ஞாயிறு, 13 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 17

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையே இரகசியத் தொடர்புகள் பல இருந்ததாக ஹெல உறுமய, ஜே.வி.பி உள்ளிட்ட பல்வேறு தென்னிலங்கையில் உள்ள கடும்போக்குவாத கட்சிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த போதிலும் இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நோர்வே அரசாங்கம் மறுத்துவந்திருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும், அரசாங்கமும் கூட, தென்னிலங்கை கடும்போக்குவாத கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருந்தனர்.

ஆனால் உண்மையில் நோர்வே அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே பல்வேறு இரகசிய உடன்பாடுகள் வெளிப்பார்வைக்கு தெரியாத அளவுக்கு எட்டப்பட்டிருந்தமை குறிப்பாக தென்னிலங்கை அப்போது அறிந்திராததாகும்.

அதாவது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஒரு தீர்வு அமுல்படுத்தப்படும் பட்சத்தில், அங்கு விடுதலைப் புலிகள் தங்களது நிர்வாக ரீதியான செயற்பாடுகளை உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வு அமுலாகினால், வடக்குக் கிழக்கு பகுதிகளில் உள்ள கடல்வளத்தில் 40 வீதத்தை நோர்வே அரசிற்கு விடுதலைப் புலிகள் குத்தகைக்கு வழங்க வேண்டும் என்பதே இந்த இரகசிய உடன்பாடாகும்.இந்த இரகசிய உடன்பாட்டிற்கு இரு தரப்பும் கொள்கை அளவில் இணங்கியும் இருந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனும், நோர்வே தரப்பில் விசேட சமாதான தூதுவர் எரிக்சோல்ஹெய்மும் இவ் உடன்பாட்டை எட்டி இருந்தனர்.

நோர்வேயின் சமாதானத் தூதுவரும், நோர்வே அரசாங்கமும் எப்படியும் இலங்கையில் சமாதானத்தை எட்டி விடலாம், ஒரு தீர்வை தமிழ் மக்களிற்கு கிடைக்கச் செய்யலாம் என்ற அதீத நம்பிக்கையுடன் செயற்பட்ட போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசுடன் பேசுவதன் ஊடாக எந்தவொரு தீர்வு முயற்சியையும் எட்டிவிட முடியாது, அரசுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை ஏதோ ஒரு கட்டத்தில் நிச்சயமாக முறிவைச் சந்திக்கும் என்ற முழு நம்பிக்கையுடனேயே பேச்சில் ஈடுபட்டனர்.

இவ்வாறே இலங்கை அரசாங்கமும் எண்ணியது. புலிகளுடன் பேசுவதன் ஊடாக இணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. புலிகள் ஒருபோதுமே இணக்கத்திற்கு வரமாட்டார்கள். தாங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே பேச்சுவார்த்தை முறிவது நிச்சயம் என்ற முடிவுடனேயே அரசாங்கத் தரப்பினரும் பேச்சில் ஈடுபட்டனர்.

விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் எதிர்பார்த்தது போன்று பேச்சுவார்த்தை முறிவடைந்து யுத்தம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் முடிவுகளும் எட்டப்பட்டன. ஆனால் இதில் நோர்வே போட்ட கணக்கு மட்டும் பிழைத்து விட்டது எனலாம். விடுதலைப் புலிகள் தங்களது கடைசி நிமிடம் வரை போராடுவது என்ற கோட்பாட்டுடன் போரில் ஈடுபட்டனர். இவ்வாறு அரச படைகளும் விடுதலைப் புலிகளை முற்றாக துடைத்தழிக்கும் வரை போரை முன்னெடுப்பது என்ற உறுதியுடன் போரில் ஈடுபட்டு புலிகளை முற்றாக துடைத்தழித்தனர்.

ஆனால் அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் ஏற்பட்டிருந்த சமாதான சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டுமென நோர்வே அரசாங்கம் எண்ணியது. அதேபோன்றே விடுதலைப் புலிகளும் நோர்வேயிடம் இருந்து எவ்வளவு உச்ச பயன்களை பெறவேண்டுமோ அவற்றை பெறுவது என்பதில் உறுதியாக இருந்தனர்.

புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களிற்கு தேவையான தேவைப்பாடுகள் தொடர்பிலான பட்டியல்களை ஏற்கனவே தமிழ்ச்செல்வனிடம் சமர்ப்பித்திருந்தனர். இவ்வாறு புலிகளின் குரல் வானொலியினரும், தங்களிற்கு தேவையான பொருட்களின் பட்டியல்களை தமிழ்ச் செல்வனிடம் சமர்ப்பித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் கிளிநொச்சியில் இயங்கிய சமாதான செயலகத்தில் நோர்வேத் தூதுவருக்கும், விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்ச்செல்வனால் தங்களது இயக்கத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலான பட்டியல் ஒன்று நோர்வே தூதுவரிடம் காண்பிக்கப்பட்டது.

அதைப் பெற்றுக்கொண்ட எரிக்சோல்ஹெய்ம் உங்களது தேவைப் பட்டியலில் உள்ள எல்லா விபரங்களையும் நாங்கள் பார்வையிட்டு எங்களால் உங்களது இயக்கத்திற்கு உதவக்கூடிய வகையில் உதவிகளை செய்யலாமெனவும், ஆனால் ஆயுதங்கள் வெடிபொருட்கள் உள்ளிட்ட யுத்த முன்னெடுப்பிற்குரிய எந்தவொரு பொருட்களையும் நோர்வே அரசாங்கம் வழங்கமாட்டாது எனவும் உடனடியாகவே கூறினார்.

உங்களது தேவைப் பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் நாங்கள் வழங்க முடியாது. ஏனெனில் இராஜீக ரீதியில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு நாங்கள் எதனையும் சாதித்துவிட முடியாது, செய்யவும் முடியாது. உங்களது பட்டியலில் உள்ளவற்றில் புலிகளின் குரல் வானொலிக்குரிய அதிநவீன உபகரணங்களை நாங்கள் வழங்க முடியும், இதனை இலங்கை அரசாங்கம் மறுத்தாலும், இராஜதந்திர ரீதியிலான பல்வேறு கருத்தாடல்கள் ஊடாக நாங்கள் இலங்கை அரசை சம்மதிக்க வைப்போம்.

சமாதான சூழல் நிலவுகின்ற இந்த சூழ்நிலையில் சமாதானம் தொடர்பிலான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் புலிகளிற்கு இவற்றை வழங்குகின்றோம் என்று நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுவோம். யுத்தம் முடிவுற்று அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற சூழ்நிலையில் ஊடக ரீதியிலான சமாதானப் பரப்புரைகளிற்கு ஒரு தரப்பிற்கு உதவுவது வழமையானது அதுவும் அவர்களிடம் இல்லாத ஒரு பொறிமுறை சார்ந்த தொடர்பாடல் சாதனத்தை வழங்குவது ஒருபோதும் குற்றமாகவும் இருக்காது, இலங்கை அரசாங்கத்தை இந்த விடயத்தில் வளைத்துப்போட்டு உடன்பாட்டிற்குக் கொண்டுவர நோர்வேயால் நிச்சயமாக முடியும் என எரிக்சோல்ஹெய்ம் தமிழ்ச் செல்வனிடம் உறுதியளித்தார்.

எந்த நம்பிக்கையுடன் புலிகளின் ஊடகத்திற்கு உதவுவதற்கு உறுதியளித்தார்? அந்த உறுதிமொழியை எப்படி நோர்வே நிறைவேற்றியது? தமிழ் ஊடகங்கள் விடுதலைப்புலிகளை எவ்வாறு அழித்தனர்? தொடர்ந்து பார்ப்போம்.

வே. அர்ச்சுணன்
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல