வெள்ளி, 29 அக்டோபர், 2010

எந்திரன் கதை-உரிமை கோரி மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் போலீஸில் புகார்

எந்திரன் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சமீபத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல எழுத்தாளர் போலீஸ் ஆணையரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தான் எழுதியை கதையை எடுத்து அப்படியே திரைப்படமாக்கியுள்ளதாக எந்திரன் பட இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மீது ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் எந்திரன் படக் கதை தொடர்பாக போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஆர்னிகா நாசர். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். தினமலர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. பல தொடர் கதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

இவர் நேற்று ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் ஆர்னிகா நாசர் கூறியிருப்பதாவது:

நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெளியீடுகளில் ஒன்றான, மாலைமதி இதழில், ஜூலை 13, 1995 இதழில் வெளியானது.

சமீபத்தில் வெளிவந்த, எந்திரன் படத்தை பார்த்த என் வாசகர்கள் பலர், என் கதையில் இருந்து பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டு, அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். படத்தை நானும் பார்த்தேன்.

என் கதையில் வந்த பல சம்பவங்கள் படத்தில் முக்கியமான காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன். காப்புரிமை சட்டப்படி நான் முதல் உரிமையாளர். அப்படி இருக்கும்போது, இயக்குனர் ஷங்கர், இந்த கதையின் முக்கிய பகுதிகளை தன் சொந்த கற்பனையில் உருவான கதை என்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் திரித்து கூறி, பலரை ஏமாற்றி, " எந்திரன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

காப்புரிமை சட்டப்படி, முதல் உரிமையாளரான என் அனுமதியில்லாமல், என் கதையை திரைப்படமாக்கி வெளியிட்டதன் மூலம், எனக்கு பல கோடி ரூபாய் சட்டவிரோத நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். எனவே, என் கதையை திருடியவர்கள் மீது இந்திய காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நாசர்.

இந்தப் புகார் தொடர்பாக நாசர் கூறுகையில், எனது ரோபாட் தொழிற்சாலை கதையின் பிரதி, என்னிடம் இல்லாததால், சமீபத்தில், பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டேன். இதை அறிந்த கடலூர், சிப்காட் ஊழியர் துரை என்பவர், பிரதியை எனக்கு வழங்கினார்.

என் கதையை, இயக்குனர் ஷங்கர் படமாக எடுத்துள்ளது குறித்து கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவர், உதவி கமிஷனர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். அத்துடன், 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சிவில் வழக்கும் தொடர உள்ளேன் என்று தெரிவித்தார்.

எந்திரன் கதை-ஆர்னிகா நாசர் கூறுவதென்ன?:

தனது ரோபோட் தொழிற்சாலைக் கதையில் உள்ள பல முக்கிய அம்சங்களை இயக்குநர் ஷங்கர் எடுத்தாண்டுள்ளதாக கூறியுள்ளார் ஆர்னிகா நாசர்.

அவர் கூறும் குற்றச்சாட்டுக்கள்

1.ஆர்னிகா நாசரின் கதையில் முக்கோணக் காதல். ஹீரோ, ஹீரோயின் மற்றும் ரோபோட். ஹீரோ ஒரு ரோபோட்டை உருவாக்குகிறான். அந்த ரோபோட், தனது காதலியை காதலிக்க ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் தனது ரோபோட்டுக்காக காதலியைத் தியாகம் செய்கிறான்.

- எந்திரனிலும் முக்கோணக் காதல் கதை. ஹீரோ உருவாக்கிய ரோபோட், ஹீரோவின் காதலைய வெறித்தனமாக காதலிக்கிறது. காதலியை அடைவதற்காக பல நாச வேலைகளில் கூட ஈடுபடுகிறது. இறுதியில் கோர்ட் உத்தரவின்படி அந்த ரோபோட் டிஸ்மான்ட்டில் செய்யப்பட்டு விடுகிறது.

2. ஆர்னிகா நாசர் கதையில், ரோபோட் இதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்வதாக வைத்துள்ளார். ஆனால் எந்திரன் படத்தில் இது லேசாக மாற்றப்பட்டு பிரசவம் பார்ப்பது போல வைத்துள்ளார் ஷங்கர்.

3. வில்லனாக மாறும் ரோபோட் முதலில் இரண்டாகவும், பின்னர் பல நூறு பேராகவும் மாறுவது போல தனது கதையில் வைத்துள்ளார் ஆர்னிகா நாசர். இதுவும் எந்திரனில் அப்படியே வருகிறது.

4. ஆர்னிகா நாசரின் கதையில் வில்லனாக மாறும் ரோபோட்டை உடைத்து சிதறடித்து விடுகிறார்கள். ஆனால் அது மீண்டும் புது உருவம் பெற்று வருகிறது. எந்திரனிலும் இதேபோல உள்ளது.

5. சுயமாகவே சிந்தித்து தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தாக ஆர்னிகா நாசரின் ரோபோட் உள்ளது. அதேபோலவே எந்திரன் ரோபோட்டும் புத்திசாலியாக காட்டப்பட்டுள்ளது.

6. எந்திரன் படத்தில் வரும் ரோபோட், விர்ச்சுவல் ரியாலிட்டி பிளேயரைப் பயன்படுத்துவதாக காட்சிகள் உள்ளன. இதே தொழில்நுட்பத்தை தனது கதையிலும் சொல்லியுள்ளார் நாசர்.

7. நூலகத்தில் உள்ள புத்தகங்களின் 36 லட்சம் பக்கங்களையும் ஒரு மணி நேரத்தில் தனது எலக்ட்ரானிக் மூளைக்குள் கிரகித்துக் கொள்கிறது ஷங்கரின் ரோபோட். அதேபோன்ற காட்சி ஆர்னிகா நாசரின் புத்தகத்திலும் உள்ளது.

8. காவல்துறை, சுகாதாரத் துறையில் ரோபோட்டைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் ஆர்னிகா நாசர் மற்றும் எந்திரன் படத்தில் உள்ளன.

9. ரோபோட்டுகளின் அரசன் போல எந்திரன் படத்தில் வரும் ரோபோட் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆர்னிகாவும் அதேபோல காட்டியுள்ளார்.

10. மனித குலத்தை அடிமையாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக ஆர்னிகா நாசரின் ரோபோட்டும், எந்திரன் ரோபோட்டும் காட்டப்பட்டுள்ளன.

இந்த ஒற்றுமைகளை வைத்துத்தான் தனது கதையின் பல முக்கிய அம்சங்களை ஷங்கர் எடுத்துக் கையாண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் நாசர்.

Thatstamil
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல