தர்மபுரியை அடுத்த தொப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள்(25). நாகராஜுக்கு பிறவியிலேயே இரு கண்களும் தெரியாது. இவர்களுக்கு நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. பூவரசன்(3) கவியரசு(1) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாள் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.கடந்த சில மாதமாக மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால், குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகளுக்கு சாப்பாடு கூட வழங்கமுடியவில்லை. இதனால், மாரியம்மாள் இரண்டாவது குழந்தை கவியரசுவை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைப்பதற்கு முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை மாரியம்மாள், குழந்தையை எடுத்துக் கொண்டு தொட்டில் குழந்தை மையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு பெண், மாரியம்மாளை தனியாக அழைத்துச் சென்று, "தொட்டில் குழந்தை மையத்தில் குழந்தையை ஒப்படைத்தால் பணம் கிடைக்காது; குழந்தையை என்னிடம் கொடுத்தால் விலைக்கு விற்று 5,000 ரூபாய் வரை பெற்றுத் தருகிறேன்' என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.வறுமையின் கொடுமையில் வாழ்ந்து வந்த மாரியம்மாள், அந்த பெண்ணின் ஆசைவார்த்தையை நம்பி அவரிடம் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்தார். இருவரும் பேசிக்கொண்டதை அந்த வழியாக சென்ற ஊர்க்காவல் படையினர் சிலர் கேட்டனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த பெண் புரோக்கரை பிடித்து சத்தம் போட்டதோடு, மாரியம்மாளுக்கு அறிவுரை கூறி குழந்தையை வளர்க்க முடியாவிட்டால், தொட்டில் குழந்தை மையத்தில் ஒப்படைக்கும்படி கூறினர். அதற்குள், அந்த பெண் புரோக்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தொட்டில் குழந்தை மையத்துக்கு வந்த குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசிய சம்பவம் மருத்துவமனை முழுவதும் பரவியது. மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற மாரியம்மாள், தொட்டில் குழந்தை மைய ஊழியர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. குழந்தையை விற்க முயன்ற மாரியம்மாளிடம் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புரோக்கர், குழந்தையை விற்னை செய்வதற்கு பேரம் பேசியதும், இதேபோல், தொட்டில் குழந்தை மையத்தில் குழந்தைகளை போடுவதற்கு வருவோரை மடக்கிப் பிடிக்கும் புரோக்கர்கள், மருத்துவமனை ஊழியர்கள் சிலரின் துணையுடன் குழந்தையை கடத்தி விற்பனை செய்து வந்த, "திடுக்' தகவல் வெளியானது. அதிர்ச்சியடைந்த போலீசார், தலைமறைவான பெண் புரோக்கரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண் புரோக்கர் பிடிபடும்பட்சத்தில் தொட்டில் குழந்தை மையத்தில் இருந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்யும் கும்பலின் பின்னணி குறித்து முழுமையாக தெரிய வரும்.
தினமலர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக