ஞாயிறு, 12 டிசம்பர், 2010

நடிகர் ராமராஜன் படுகாயம்; டிரைவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகர் ராமராஜன் படுகாயம் அடைந்தார். கார் டிரைவர் உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த ராமராஜனுக்கு மதுரை ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்தது.

காரில் பயணம்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ராமராஜன் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டம் முடிந்ததும் அவர் காரில் திருச்செந்தூர் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது அண்ணன் மகன் தாஸ் என்பவரும் சென்றார். காரை ராமராஜனின் உதவியாளரும் டிரைவருமான ராஜரத்தினம் ஓட்டினார். இவர் சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் ஆவார்.

விபத்தில் டிரைவர் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை கடந்து நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே நள்ளிரவு 2 மணி அளவில் சென்றபோது அந்த கார் விபத்துக்கு உள்ளானது. திடீரென்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மைல் கல்லில் மோதிய கார், பின்னர் அருகில் உள்ள பஸ் நிழற்குடை தூணில் மோதி தூக்கீ வீசப்பட்டு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கார் டிரைவர் ராஜரத்தினம் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலி ஆனார்.

ராமராஜன் படுகாயம்

நடிகர் ராமராஜனும் அவரது அண்ணன் மகன் தாசும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

போலீசாரும் பொதுமக்களும், நொறுங்கிக் கிடந்த காருக்குள் இருந்து டிரைவர் ராஜரத்தினத்தின் பிணத்தை மீட்டனர். தலை மற்றும் சில இடங்களில் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்த ராமராஜனையும் மற்றும் தாசையும் மீட்டு ஆம்புலன்சு வேனில் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் ராஜரத்தினத்தின் பிணமும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இடுப்பு எலும்பு முறிவு

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ராமராஜனுக்கும் தாசுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு டாக்டர்கள் ராமராஜனை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்து இருப்பது தெரிய வந்தது. மேலும் முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தாசுக்கு தொடை எலும்பு முறிந்து இருப்பது தெரிய வந்தது.

அ.தி.மு.க. நிர்வாகிகள்

நடிகர் ராமராஜன் விபத்தில் சிக்கியது பற்றிய தகவல் கிடைத்தும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜு, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

மேலும் ராமராஜனின் சொந்த ஊரான மேலூரில் இருந்தும் அவரது நெருங்கிய உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

ஆபரேஷன்

ராமராஜன், தாஸ் ஆகியோரின் உடல்நிலையை பரிசோதித்த பின் இருவருக்கும் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக ராமராஜனும், தாசும் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜபாண்டியன், நரம்பு மண்டல சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்தரராஜன், முகத்தாடை எலும்பு சிகிச்சை நிபுணர் பிரபு ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 3 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல