சனி, 23 அக்டோபர், 2010

ஜாலியாக வாழ்ந்த ஜுலியா

பிரான்ஸில் நண்பர்கள் புடைசூழ ஜாலியாக வாழ்ந்த ஜுலியா, இருபதாவது வயதில் அயர்லாந்து வந்தார். அதன் பின்னர் ஹாலிவுட்டில் நுழைந்தார். புகழ், பணம் எல்லாவற்றையும் வாரிக்குவித்தார். தனது கணவர் டேனியல் மோடர் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஜுலியா, அதிரடியாக இந்து மதத்திற்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் ஜுலியா ராபர்ட்ஸ் சராசரி நடிகை அல்ல... நடிப்புக்குரிய நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர். இவருடைய `ஈட் பிரே லவ்' என்ற படம் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. பிரபல எழுத்தாளர் எலிசபெத் கில்பெர்ட் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விவாகரத்தான பெண் கதாபாத்திரத்தில் ஜுலியா நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு இந்தியாவில் நடந்த போதுதான், இந்து மதத்திற்கு மாறினார்.

இத்தாலி உணவும், இந்திய பிரார்த்தனையும், பிரேசில் காதலும் ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதே படத்தின் கதை. கதைப்படி ஜுலியா உலகம் முழுவதும் சுற்றி வருவார். ஆன்மிகத்தை தேடி இந்தியா வரும்போது காதல் ஏற்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சினிமாவுக்காக இந்து மதத்தின் பெருமைகள் மற்றும் பாரம்பரியத்தை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட ஜுலியா, உண்மையிலேயே அதில் வெகுவாக ஈர்க்கப்பட்டு இந்துவாக மாறியுள்ளார். இப்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்து கோவில்களுக்கு அடிக்கடி சென்று சாமி கும்பிடுகிறார்!

ஆஸ்கார் விருது பெற்ற அவரை ஆசீர்வதித்த சுவாமி தரம்தேவ், ``ஹரி மந்திரில் ஜுலியா பிரார்த்தனை செய்தபோது, தனது மூன்று குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். அவர்கள் கையில் புனித கயிறை கட்டி நெற்றியில் திலகமிட்டேன்'' என்ற அவர் மதம் மாறிய சம்பவத்தை விவரிக்கிறார்.

ஜுலியா கத்தோலிக்க பெற்றோருக்கு பிறந்தவர். அடுத்த பிறவியில் அமைதியான வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக இந்து மதத்தை தழுவியதாக கூறுகிறார். ``கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். அதன்பின்னர் என் வாழ்வில் பல பிரச்சினைகள் மாயமாக மறைந்து விட்டன. குழப்பமாக இருந்த எனக்கு மன நிம்மதியும், அமைதியும் கிடைத்தது.

கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை தொட்டு கும்பிடும்போது எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. எனது பிரார்த்தனைகளை கடவுள் உடனே தீர்த்துவிடுவது போன்ற பிரமிப்பு ஏற்படுகிறது. இந்து மதம் எனது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜென்மத்தில் என் வாழ்க்கை ஒரே பரபரப்பாகிவிட்டது. அடுத்த பிறவியிலாவது அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்து மதத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளேன். உலகிலேயே சிறந்த மதம் இதுதான், அதுமட்டுமல்ல மனதிற்கு அமைதி தரக்கூடியது இந்த மதம்'' என்று நெகிழ்கிறார். இவருக்கு யோகாவும் தெரியும்! தனது சொந்த பட நிறுவனத்திற்கு `ரெட் ஓம் பிலிம்ஸ்' என்று பெயரும் சூட்டியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

``கஷ்டப்பட்டு நடித்தேன் என்று கூறமுடியாது. ஏனென்றால் இந்த படத்தின் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ஒரு சாதாரண பெண்ணின் உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக இருந்ததால், அப்படியே இயல்பாக நடித்தேன். குடும்பம், குழந்தைகள் என்பது எனக்கு புதியதில்லை. இந்தியாவின் சூழலில் நடித்தது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது'

அதிகாலையில் எழுந்து, உங்களைப் பற்றி நீங்களே ஆராய்ச்சி பண்ணியதுண்டா?

"அப்படி நம்மை நாமே அறியும்போது, கடவுளின் அருகாமைக்கு செல்வதை உணர முடியும். அப்படியொரு அனுபவத்தை நான் பெற்றேன். இத்தாலியில் உணவு குறித்து படப்பிடிப்பு நடக்கும்போது, என்னுடைய உடம்பு அதிக எடை போட்டது. ஆனாலும் நான் அதிர்ஷ்டமானவள். நான் குண்டானாலும் பளிச்சென வெளியே தெரியாது. அந்த மாதிரியான உடலை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். மனசும் எப்போதும் ஒரே மாதிரிதான்!'' கையை மேலே தூக்கி கும்பிடுகிறார் ஜுலியா.

``இந்த படத்தில் ஜுலியாவை தவிர வேறு எந்த நடிகையும், இந்த அளவுக்கு முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்க முடியாது. நாவலை எதை நினைத்து எழுதினேனோ அந்த உணர்ச்சியை அப்படியே வெளிக்காட்டி நடித்துள்ளார். மிக அழகாக நடித்துள்ள ஜுலியாவை எப்படி பாராட்டினாலும் மிகையாகாது. படமும் ஒரு நாவலை போன்றே படமாக்கப்பட்டுள்ளது. சினிமாத்தனம் இல்லை. எல்லா காட்சிகளுமே ஒரு அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தால் எனக்கும், ஜுலியாவுக்கும் இடையே நட்பு இன்னும் மெருகேறியுள்ளது!'' என்று நெக்குருகிப் பாராட்டுகிறார் ஈட் பிரே லவ் படத்தின் மூலக்கதையான நாவலை எழுதிய கில்பெர்ட்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல