இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கத்தி, வாள், கைத்துப்பாக்கி சகிதம் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்களே மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்த இந்த கோஷ்டியினர் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி 40 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு மானிப்பாய், சுன்னாகம், சங்குவேலி ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன.
மானிப்பாயிலுள்ள வீடொன்றுக்குள் இரவு 8 மணியளவில் புகுந்த நால்வர் அடங்கிய கோஷ்டியினர் கத்தி, வாள், கைத்துப் பாக்கி என்பவற்றைக் காட்டி கணவன் முன்னிலையிலேயே மனைவியிடம் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், காப்பு, தோடுகள் என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
அதேபோன்று, சங்குவேலியிலுள்ள ஆசியர் ஒருவரின் வீட்டுக்குள் இரவு 8.30 மணியளவில் புகுந்த கொள்ளைக் கோஷ்டியினர் கணவன் எதிரில் மனைவியை அச்சுறுத்தி தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இதேபோன்று, உடுவில் தெற்குப் பகுதியிலும் இரு இளம் பெண்களை அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 25 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதில் ஒரு பெண்ணுக்கு அன்றைய தினமே பதிவுத் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதே சங்களில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த காலங்களில் இதேபோன்று இரவுவேளைகளில் வீடுகளுக்குள் புகும் கொள்ளைக் கோஷ்டியினர் மக்களை தாக்கியும், அச்சுறுத்தியும் முடியாத பட்சத்தில் படுகொலை செய்தும் கூட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பொது மக்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவும் பொலிஸாரின் நடவடிக்கைகளினாலும் கொள்ளைச் சம்பவங்கள் சற்றுக் குறைந்திருந்தன. எனினும், அண்மைக் காலமாக மீண்டும் அவை தலைதூக்கியுள்ளதை காணமுடிகின்றது.
எந்தவிதமான ஈவிரக்கமற்ற முறையில் கொள்ளைகளில் ஈடுபடும் இவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. வடபகுதியைப் பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க பாது காப்புப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழும், பாதுகாப்பின் கீழும் இருந்து வரும் இந்நிலையில் பாதுகாப்புக்கு சவால்விடும் வகையில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. கொள்ளைகளில் ஈடுபடுவோர்கள் கத்தி, வாள் மாத்திரமன்றி துப்பாக்கிகளையும் தாங்கியவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே, இது சகல வழிகளிலும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை பாது காப்புப் படையினர் மறந்து போகக் கூடாது.
வட பகுதியைப் பொறுத்தமட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் ஆங்காங்கே நிறைந்து போயுள்ளதன் காரணமாக, இவ்வாறான சம்பவங்கள் மிகவும் எளிதாக நடந்தேறி வருகின்றன. எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் அவர்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவதும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களின் கடப்பாடாகும். மாறாக, இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தாலோ அன்றேல் மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் இல்லாது போனாலோ மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுவார்கள்.
வட பகுதியைப் பொறுத்தமட்டில் கடந்தகால யுத்த நடவடிக்கைகளின் காரணமாக அனைத்தையும் இழந்து பல்வேறு பாதுகாப்புக் கெடுபிடிகளை எதிர்நோக்கி இருந்த மக்கள் தற்போது யுத்தம் முடிவுக்கு வந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள அமைதியின் நிமித்தம் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு மெல்லத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் எந்தவிதமான ஈவிரக்கமன்றி, அவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மனிதாபிமானமற்ற கொள்ளையர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கொள்ளையர்கள் இலகுவாக தப்பிக் கொள்வதும் அவர்களை கைதுசெய்ய முடியாதிருப்பதும் இவ்வாறான சம்பவங்கள் தொடரக் காரணமாகி விடுகின்றன.
இதேவேளை, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வவுனியா பிரதேசத்திலும் அடுத்தடுத்து வீடுகள் உடைக்கப்பட்டதுடன், வீட்டு உரிமையாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டன. இந்நிலையில், குறித்த பிரதேச மக்கள் ஒன்றி ணைந்து இரவுவேளைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பயனாக இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட கோஷ்டியினரை மடக்கிப் பிடித்தனர். இதற்குப் பொலிஸாரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். இறுதியில், இந்த கோஷ்டியினர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே வவுனியாவில் இடம்பெற்று வந்த கொள்ளைகள் சற்று கட்டுக்கடங்கின.
எனினும், மீண்டும் அது தலைத்தூக்கியிருப்பதை காணமுடிகின்றது. அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது, கொள்ளையடிப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களை முற்று முழுதாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் தேவை. சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பிலான தகவல்களை உடனுக்குடன் பொலிஸாருக்கு வழங்கவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் ஏற்ற ஒழுங்குகள் மிகவும் இன்றியமையாதவை.
வடக்கில் இதே வேகத்தில் குற்றச்செயல்கள் அதிகக்குமானால் அது மக்களின் இயல்புவாழ்க்கையை மோசமாக பாதிப்பதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கேள்விக்குறியாக்கச் செய்யும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக