Don Ritchie
சிட்னி : வாழ்க்கை வெறுத்து, அதை முடித்துக் கொள்ள ‘சூசைட் பாயின்ட்’ வரை வந்து விட்டாலும்... ஆஸ்திரேலியர்களை கடைசி விநாடியில் காப்பாற்றி விடுகிறார் ஒரு முதியவர். இதுவரை திருந்தி வாழ்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில்.ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் அருகே உள்ள மலைப்பாங்கான இடம் ‘தி கேப்’. நம்மூர் ஊட்டியில் சூசைட் பாயின்ட் போன்றது. 1800ம் ஆண்டுகளில் இருந்தே தற்கொலை பிரியர்கள் உயிரை விட்டு ஆவியாகும் இடம்.
அங்கே சில நூறு அடி தூரத்தில் ஒரு வீடு. அதில் வசிப்பவர் டான் ரிச்சி (Don Ritchie). இப்போது வயது 84. அதிகாலை எழுந்ததும் கண்ணாடி ஜன்னலைத் திறந்து அருகே நாற்காலி போட்டு அமர்ந்து விடுவார் ரிச்சி. சூசைட் பாயின்ட் மீதே அவரது பார்வை இருக்கும். யாராவது தற்கொலை செய்து கொள்ள வந்திருந்தது தெரிந்தால், தனது ஊன்றுகோலுடன் விரைவார் மலை உச்சி நோக்கி. தற்கொலை மனிதர் குதிக்கப் போகும் கடைசி விநாடி... ‘ஏன் என்னுடன் நீங்கள் ஒரு கப் டீ குடித்து விட்டுப் போகக் கூடாது?’ என்பார் ரிச்சி. அவரது கனிவான குரலையும், புன்னகையையும் பார்த்து, தற்கொலையை அப்போதைக்கு தள்ளி வைக்காதவர்கள் குறைவு.
அவர்களுடன் தனது வீடு திரும்பும் ரிச்சி, சில நிமிடங்களில் தற்கொலை எண்ணத்தை மாற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைப்பதில் தனது பணியை வெற்றிகரமாக முடிப்பார். இப்படி அவர் இதுவரை 160 பேரை காப்பாற்றியதாக தகவல். ஆனால், காப்பாற்றியவர்களை அவர் கணக்கு வைத்துக் கொள்வதில்லை என்பதால், எண்ணிக்கை பல நூறை தாண்டும் என்று ரிச்சியின் மனைவி மோயா கூறுகிறார்.
இதுபற்றி ரிச்சி கூறுகையில், ‘‘என்னால் காப்பாற்ற முடியாதவர்களும் உண்டு. அவர்களது பிணத்தை மீட்க உதவுவேன். மீட்புப் படையினருக்கு டீ கொடுத்து தேற்றுவேன். நான் காப்பாற்றிய பலர், என்னுடன் போராடியதுண்டு. அதுபோன்றவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும்போதே வீட்டின் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவி, போலீசுக்கு போன் செய்து விடுவாள்’’ என்றார்.
இப்படி உயிர் காப்பதையே கடமையாக நினைத்து வாழும் பெரியவர், ஆபத்தை சந்திக்காமலும் இல்லை. ஒருமுறை ஒரு பெண்ணை காப்பாற்றும்போது ரிச்சியையும் சேர்த்துக் கொண்டு குதிக்க முயன்ற அதிர்ச்சியும் நடந்தது. இருப்பினும் அதிலிருந்து மீண்டு, இன்னமும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ எனத் தொடர்கிறார் இந்த புதுமையான ‘புன்னகை மன்னன்’.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக