புதன், 14 ஏப்ரல், 2010

தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ள நிலையில் வடபகுதி தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த போதும் ஆளும் கட்சிக்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு “செய்தியொன்றை' வழங்கியுள்ளனர். இதுதான் “தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள், நம்பிக்கையை பெற்றுக் கொள்ளுங்கள்'' என்பதாகும்.

அத்தோடு இத்தேர்தலின் வெற்றிக்கு முதன்மையானவர் அதாவது, “மேன் ஒப் த மெட்ச்“ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஆவார்.

ஜனாதிபதியின் பாரிய “கட் அவுட்டுகளுக்குள்'' தம்மை வெளிப்படுத்தி வேட்பாளர்கள் வெற்றியைப் பெற்றுக் கொண்டனறென்றால் அது மிகையாகாது.

ஜனாதிபதித் தேர்தல் உட்பட நாட்டில் நடந்து முடிந்த அனைத்துத் தேர்தல்களினதும் வெற்றியின் கதாநாயகனாக ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் உள்ளனர்.

முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை, ஆளுமை, தேசியத்துவம், மக்களுடனான சுமுகமான தொடர்பாடல்கள் போன்றன வெற்றிக்கு வழி வகுத்தன என்றே கூற வேண்டும்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் ஆளும் கட்சிக்கு குறிப்பிடத்தக்க போட்டி இருக்கவில்லையென்பது உண்மையாகும். பந்தயத்தில் தனிக் குதிரையாக ஓடிக் கொண்டிருந்தது ஆளும் தரப்பு.

ஐ. தே. கட்சியின் பிரசாரங்கள் மந்தகதியில் காணப்பட்டன.

அடிமட்ட மக்களை பிரசாரங்கள் சென்றடையவில்லை. அரசாங்கம் முன்வைக்கும் வாதங்களுக்கு பிரதிவாதங்கள் முன்வைக் கப்படவில்லை. ““ஏனோ தானோ'' என்ற மனப் போக்கிலேயே ஐ. தே. கட்சி காணப்பட்டது.

நாட்டில் மேம்பாலங்கள், பாலங்கள் அமைக்கப்பட்டமை, வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டமை, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டமை, துறைமுக அபிவிருத்திகள் தொடர்பில் ஆளும் தரப்பு பிரசாரங்களை மேற்கொண்டது.

இவ்வாறான நடவடிக்கைகளின் போது சிலரின் ““சட்டைப் பைக்குள்'' பணம் போய் சேர்ந்திருக்கலாம். அது விமர்சிக்கப் பட வேண்டும். எதிர்காலத்தில் அதனை தடுப்பதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்க் கட்சி, “அரசாங்கம் பாலங்களை அமைப்பது பிள்ளைகளை ஆற்றில் வீசுவதற்கு“ என்ற கருத்தை வெளியிட்டது.

அரசியலமைப்பை மாற்ற வேண்டும், தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும், அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோரி அரசாங்கம் பிரசார மேடைகளில் கருத்துக்களை முன்வைத்த போது இதற்கான பதிலை எதிர்க் கட்சி மக்களுக்கு வழங்கியதா?
இல்லை. மாறாக விலைவாசி உயர்வு, மீன் விலை என்ன என்ற விடயங்களையே முதன்மைப்படுத்தியது.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் முக்கியமானதாகும். அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது ஆளும் கட்சியின் கூப்பாடாகும்.

ஆனால், பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தோர் மத்தியில் நாட்டின் இறை யாண்மை, சுயாதிபத்தியம், கௌரவம் என்ற கோட்பாடுகள் வேரூன்றியுள்ளன.

சிறுபான்மை இன மக்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு. எனவே அதற்கேற்றவாறு மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுக்காது ““மீன் விலை என்ன?'' எனக் கேள்வி எழுப்பினால் எதிர்க்கட்சியை மக்கள் எடை போடும் விதத்தை கூட்டிக் கழித்துப் பார்த்தால் தெரிந்து விடும்.

அது மட்டுமல்ல ஐ. தே. கட்சியின் “கோர்ட் டை'' கலாசாரம் மாற வேண்டும்.

கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் ஐ. தே. கட்சியினர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர்.

கொழும்பிலிருந்து கொண்டு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி, செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தால் தேர்தல்களில் வெற்றி பெற முடியுமென்ற மேற்குலக பாணியையே ஐ. தே. கட்சி பின்பற்றி உள்ளது.

மொனராகலையிலுள்ள பின்தங்கிய கிராம விவசாயிக்கு, சாவகச்சேரியிலுள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கு, கல்முனையில் வாழும் மீன் பிடித் தொழிலாளிக்கு, பெலியத்தையிலுள்ள கிராமவாசிக்கு இச்செய்திகள் போய் சேருமா? அம்மக்கள் இவை தொடர்பில் ஆர்வம் காட்டுவார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

கொழும்பு உட்பட நகரங்களையே இச்செய்திகள் அதிகளவில் சென்று சேரும்.
இந்தப் புறச் சூழலை எதிர்க்கட்சி இன்னமும் உணர்ந்து கொள்ளவில்லை. அக்கட்சியின் தோல்விகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களைக் கவரும் விதத்தில் தனது வியூகங்களை முன்னெடுக்கின்றார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இதற்கான பல உதாரணங்களை முஇன்வைக்க முடியும்.

தென் பகுதிக்கான விஜயங்களை ஜனாதிபதி மேற்கொண்ட போது மக்கள் சனநடமாட்ட மிக்க இடங்களில் காரை நிறுத்தி அவர்களோடு அளவளாவி சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தனது பழைய நண்பர்கள், எதிர்க்கட்சியினரை சார்ந்தோரின் வீடுகளுக்கு திடீரென விஜயம் செய்து தேநீர் அருந்தி விட்டு வந்தார்.

இது போன்ற சர்வசாதாரணமான விடயங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

பொதுத் தேர்தல் பிரசாரக் காலங்களில் முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் கூட்டம் ஜாஎலையில் இடம்பெற்றது.
இரவு நேரம் அமைச்சர் மேடையில் பாட்டுப்பாடிக் கொண்டிருந்தார்.

திடீரென மக்கள் மத்தியிலிருந்து இன்னு மொரு பாட்டுப் பாடுங்கள் என்ற கோஷம் எழுந்து அமைச்சர் திரும்பிப் பார்த்துள்ளார்.

அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசன்னமாகியிருந்துள்ளார். இதுவொரு திடீர் விஜயம். இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்தும்.

எதிர்க் கட்சியின் தோல்விக்கு ஆட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள், மக்கள் மத்தியுடனான தொடர்பாடல்கள் இல்லாமையும் ஒரு காரணமெனலாம்.

இனியென்ன?

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு மீண்டும் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

அரசாங்கம் மக்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய காலகட்டம் இதுவாகும்.

இந்தப் பாரதூரமான கடமை ஜனாதிபதியைச் சார்ந்ததாகும்.

அமைச்சர்களை நியமிக்கும் போது திறமையானவர்களை, மக்கள் சேவையாற்றக் கூடியவர்களை நியமிப்பதில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

நல்ல உள்ளம் படைத்தவன், நீண்ட கால ஆதரவாளன் என்ற அளவு கோல்களை கைவிட்டு திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கி நல்லாட்சியை முன்னெடுக்க வேண்டும். இல்லா விட்டால் மக்களின் குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதியின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.

வடபகுதி தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நம்பிக்கையிழந்த வடபகுதி தமிழ் மக்கள் தமது உரிமை களையும், பிரச்சினைகளின் தீர்வுக்கும் தமிழ் கூட்டமைப்பு ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளதோடு ஐ. தே. கட் சிக்கு மூன்றாம் இடத்தையும் கொடுத்துள்ளனர்.

தமிழ் மக்களது இத்தீர்ப்பானது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அதாவது ஆளும் கட்சிக்குள் “இனவாத“ சக்திகள் பங்காளிகளாக இருக்கின்றனர்.
எனவே எவ்வாறு ஜனாதிபதி எமக்கு தீர்வுகளை வழங்கப் போகிறார் என்ற சந்தேகத்தில் தமிழ்க் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

அதே நேரம் ஜனாதிபதியின் கட்சிக்கும் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றை வடபகுதி மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இனி.. அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலேயே தங்கியுள்ளன.

இந்நாட்டில் பெரும்பான்மை, சிறு பான்மை இனங்கள் இல்லை. இருப்பது நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற இரு பிரிவினரேயாவர்.

இன, மத, மொழி ரீதியில் பிளவுபடாமல் நாமனைவரும் “இலங்கையர்கள்“ என்று சொல்லும் பொற்காலம் பிறக்க வேண்டு மென்பது ஜனாதிபதியின் திடசங்கற்பமாகும்.

எனவே நிச்சயம் தமிழ் மக்களுக்கான தீர்வை ஜனாதிபதி வழங்குவார் என்பதில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அந்த நம்பிக்கை வீண் போகலாகாது.

எந்தச் சக்தி முட்டுக்கட்டை போட்டாலும் தமிழ் மக்களை மீள் குடியேற்றி வடக்கின் வசந்தத்தை உண்மையாக்கி கிழக்கின் உதயத்தை ஜனாதிபதி நிரந்தரமாக்க வேண்டும்.

ப. பன்னீர்செல்வம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல