69 வயதான மேற்படி பெண்மணி பாரிஸ் நகருக்கு அண்மையில் எஸ்ஸோன் எனும் இடத்திலுள்ள தனது வீட்டுக் குளியலறையில் கடந்த முதலாம் திகதி முதல் சிறைப்பட்டிருந்துள்ளார்.
அவர் குளியலறைக்குள் நுழைந்தபோது வெளியிலுள்ள தாள்பாள் தானாக மூடிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்படும் வரை அவர் குளியலறை குழாய் தண்ணீரை மட்டும் குடித்து உயிர்வாழ்ந்துள்ளார்.
வெளியேறுவதற்கு ஜன்னல்கள் எதுவுமற்ற குளியலறையில் சிறைப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து கதவை தட்டிக் கொண்டிருந்துள்ளார்.
ஆரம்பத்தில் மேற்படி வீட்டில் திருத்த வேலை ஏதோ இடம்பெறுவதாலேயே தட்டும் ஒலி கேட்பதாக அயலவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட வீட்டில் ஓயாது சத்தம் வருவதை அவதானித்த அயலவர் ஒருவர், பெண்மணியின் வீட்டின் அருகில் சென்று பார்க்கவுமே உண்மை நிலை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் பறந்தது. விரைந்து வந்த பொலிஸார், பெரும் சிரமத்தின் மத்தியில் குளியலறை கதவை உடைத்து பெண்மணியை மீட்டனர்.
பட்டினியால் உடல் நலிவடைந்து மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட அப்பெண்மணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக