அண்ணாதுரை, பெரியார் பிறந்த நாள் விழா, தி.மு.க. ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நாகர்கோவில் நடைபெற்றது. இதில் அமைச்சர் வீரப்பாண்டி ஆறுமுகத்துக்கு பெரியார்விருது, குப்புசாமிக்கு அண்ணா விருது, ராஜம்ஜானுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, ஜி.எம். ஷா -வுக்கு கலைஞர் விருது ஆகிய விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நாகர்கோவில் அரசியல் தேர்ச்சி பெற்ற பகுதி. காமராஜர் வெற்றி பெற்ற பகுதி. தி.மு.க.வின் ஜனநாயக ரீதியான எதிர்ப்பையும் மீறி வெற்றி பெற்ற பகுதி. கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைத்த மார்ஷல் நேசமணிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை தந்துள்ளார். இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நான் மீண்டும் நாகர்கோவில் வந்து அந்த மணி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டுவேன். அல்லது திறந்து வைக்க வருவேன். மே மாதம் வந்தால் தேர்தல் கமிஷன் விதிகளை மீறியதாக கூறுவார்கள். அதனால்தான் நான் ஜூன் மாதம் வருவதாக கூறுகிறேன்.
நம்மை ஆளாக்கிய பெரியார், அவர் வழியில் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழா, அவர்கள் உருவாக்கிய தி.மு.க.வின் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. கடந்த கால கட்டத்தில் அண்ணா அறிவாலயத்தை முடக்க வழக்கு தொடர்ந்தார்கள். அப்போது என் மனம் என்ன பாடுபட்டது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். லட்சோபலட்சம் தொண்டர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று நான் தவித்தேன். என்றாலும் லட்சோபலட்சம் தொண்டர்கள் என்னோடு இருந்ததால்தான் உதயசூரியனை காப்பாற்ற முடிந்தது. எனது வாழ்க்கையில் என்னோடு இருந்து எனது நெஞ்சில் குத்தியுள்ளார்கள், சிலர் பாசத்தோடு பழகி என்னோடு பக்கத்தில் நடந்து வந்து எனது விலாவில் குத்தியுள்ளார்கள். சிலர் தூங்கும் போது கொன்று விட்டால் பரவாயில்லை என்று கூறி எனது பக்கத்தில் படுத்து என்னை கொல்ல முயன்றுள்ளார்கள்.
இதையெல்லாம் சமாளித்து நான் இன்று நிற்கிறேன் என்றால் தொண்டர்களின் பலம்தான். எனது பிள்ளைகளுக்காகவோ, பேரன்களுக்காகவோ, எனது குடும்பத்துக்காகவோ அல்ல. தமிழகம் முழுவதும் எனது வீடு. எல்லோரும் எனது உடன்பிறப்புகள். நான் என்றும் உங்கள் வீட்டு பிள்ளைதான். 86 வயதிலுமா உங்கள் வீட்டு பிள்ளை என்று கேட்காலாம். 100 வயதானலும் நான் உங்கள் வீட்டு பிள்ளைதான். திராவிடன் என்ற உணர்வை பெறுவதுதான் எனது உழைப்புக்கு கிடைத்த பரிசாக இருக்க முடியும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன்று பிரச்னை நிலவுகிறது. காலையில் பத்திரிகையை எடுத்தாலோ கைகள் நடுங்குகிறது. காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு என்ன முடிவு எடுக்க போகிறது. இதற்காக காஷ்மீரில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் டி.ஆர். பாலு கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை அங்குள் முடிவை ஏற்பார்களா என்பது பற்றி தெரியவில்லை.
அதுபோல மற்றொரு பிரச்னை 24-ம் தேதி அயோத்தி பிரச்னையில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க போகிறது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எந்த கலவரம் நடைபெற்றாலும் தமிழ்நாட்டில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்கும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நமது வேகம்தான் எதிரணியில் இருப்பவர்களுக்கு வேதனையை தருகிறது. திராவிட இயக்கத்தின் பணி இந்த மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக வருவதால் 12 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் கதிரியக்க சிகிட்சை மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்தார். அமைச்சர் சுரேஷ்ராஜன் வரவேற்று பேசினார். குஷ்பு, வீரபாண்டி ஆறுமுகம், கனிமொழி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர். மத்திய மாநில அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக