ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தில் வெடிமருந்துகள், ஆபாச வீடியோ சீ.டி, ஆணுறைகள் மீட்பு (படங்கள் இணைப்பு)

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளி நொச்சியில் அமைந்துள்ள அறிவகம் அலுவலகத்திலிருந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெடிபொருட்கள், ஆபாச சி.டிக்கள், உள்ளூர் பெண்கள் பலரது படங்கள், ஆணுறைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழ்.குருநகர் பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருள்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை 4.00 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னாலுள்ள சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தில் திடீரென தேடுதல் நடத்தினர்.
இந்தத் தேடுதல் நடவடிக்கைகளின் போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதுடன், சிறிதரன் எம்.பி.யின் பிரத்தியேக செயலாளரான வேழமாலிகிதன் என்பவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த தேடுதல் நடவடிக்கை நேற்று இரவு 8.00 மணிவரை நீடித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ். குருநகர் பகுதியில் மீட்கப்பட்ட சுமார் பதினொன்றரை கிலோகிராம் எடையு டைய சி-4 ரக வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், இந்த வெடிபொருள்களை குருநகர் பகுதிக்கு கடத்தி வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களைக் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிறேம ராஜ் ராஜசேகரன் (வயது – 31) மற்றும் பி.வசந்தன் (வயது – 21) ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின்படி மேற்படி வெடிபொருள்கள் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து குருநகருக்கு எடுத்துவரப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.இந்த வெடிபொருட்கள் கிளிநொச்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்துக்கு எடுத்துவரப்பட்டே குருநகருக்கு பின்னர் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் வேழமாலிதன் இந்த வெடிபொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் தெரியவந்ததையடுத்தே சிறிதரனின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 300 கிராம் எடையுள்ள சி-4 ரக வெடிபொருள்கள் சிறிதரனின் அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலும் ஆபாச சி.டிக்கள், ஆணுறைகள் என்பனவும் அங்கிருந்து மீட்கப்பட்டதாகவும் கூறினர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆபாச வீடியோ படங்கள், பல பெண்களின் பிரத்தியேக படங்கள், ஆணுறைகள் என்பவற்றை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சிறிதரனின் ஊடகச் செயலாளர் பொன்னம்பலம் லக்சுமிகாந்தன் காண்பித்தார்.

இவை தவிர, கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச ரீதியாக அமைந்துள்ள படை முகாம்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான பல கருத்துக்களை வெளிப்படுத்தும் காண்பியங்களுடன் கூடிய ஆவணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து, கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் வேழமாலிகிதனைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றவேளை சிறிதரன் எம்.பி. கொழும்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல