும் நேர்காணல்களில் பல முரன்பாடுகளை தோற்றுவித்து வருகின்றீர்கள். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தை காப்பாற்ற நீங்கள் முயன்றபோது நெடியவன் உங்களுக்கு உதவவில்லை என உங்களின் அடிவருடி ஊடகவியலாளன் உளறிக் கொட்டுகிறான்.

உங்களின் நேர்காணல் என்ற பேர்வையில் தனது தமிழின விரோதத்தை கக்கி தீர்க்கிறான். ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. உங்களிடம் இருந்த ஆயுத வினியோகப் பணிகள் அகற்றப்பட்டு அதனை ஐயா அண்ணையிடம் வழங்கியதாகவே நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.

2002 ஆம் ஆண்டில் இருந்து வினியோகப் பணிகளை ஐயாவும், இளங்குட்டுவனும் மேற்கொண்டு வருவதாகவும் நீங்கள் தான் தெரிவித்திருந்தீர்கள். அப்படியானால் உங்களிடம் உலங்குவானூர்தியும், கப்பலும் கேட்கப்பட்டபோது, ஆயுதவினியோகங்கள் மற்றும் கொள்வனவுகளில் அதிக அனுபவம் வாய்ந்த ஐயாவை அல்லவா நீங்கள் தொடர்புகொண்டிருக்க வேண்டும்????

நான் நினைக்கிறேன், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பின் பிரதம கட்டமைப்புக்களின் தொடர்புகளை அவர்கள் உங்களுக்கு வழங்கவில்லை. புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசியல் கட்டமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைக்கான கட்டமைப்புக்களுடன் தான் உங்களுக்கு தொடர்புகள் இருந்துள்ளதை நீங்களே ஒப்புக்கொண்டுளீர்கள்.

எனவே முள்ளிவாய்க்கால் சம்பவங்களுக்கு கஸ்ரோ அண்ணையையும், நெடியவனையும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய ஊடகங்களையும் குறிவைத்து நீங்கள் தொடர்ந்து தாக்கி வருவதன் பின்னனியில் கோத்தாவின் வாசைன வருகின்றது.

பரவாயில்லை மாமா, 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு சமரின் போது, குண்டுச் சிதறல்பட்டு இடுப்புக்கு கீழே இயக்கமற்று, சக்கர நாற்காலியில் இருந்தவாறு போராடிய கஸ்ரோ அண்ணா இயக்கத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், கோத்தாவின் மடியில் புரளும் நீங்கள் இயக்கத்தை காப்பாற்றுவதாகவும், தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாகவும் கூறுவது வியப்பானது.

அது மட்டுமல்லாது, நீங்கள் சேர்ந்துள்ள கூட்டணியும் வியப்பானது.

உங்களுக்கு நான் எழுதும் கடிதம் குரங்கு வால் போல நீண்டு செல்வதை நிறுத்த வேண்டிய தேவை உண்டு.

எனினும் சிறீலங்காவின் பேரினவாத ஊடகம் ஒன்றிற்கு தமிழின விரோதிகளின் உதவியுடன் நீங்கள் வழங்கிய நேர்காணலில் உள்ள பொய்கள் குறித்து பல தரப்பில் இருந்தும் மறுப்புக்கள் கிளம்பிவருவது உங்களையும், கற்பனை கதை எழுதும் உங்களின் பிரத்தியோக ஊடகவியலாளரையும் அச்சமடைய வைத்திருக்கலாம்.

இருந்தபோதும், உங்களின் கைது ஒரு காட்டிக்கொடுப்பு எனவும், சிறீலங்கா அரசுடன் இணைந்து நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை மூலம் தான் தமிழ் மக்கள் வாழமுடியும் என்றும் தமது கைகளில் அகப்பட்டுள்ள இயக்கத்தின் சொத்துக்களை மகிந்தாவின் காலடியில் போட்டு வெள்ளைப் பணமாக்க பல புலம்பெயர் மேதாவிகள் முயன்று வருகின்றனர்.

நியாய, அநியாயங்கள் எவை என தெரிந்தும், தெரியாதது போல கண்ணை மூடிக்கொண்டு உங்களை ஆதரிப்பவர்களிடம் சில கேள்விகளை கேட்பதுடன் இந்த மடலை சுருக்கிக் கொள்வது நல்லது.
2009 ஆம் ஆண்டு போர் நிறைவுபெறும் வரை பல முகங்களில், பல கடவுச்சீட்டுக்களில், பல நாடுகளில் தலைமறைவாக இருந்த நீங்கள், போர் நிறைவுபெற்றதாக சிறீலங்கா அரசு அறிவித்த பின்னர், புலம்பெயர் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசின் கவனம் திரும்பிய போது, நீங்கள் மட்டும், இலாவகமாக, படு உல்லாசமாக, மலேசியாவில் உள்ள நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியதன் மர்மம் என்ன?

மலேசியாவில் உள்ள விடுதியில் உங்களை யாரும் சந்திக்கலாம் என்பது மட்டுமல்ல, எல்லோரையும் தொலைபேசியில் நீங்கள் தொடர்புகொண்டு அழைத்ததும் நாம் அறிந்ததே. ஏன் உங்களின் தொடுப்பு ஒன்று என்னை கூட அழைத்திருந்தது.

இவ்வாறு ஆடம்பரமாக விடுதியில் வெளிப்படையாக தங்கியிருந்த உங்களை காட்டிக் கொடுப்பதற்கு ஏன் மாமா சிறீலங்கா அரசுக்கு ஆட்கள் தேவை?
ஆனால் நீங்கள் மலேசியாவில் தங்கியிருந்ததன் காரணம் வேறு.

விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக உங்களை பிரகடனப்படுத்திய நீங்கள், புதிய அரசியல் திட்டம் தொடர்பிலும் பேசி வந்தீர்கள். அதன் நோக்கம் தெளிவானது, அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழவிடுதலைக்கு ஆதரவான அத்தனை தமிழ் பிரதிநிதிகளையும் மாநாடு என்ற போர்வையில் அங்கு வரவைத்து ஒட்டுமொத்தமாக சிறீலங்காவுக்கு அள்ளிக்கொண்டு போகவே நீங்கள் திட்டமிட்டிருந்தீர்கள்.

ஆனால் உங்களின் இந்த திட்டத்தை குங்குமத்தின் ஆட்கள் கண்டறிந்ததால், ஏற்பட்ட பிளவில் குழம்பிய நீங்கள், அதன் பின்னர் உங்களை சந்திக்க வந்தவர்களை சந்தேகக் கண்ணுடனே பார்த்ததுடன், தப்பி ஓடவேண்டிய நிலையும் ஏற்பட்டது என்பதே உண்மை.

எனவே போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க சிறீலங்கா அரசு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று குவித்திருந்த சமயத்தில், இன்ரபோல் காவல்துறையினரால் தேடப்படும் நீங்கள் மலேசியாவில் உள்ள ஆடம்பரவிடுதியில் தங்கியிருந்ததும், உங்களை யாரோ காட்டிக் கொடுத்ததாகவும் கூறுவது, “கேக்கிறவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏயர் பஸ் -380 ஓடுமாம்” என்பது போல் உள்ளது.

சரி அவ்வாறு கைது செய்யப்பட்டாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய இரகசியங்கள் தெரிந்தவர்கள் உயிருடன் சரணடைவது வரலாறு அல்ல. உங்களிடம் குப்பி இல்லை என கூறலாம், ஆனால் இயக்கத்தின் இரகசியங்கள் தெரியக்கூடாது, இயக்கத்தின் சொத்துக்கள் எதிரியின் கைகளில் சிக்கக்கூடாது என்பதற்காக வைத்தியசலை கட்டில் சட்டத்தில் தலையை மோதி உயிர்விட்ட வரலாறும் விடுதலைக்கு பேராடிய வேங்கைகளுக்கு உண்டு.

மாமா, சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் என உங்களுக்கு பல்லாக்கு தூக்கும் ஒரு குழு தெரிவித்து வருகின்றது. சரி அது தான் உண்மை என்றால், அதற்கு ஏன் மாமா நீங்கள் புதிதாக சிரமப்படவேண்டும்??

அதனை தானே கடந்த 20 வருடங்களாக டக்ளஸ் தேவனந்தாவும், சில வருடங்களாக கருணாவும், பிள்ளையானும் செய்து வருகின்றனர். மகிந்தாவின் காலை நக்குவது என தீர்மானித்த பின்னர் உங்களுக்குள் ஏன் மாமா மோதல்?

உங்களை சூழ்நிலைக் கைதி என்றும் சிலர் தெரிவிக்கின்றனர், அதற்கான விளக்கம் என்ன என்பதை எம்மால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் சிறீலங்கா அரசு வழங்கும் உல்லாசங்களை அனுபவிப்பது தான் சூழ்நிலைக்கைதிகளின் கடமை என்பது தான் அதன் விளக்கமானால், தேவானந்தாவையும், கருணாவையும் நாம் சூழ்நிலைக் கைதிகளாக கருதலாமா?

சரணடைந்த 11,000 போராளிகளும் ஏன் சூழ்நிலைக்கைதிகளாக மாறவில்லை? அவர்களுக்கு ஏன் கொமோண்டோ பாதுகாப்பு வழங்கப்படவில்லை? மாறாக தினம் தினம் அவர்கள் ஏன் படுகொலை செய்யப்படுகின்றனர்?


சிறீலங்கா அரசின் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க, அவர்களின் சொகுசு பங்களாவில் நீங்கள் இளைப்பாறும்போது, தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் எவ்வாறு இருக்கின்றனர் தெரியுமா மாமா?

காலையில் எழுந்ததும், மகிந்தாவின் படத்தை வணங்கிவிட்டு, சிறீலங்காவின் தேசிய கீதத்தை ஓதிவிட்டு, சிறீலங்கா அரசுக்கு ஆதரவான வாக்குறுதிகளை வழங்கிவிட்டே காலை உணவை அவர்கள் உண்ண முடியும்.

30 வருடங்களாக தமது தேசியத் தலைவரை வணங்கி, எமது தேசத்தின் விடுதலை கீதத்தை இசைத்து, எமது மக்களின், தமிழ் இனத்தின் விடுதலைக்கான உறுதிமொழிகளை எடுத்துவிட்டு, பயிற்சிக்கு செல்லும் போராளிகளுக்கு இது மிகப்பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பாணும், பருப்பும், பாலும் கொடுத்துவிட்டால் போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள்;. கடந்த 33 வருடங்களாக நாம் எமது விடுதலைக்கு செலுத்திய விலைகள் என்ன? என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது பழிவாங்கும் உணர்வில் குழிதோண்டி புதைத்துவிட்டீர்களா?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை மாமா!! உங்களை தன்வசப்படுத்தியோ அல்லது அதிக பணச் செலவில் ஊடகவியலாளர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் என்றபோர்வையில் தனது கைக்கூலி தமிழர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பியோ புலம்பெயர் தமிழ் சமுகத்தை இன்றுவரை அசைக்க முடியாதது கோத்தபாயா கண்ட முதல் தோல்வி.

அந்த தோல்வியை வெற்றிபெற வைக்கவே இரவு பகலாக உங்கள் தூக்கத்தை தொலைத்து புலம்பெயர் நாடுகளில் இருந்து சில கொத்தடிமைகளை நீங்கள் விலைகொடுத்து வாங்கியிருந்தீர்கள், அவர்களுக்கு என சில ஊடகங்களையும் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றீர்கள்.

ஆனால் 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் எமது தேசத்தின் தலைவர் உரைத்த வாசகங்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு மக்களின் மனதிலும் பசுமரத்து ஆணிபோல ஆழப்பாய்ந்துள்ளது. அதாவது “புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் ஈழவிடுதலைப்போராட்டம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது”.

அதனை அவர்களிடம் இருந்து புடுங்குவது இலகுவானதாக இருக்காது, நீங்கள் தலைகீழாக நின்றாலும், இந்தியாவுக்கு அப்பால் உங்களின் வன்முறைகள் பயன்தரப்போவதில்லை.

காசு கொடுத்து வாங்கப்படும் கொத்தடிமைகளுக்கும் ஒரு எல்லை உண்டு, அவர்களால் உங்களுக்கு விசுவாசம் காண்பிக்க முடியுமே தவிர, தமிழ் சமூகத்தை தன்பக்கம் திருப்ப முடியாது.

புலம்பெயர் தமிழ் சமூக்தில் துரோகிகளின் எண்ணிக்கை வர வர அதிகமாகி வருவதாகவும், மகிந்தாவுக்கும், கருணாநிதிக்கும் ஆதரவு தரும் புலம்பெயர் நரிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் எனது நண்பன் ஒருவன் என்னிடம் தெரிவித்தான்.

நான் கவலைப்படவில்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை, ஏனெனில் இன்று உலகில் 80 மில்லியன் தமிழ் மக்கள் இருந்தபோதும், தமது இனத்திற்காக போராடி, இந்த உலகத்தின் பார்வையை தமிழ் இனத்தின் மீது திருப்பிய தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

வெறும் 2 மில்லியன் தான். மிகுதி 78 மில்லியன் தமிழ் மக்களும் புறம்போக்கு நிலங்களாக இந்த உலகத்தை நிரப்பிக் கிடக்கின்றனர். எனவே எமக்கு துரோகிகளின் எண்ணிக்கையோ அல்லது எதிரிகளின் எண்ணிக்கையோ முக்கியமானதல்ல, எம்மில் போராடும் மக்களின் உளவுறுதி தான் முக்கியமானது.

அதே நண்பன் தான் மேலும் ஒரு தகவலையும் என்னிடம் தெரிவித்தான், அண்மையில் நீங்கள் உருவாக்கியுள்ள வடக்கு – கிழக்கு அபிவிருத்தி இணையத்தளத்தில் “கஜனி” படத்தில் நமால் ராஜபக்சாவின் அன்பு பைங்கிளி, அசின் அக்காவின் குத்தாட்ட பாட்டுக்கு, தடுப்பு முகாம்களில் உள்ள போராளிகளை நடனம் ஆட விட்டு நீங்கள் ரசித்தீர்களாம்.

அதனை படம் பிடித்து இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறீர்களாம். “சுட்டும் விழிச்சுடரே” என ஆரம்பிக்கும் அந்த பாடலுக்கு போரளிகள் பலவந்த நடனம் ஆடுவது தனது நெஞ்சை அடைக்கும் துக்கமாக மாறியதாக அவன் கூறும்போது நானும் ஒரு தடவை கலங்கி விட்டேன்.

அசின் சேச்சியின் பாட்டுக்கு குத்தாட்டம் போடவா நாம் போராடினோம்? அதற்காகவா எம் தலைவர் தனது போராளிகளுக்கு பயிற்சி அளித்தார்?

இதனை கேட்ட பின்னரும் உங்களுக்கு நான் எழுதும் கடிதத்தை தொடர்ந்தால் எனக்கு தான் பச்சத்தண்ணியால் தலையில் ஊத்துவான்கள்.

ஆனாலும் இறுதியாக, என்னிடமும் உங்களுக்கு ஒரு பாட்டு உண்டு மாமா.

இது புதிய பாட்டு, இப்ப தான் வந்தது, “தம்பி அர்சுணா” படம்.

“புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே” “ நரிகள் வேசம் கலையும்போது புலிகள் வென்று காட்டுமே”

“புல்லைக் கண்டு நடுங்கும் மனிதன் இருக்கும்போதே சாகிறான்” “புல்லைக் கத்தி ஆக்கும் மனிதன் இறந்தபின்னும் வாழ்கிறான்”

“தன்னை மட்டும் காத்துக்கொள்ளும் வாழ்வில் இல்லை நன்மையே”

“தன்னைப் போல பிறரைக்காக்கும் தர்மம் வெல்லும் உண்மையே”

“நீ இறுதிவரை போராடு” “செங்குருதியிலும் நீராடு”

“அர்சுணா………………….”

நாங்களும் பாடுவமெல்லே.

முற்றும்.

ஈழம் ஈ நியூஸ்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல