ஞாயிறு, 13 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 13

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் அனுமதியுடன் படைத்துறையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி செய்தி சேகரிக்கும் அனுமதி யாழ்ப்பாணத்தில் இயங்கிய உதயன், வலம்புரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளுக்கும் சுயாதீனமாக இயங்கிய ஊடகவியலாளர்களில் தயாபரன், நவம், நிமலராஜன், தவச்செல்வன் ஆகியோருக்கே இந்த அனுமதி புலிகளால் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வழங்கப்பட்டிருந்தது.

புலிகளின் ஆசீர் வாதத்துடன் தாங்கள் படைத்துறையினருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதாகக் கூறி சிலர் படைத்துறையினருடன் தனிப்பட்ட ரீதியான உறவுகளை வளர்க்க முற்பட்டதுடன் படைத்துறையினருடன் மேலதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தி வன்னித் தகவல்களையும் வழங்க முற்படுகின்றனரா என்ற சந்தேகம் புலிகள் மட்டத்தில் அடிக்கடி மேலெழுவது வழமையான தொன்றாக இருந்தது.

இந்த நிலையில் படைத்தரப்புடன் தொடர்புகளைப் பேணுவதை கூடுதலான ஊடக நிறுவனங்களும், ஊடக வியலாளர்களும் தவிர்த்திருந்தபோதிலும் பலாலியில் இயங்கிய படைத்துறை செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொள்ளவேண்டிய தேவை நிமலராஜன், தவச்செல்வன் போன்றவர்களுக்கு அன்றைய நாட்களில் தேவையான ஒன்றாக இருந்தது. ஏனெனில் இவர்கள் தங்களது ஊடகங்களில் தங்களது குரல்வழியான தகவல்களை செய்தியாக வெளியிடுகின்ற காரணத்தால் புலிகளுக்கு சார்பான செய்திகளை கூடுதலாக வெளியிட்டவாறு தாங்கள் செய்திகளை நியூட்டலாக வெளியிடுகிறோம் என்று காட்டுவதற்காக, படைத்துறையினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் வழங்கும் தகவல்களையும் இறுதியாக தங்களது ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர்.ஆனால் இவர்களது ஊடகங்கள் வெளியிடும் செய்திகளையே மக்கள் நம்பினார்களே தவிர படைத்துறையினரது செய்திகளை இவர்கள் நம்பமுடியாதவாறு திரித்துக் கூறிவந்ததால் மக்கள் இந்த செய்திகளை நம்ப மறுத்துவந்தனர். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இயங்கிய முன்னணிப் பத்திரிகை என்று தாங்களே மார்தட்டிக் கொள்கின்ற பத்திரிகையின் வித்தியாசமான பிரதம ஆசிரியர் பிழையான தகவல்களை செய்தியாக வெளியிட்டுவிட்டு இறுதியாக படைத்துறையினருடன் ஏற்படுத்திய தொடர்புகளையும் செய்தியாக மக்கள் நம்பமுடியாத விதத்தில் வெளியிட்டு வந்தார். இவர்கள் புலிகளுடன் இணைந்து எத்தகைய பணிகளை ஆற்றிய போதிலும் புலிகள் அனைவரையுமே சந்தேகக் கண்ணோட்டத்தில்தான் கவனித்து வந்தார்கள்.

புலிகளது ஒரு பிரிவினர் கையாளுகின்ற விடயம் இன்னொரு பிரிவினருக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக படைத்தரப்புடன் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்புகளை ஏற்படுத்து கின்ற பொழுது இன்னொரு பிரிவினர் குறித்த ஊடக வியலாளர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளையும் எடுத்துவந்தனர். இத்தக வல்களை குறித்த ஊடகவியலாளர்களும் வெளியில் விடுவதில்லை. புலிகளும் தாங்கள் குறித்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்ற விடயத்தை வெளியில் சொல்வதில்லை.

இதில் இரண்டு விடயங்கள் முக்கிய மானவை. புலிகளைப் பொறுத்த வரையில் ஊடகவியலாளர்களை தாங்கள் அச்சுறுத்தினால் அவ்விடயம் பெரியளவில் எடுபட்டால் தமக்கு அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. இவ்வாறு புலிகளால் அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் வெளியில் கூறினால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என அன்றைய நாட்களில் அஞ்சியதுண்டு. இதற்குக் காரணம் புலிகள் ஒரு ஊடகவியலாளரை தமது எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்திவிட்டால் குறித்த ஊடகவியலாளர் யாழ். பல்கலைக்கழகமோ அல்லது வேறு இடங்களிற்கோ சென்று
செய்திகளை சேகரிக்க முடியாத நிலைமையே காணப்பட்டது.

இதனால் புலிகள் விடும் அச்சுறுத்தல்களை மூடிமறைத்து வந்த ஊடகவியலாளர்கள், படையினர் சிறியளவிலான ஒரு அச்சுறுத்தலை விடுத்தால் கூட அதை பெரிய அச்சுறுத்தல் போன்று அன்றைய நாட்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்ததை எவருமே மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த வித்தியாசமான பத்திரிகைக் காரியாலயம் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்துகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் படைத்தரப்பின் மீதும் ஈ.பி. டி.பியினர் மீதும் குறித்த ஊடகங்கள் வேண்டுமென்றே பழியைப் போடுவதில் பின்னிற்பதில்லை.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஊடக வியலாளர்கள் தாக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் படையினர் மீது வழமையான குற்றச்சாட்டுக்கள் எழுவது வழமையானதாகும். இவ்வாறு யாழ்ப்பாணத்தின் முன்னாள் யாழ். மாவட்டத் தளபதியாகவும் பின்னர் இலங்கை படைத்தளபதியாகவும் இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் கீழ் செயற்பட்ட படைத்தளபதி ஒருவர் பலாலிப் படைத்தளத்தில் தவச்செல்வன் என்ற ஊடகவியலாளரை எச்சரித்த சம்பவத்தைப் பெரிதுபடுத்தி அதை ஊடகங்களில் செய்திகளாக வெளியிட வைத்து பிரச்சாரம் தேடிக்கொண்டனர். இந்தப் பிரச்சாரத்தை தமக்கு சாதக மாக பயன்படுத்த விரும்பிய புலிகள், வன்னியில் இருந்தவாறு தவச்செல்வனுடன் தொடர்பை ஏற்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி ஊடாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு வேண்டப்பட்டார்.

இதனை அடுத்து இராணுவத் தளபதிக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவரிற்கும் எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்ச்செல்வனாலும் விநாயகமூர்த்தி எம்.பியாலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இவ்வழக்கு விவகாரம் புலிகள் நினைத்தது போன்று அல்லது குறித்த ஊடகவியலாளர் நினைத்தது போன்று நீண்ட நாட்களுக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவில்லை. இவ்வழக்குத் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிய வழக்காளிகளும் எதிராளிகளும் தமக்குள் உடன்பாடு ஒன்றை எட்டியவாறு இவ் வழக்கை சமரசமாக தீர்த்துக் கொண்டமையால் இவ் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் இவ்வழக்கு விவகாரம் முடிவுக்கு வந்தது.

இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழ்ச்செல்வன் ஏன் வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள் வழக்கை நீடித்திருக்கலாமே என ஆதங்கப்பட்டதும், விநாயகமூர்த்தி தொடர்பில் ஒரு கணிப்பை புலிகள் மேற் கொண்டதும் வன்னியிலிருந்த ஊடகவியலாளர்கள் யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்வாறு புலிகள் தங்களது தேவைக்காக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், பயன்படுத்த முற்பட்ட போதிலும் தமிழ் ஊடகங்கள் புலிகளை உச்சாரக் கொப்பில் ஏற்றியவாறு கீழே தள்ளிவிடுதற்கு தயாராகவே இருந்தன.

யாழ்ப்பாணத்தில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் எங்காவது ஓர் இடத்தில் புலிகள் ஒரு சிறிய தாக்குதலை நடத்திவிட்டால் அந்த தாக்குதலில் படையினர் கொல்லப் படுகிறார்களோ இல்லையோ பத்திற்கும் மேற்பட்ட படையினர் பலி என்ற செய்தி மறுநாள் ஊடகங்களை அலங்கரித்து வந்தது.

இதில் ஏற்கனவே யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிற்கும் ஊடகவியலாளர் தயாபரனிற்கும் இருந்த தொடர்புகள் குறித்துப் பார்த்த நாம், கடற்புலிகளின் தளபதி சூசைக்கும் ஊடகவியலாளர் தவச்செல்வனிற்கும் இருந்த தொடர்புகள் குறித்தும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்திற்கும் வித்தியாசமான யாழ்ப்பாண பத்திரிகையின் பிரதமஆசிரியரிற்கும் இடையில் எத்தகைய நெருக்கங்கள் இருந்தன? அந்த நெருக்கங்கள் எவ்வாறு ஏற்பட்டன? இத்தகைய நெருக்கமான உறவுகளை பேணியவாறு புலிகளை எவ்வாறு இவர்கள் அழிவிற்குக் கொண்டுசென்றார்கள்? என்பது தொடர்பில் மேலும் பல விடயங்கள் சொல்லப்பட வேண்டிஉள்ளன.

அவற்றை முழுமையாக பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.ஏனெனில் புலிகளை வைத்துக்கொண்டு இவர்கள் மக்களை ஏமாற் றியவாறு செய்திகளை வெளியிடும் பணியையும் புலிகளையும் ஏமாற்றி நடந்து கொண்ட விதங்களும் மக்கள் அறியாத மர்மமான விடயங்களாகும். அந்த மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பொழுது அந்த மர்ம முடிச்சில் அப்படி என்ன இருந்தது என்பதை அறிய
உங்களிற்கும் ஆவலாக இருக்கு மல்லவா? தொடர்ந்து பார்ப்போம்.

(வே. அர்ச்சுணன்)
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல