போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு
நடிகைகள் சீதாவும், மாயாவும் நேரடியாக களத்தில் இறங்கி பகிரங்க மோதலில் ஈடுபட்டுள்ளனர். சீதா மீது நடிகை மாயா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றையும், பரபரப்பான பேட்டியும் கொடுத்தார்.
மாயாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சீதாவின் நண்பர் நடிகர் சதீஷ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
கமிஷனர் அலுவலகத்தில் நடிகை மாயா
பழம்பெரும் நடிகை மாயா. சென்னை சாலிக்கிராமம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அதே காலனியில் நடிகை சீதாவும் வசிக்கிறார்.
கார்களை நிறுத்துவதில் இருவருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் நடிகை மாயா மீதும், அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் போலீசில் சீதா சார்பில் நடிகர் சதீஷ் ஒரு புகார் மனு ஒன்றை நேற்று முன்தினம் இரவு கொடுத்தார். அந்த புகார் மனு மீது விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். மாயாவை விசாரிப்பதற்காக நேற்று காலையில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். மாயா வீட்டில் இல்லை.
இந்த நிலையில் நேற்று பகல் 11 மணியளவில் மாயா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், நடிகை சீதா மீது நிறைய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
பேட்டி
பின்னர் நடிகை மாயா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் வசிக்கும் தெருவில் தான் நடிகை சீதா வசிக்கிறார். சீதாவின் வீட்டுக்கு தினமும் பகலிலும், இரவிலும் நிறைய பேர் காரில் வந்து செல்வார்கள். அவ்வாறு காரில் வருபவர்கள் வீட்டு வாசல் முன்பு காரை நிறுத்தி விடுகிறார்கள். அப்போது என்னுடைய காரை எடுக்க முடியாமல் நான் அவதிப்பட வேண்டியுள்ளது.
காரை எடுக்கும்படி சொன்னால், சீதா வீட்டில் வசிக்கும் நடிகர் சதீஷ் என்னோடு சண்டை போடுகிறார். எனது மகளை கடத்தி சென்றுவிடுவதாக மிரட்டுகிறார். என் மீதும், என் மகன் மீதும் விருகம்பாக்கம் போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். சீதாவின் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மாயா கூறினார்.
சதீஷ் புகார்
இந்த நிலையில், நடிகர் சதீஷ் நேற்று மாலையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனின் அலுவலகத்தில் மாயா மீது மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தார். புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நடிகை சீதா சார்பில் நீங்கள் புகார் மனு கொடுத்தீர்களா?
பதில்:- சீதாவுக்கும், நான் கொடுத்த புகார் மனுவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பிரச்சினை நடிகை மாயாவுக்கும், எனக்கும்தான். மாயா கடந்த சில மாதங்களாக என்னை மிகவும் தரக்குறைவாக பேசி திட்டி வருகிறார். எங்கள் வீட்டு முன்பு அவரது காரை நிறுத்திக்கொள்கிறார். காரை எடுக்க சொன்னால் அவரது மகன் என்னை அடிக்க வருகிறார். அவரது தொல்லை தாங்க முடியாமல் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 முறை புகார் மனு கொடுத்துள்ளேன். இப்போதும் அதே புகார் மனுவை கமிஷனர் அலுவலகத்திலும் கொடுத்துள்ளேன். வடபழனி உதவி கமிஷனர் விசாரணை நடத்துவார் என்று கமிஷனர் அலுவலகத்தில் கூறியுள்ளனர்.
கணவர் இல்லை
கேள்வி:- நீங்கள், சீதாவின் கணவரா?
பதில்:- நான், சீதாவின் வீட்டில் வசிக்கிறேன். சீதாவின் நண்பராக இருக்கிறேன். அவருக்கு மானேஜராகவும் உள்ளேன்.
கேள்வி:- சீதாவை பற்றி மாயா காலையில் புகார் மனு கொடுத்துள்ளார். அதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
பதில்:- மாயா ஆயிரம் சொல்லட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை. அவர் என்னை ஏற்கனவே புரோக்கர் என்று சொல்லித்தான் திட்டுவார். திட்டிவிட்டு போகட்டும். சீதா என்ன செய்கிறார் என்பதை தெருவில் வசிப்பவர்களிடம் வந்து கேளுங்கள். மாயாவின் அவதூறான பேச்சுக்கு நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். கோர்ட்டையும் அணுகுவோம். மாயா மீதும், அவரது மகன் மீதும் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சதீஷ் கூறினார்.
சீதா செல்போன் பேச்சு
சதீஷ் பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கும் போது, சீதா அவரோடு அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். உடனே பத்திரிகை நிருபர்கள், சீதாவை எங்களோடு பேச சொல்லுங்கள் என்று சதீஷிடம் கேட்டனர். சதீஷும், நிருபர்களிடம் பேசும்படி சீதாவை கேட்டுக்கொண்டார். ஆனால் சீதா செல்போனில் பேச மறுத்துவிட்டார்.
தற்போது படபிடிப்பில் இருப்பதாகவும், போலீஸ் எடுக்கும் நடவடிக்கையை பார்த்த பிறகு இன்னும் இரண்டொரு நாளில் நிருபர்களை சந்திப்பதாகவும் சீதா தெரிவித்தார் என்று சதீஷ் கூறினார். பின்னர் வடபழனி உதவி கமிஷனரை சந்திக்க போவதாக கூறிவிட்டு அவர் காரில் ஏறி சென்றுவிட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக