ஞாயிறு, 13 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 14

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் தங்களது தேவைக்காக எவரையும் கையாள தயாராகவே இருந்தனர். தங்களது தேவை முடிந்தவுடன் தாங்கள் பயன்படுத்தியவர்களை உதறித்தள்ளிவிட்டு செல்வதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அரசியல்துறை, புலனாய்வுத் துறை, கடற்புலிகள் அணி, சர்வதேச பிரிவு, ஆகிய நான்கு பிரிவுகளுமே கடும் போட்டியில் இயங்கிய பிரிவுகளாகும்.

குறிப்பாக ஏனைய படைக்கட்டுமானங்கள் மற்றும் ஏனைய பிரிவினர் யுத்த நடவடிக்கைகளை முழுமையாக கையாண்டு வந்த போதிலும், மேற்குறித்த பிரிவினர் மட்டும் யுத்த நடவடிக்கைகளுடன் மக்களுடன் இணைந்தவாறான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

அத்துடன் இவர்கள் தங்களுக்குள் யார் முன்னணியில் இருக்கின்றோம் என்ற தோரணையில் உள்ளக முரண்பாட்டை வளர்த்து வந்தனர். இந்த உள்ளக முரண்பாடானது ஒரு ஈகோ பிரச்சினையாகுமாறு பின் நாட்களில் சூசைக்கும், பொட்டம்மானுக்கும் இடையில் விரிசல் ஏற்படுகின்ற அளவிற்கு வளர்ந்திருந்தது. இந்த விரிசல் காரணமாகவே புலிகளின் ஆயுத விநியோகங்கள் கூட தடைப்படும் அளவிற்கு நிலைமை கட்டுமீறிச் சென்று முள்ளிவாய்க்கால் தோல்விகள் வரை இழுத்துச் சென்றது. இந்த விரிசல்கள் தொடர்பில் ஆழமாகவும், விரிவாகவும் பார்க்கவேண்டிய தேவை உள்ளதால் அவற்றைப் பார்ப்பதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் தொடர்பில் பார்க்கின்ற நாம் அதற்கு வரலாம்.வலிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நவம் ஒரு கிராம அலுவலர். வலிகாமம் உதவி அரச அதிபர் பிரிவில் கிராம அலுவலராகப் பணியாற்றியவாறு யாழ்ப்பாணத்திலுள்ள வித்தியாசமான பத்திரிகையின் வலிகாமம் செய்தியாளராகவும், அதேசமயம் ஆனந்தசங்கரியின் உதவியாளராகவும் செயற்பட்டு வந்தார். ஆனந்த சங்கரிக்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு ஆனந்த சங்கரியை விடுதலைப்புலிகள் போட்டுத் தள்ளும் திட்டத்தை ஒரு கட்டத்தில் தீட்டியிருந்தனர். ஆனந்த சங்கரியைப் போட்டுத் தள்ளுவதற்கு சங்கர் என்ற புலனாய்வுத் துறை போராளி ஒருவரை விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். குறித்த புலனாய்வுத் துறை போராளி ஆனந்த சங்கரியை போடுவதற்கு பல தடவைகள் முயற்சித்த போதிலும் அந்த முயற்சி இறுதிவரை கைகூடவில்லை.

ஆனந்த சங்கரி புலிகளின் தலைவர் பிரபாகரனாக இருந்தாலும் சரி அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி தனது மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை வெளிப்படையாகப் பேசிவிடுபவர் என்பது எல்லோருமறிந்ததே. புலிகளையும் கூட்டமைப்பின் தலைமையையும் விமர்சனம் செய்து வந்த ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறிவிட்டார். உடனடியாகவே இச்செய்தியை தமிழ் ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிட்டதுடன் ஆனந்த சங்கரிக்கு எதிராக தமிழ் பத்தி எழுத்தாளர்களும் தமது வல்லமையை முழுமையாகப் பயன்படுத்தி எழுதித் தள்ளத்தொடங்கினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் மற்றும் யாழ்மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி ஆகியோர் உடனடியாகவே தமிழ்ச் செல்வனிடம் விடயத்தை எடுத்துக்கூறி ஆனந்தசங்கரியை உடனடியாக கூட்டமைப்பிலிருந்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இவ்விடயம் உடனடியாக தமிழ்ச்செல்வனால் தலைவர் பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரபாகரன் முதலில் கோபம் அடைந்த போதிலும் ஆனந்தசங்கரி வெளிப்படையாக கதைக்கின்ற போதிலும், நேர்மையாக செயற்படக்கூடிய ஒருவர் எனவும், சங்கரியைப் பயன்படுத்தி நாங்கள் காரியங்களை சாதிக்கலாம் என்று கூறியதுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடியவர்கள் இவர்களுடன் ஒப்பிடுகையில் சங்கரி பரவாயில்லை. எனவே சங்கரியை எச்சரிக்கை செய்துவிட்டு தொடர்ந்து பயன்படுத்தினால் என்னவென தலைவர் தமிழ்ச்செல்வனிடம் கேட்டார்.

இவ்விடயம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது கஜேந்திரனும் இளம்பரிதியும் இவ்விடயத்தில் இயக்கம் கடுமையாக நடக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் முழுமையாக இவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கஜேந்திரனின்; விருப்பத்திற்கு மாறாக நாங்கள் நடந்துகொண்டால் மாணவர்நிலை எங்களுக்கு சாதகமாக இருக்காது என தமிழ்ச்செல்வன் வழமையான தனது சிரிப்புடன் தலைவரிடம் எடுத்துச் சொன்னார். தலைவரும் ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டு இவ்விடயத்தை உங்களது பொறுப்பிலேயே விடுகின்றேன். இளம்பரிதியுடனும், கஜேந்திரனுடனும் கதைத்து ஒரு முடிவை எடுங்கள் என கூறிவிட்டார்.

இதனை அடுத்து இளம்பரிதியையும், கஜேந்திரனையும் தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியிலுள்ள அரசியல்துறை நடுவப்பணியகத்திற்கு உடனடியாக அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக முடிவுக்கு வரும்வகையில் சங்கரியை கூட்டமைப்பிலிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் பாரதூரமான விளைவுகளை பின் நாட்களில் விடுதலைப் புலிகள் உணரக்கூடியதாக இருந்தது.

ஏனெனில் சங்கரி கூட்டமைப்பை விட்டு விலகியவுடன் சங்கரிக்கு உடனடியாகவே விசேட கொமாண்டோ அணிப் பாதுகாப்பு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. அத்துடன் விசேட பொலிஸ் புலனாய்வு பாதுகாப்பும், அதைவிட சாதாரண பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. ஒரு அரச அமைச்சருக்கு வழங்கக்கூடிய அளவு பாதுகாப்பு சங்கரிக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சங்கரியின் இராஜதந்திர ரீதியிலான தொடர்பு என்பது பரந்து விரிந்து காணப்பட்டமையால் இத்தொடர்பையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த அரச தரப்பு முடிவெடுத்தது.

ஒரு காலத்தில் தற்போதைய கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனிற்கு எத்தகைய பாதுகாப்பையும், குண்டு துளைக்காத காரையும் ஜனாதிபதி சந்திரிக்கா வழங்கியிருந்தாரோ அந்தளவிற்கு சங்கரியும் பின் நாட்களில் அரச தரப்பில் ஒரு முக்கிய கதாநாயகனாக வலம்வரத் தொடங்கினார். இநதிய இராஜதந்திரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை எப்பொழுதுமே பேணிவந்த சங்கரி தனக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் இந்திய ராஜதந்திரிகளுக்கு விளக்கிக்கூறவும் தவறவில்லை.

இந்த ராஜதந்திர உரையாடலை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய அண்டைநாட்டு புலனாய்வு அமைப்பும் அண்டை நாட்டு கொள்கை வகுப்பாளர்களும் பல தடவைகள் சங்கரியை தொடர்புகொண்டு இராஜதந்திர ரீதியிலான கருத்தாடல்களை மேற்கொண்டதுடன் சங்கரியிடமிருந்து புலிகளின் நிலைப்பாடுகள், புலிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற விடயங்கள் தொடர்பில் அடிக்கடி ஆலோசனைகளை பெற்றுக்கொண்டிருந்தனர்.

இவ்வாறு புலிகளிற்கு எதிராக முழுமையாக இறுதிநாட்களில் செயற்பட்டு வந்த ஆனந்த சங்கரியின் செல்லப்பிள்ளையாக இந்த நவம் என்பவர் செயற்பட்டு வந்தார். இவரிற்கும் சங்கரிக்குமிடையில் ஒரு நெருக்கமான உறவினை கட்டியெழுப்புகின்ற பணியினை யாழ்ப்பாணத்தில் உள்ள முதன்மை பத்திரிகையின் வித்தியாசமான ஆசிரியர் கையாண்டு வந்தார். ஏனெனில் சங்கரி தரப்பு தகவல்களையும் அங்கு நடக்கின்ற சம்பவங்களையும் ஒரு புலனாய்வுத் தேடல்போன்று நவத்திடமிருந்து பெற்றுக்கொள்வதே இந்த வித்தியாசமான பத்திரிகை ஆசிரியரின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கம் பெரியளவில் வெற்றி அளிக்காவிட்டாலும் நவம் தனது தனிப்பட்ட தேவைகளையும் அலுவல்களையும் சங்கரி ஊடாக நிறைவேற்றி வந்தார்.

இதனால் நவம் மீது கண்வைத்த யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பரிதி அவரை முழுமையாக தனது கைக்குள் போடும் செயல்திட்டத்தில் இறங்கினார். யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற தகவல்கள் விரைவாக ஊடகங்களில் வரவேண்டும் என்ற ஆசை இளம்பரிதிக்கு இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு நவத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். இதன்மூலம் இவர்கள் நன்மை அடைந்தார்களா? அல்லது இவர்போன்ற தமிழ் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் காரணமாக அழிந்தார்களா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்….

(வே. அர்ச்சுணன்)
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல