வெள்ளி, 18 ஜூன், 2010

கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி சுரிதா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சுரிதா திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால், கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற கதவை சாத்திக் கொண்ட மாணவி, சிறிது நேரத்தில் யாருடைய உதவியும் இன்றி தானாக குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் வகுப்பறை வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறைக்கு சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு, உள்ளே சென்று பார்த்த மாணவிகள் கழிப்பறைக்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர்.

இதையடுத்து ஆசிரியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். சரியான நேரத்தில் வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது, என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் பள்ளி கழிப்பறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை கிடந்ததால், குழந்தையை பெற்றெடுத்தது மாணவியாகத்தான் இருக்கும் என முடிவு செய்த ஆசிரியர்கள், சந்தேகத்தின் பேரில் மாணவி சுரிதாவை விசாரித்தனர். முதலில் மறுத்த மாணவி, பின்னர் தான் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு யாருக்கும் தெரியாமல் 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பள்ளி கழிப்பறையிலேயே குழந்தை பெற்றேடுத்த மாணவியை பார்த்து மற்ற மாணவிகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட் மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவியைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் ஊர் கிராமம் என்பதால் அவரது வீட்டு முன் ஏராளமானோர் கூடி விட்டனர். கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று பலரும் மாணவியிடம் கேட்டனர். ஆனால் மாணவி கண்ணீர் வடித்தாரே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை. மாணவியின் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். தாயாரின் கண்காணிப்பில்தான் மாணவி படித்து வந்தார். தாயாருக்கும் தெரியாமல், பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழிகளுக்கும் தெரியாமல் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தது எப்படி என பலரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மாணவியின் கிராமமே இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல