ஷனி பகவான் கோயில்
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது.
இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கோயில் பகவானின் "வாழும் இல்லம்" என்று கருதுகின்றனர். மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை.
சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6 ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை.
கதவு, பூட்டு இல்லாத வீடு ஒன்று
இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், "நுழைவு வாயிலில் கதவு இல்லை. எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர். மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும்" என்றார். எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது. இதை வங்கி ஏற்கவில்லை.
அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக