நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு என்னவிதமான ஆடை அணியவேண்டும் என்று ஒரு சர்ச்சை இம்முறை எழுந்திருந்தது.
ஆண்கள் வேட்டி, சால்வை, பெண்கள் சேலை, பாவாடை, தாவணி என, கலாசார உடைகளை அணியவேண்டும் என்று, திருவிழா தொடர்பாக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையொட்டியே இந்தச் சர்ச்சை உருவாகியிருந்தது – அல்லது உருவாக்கப்பட்டிருந்தது.
ஆண்களும், பெண்களுமாக, பக்தர்கள் அனைவரும் அணியவேண்டிய உடைகள் பற்றியதான பொதுவான இந்த அறிவுறுத்தல், பெண்களது உடைபற்றிய ஒரு விவகாரமாக மட்டுமே ஊடகங்களில் அதிகளவில் வலியுறுத்தப்பட்டதே இந்தச் சர்சைக்குக் காரணமாகியது.
கலாசாரம் என்பது ஏதோ பெண்களின் உடையில் மட்டும்தான் தங்கியிருப்பதுபோல, பெண்களுடைய ஆடைகளை மையமாகக் கொண்டு பெரும் வாதப் பிரதிவாதங்கள், பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும், ஃபேஸ் புக் அரட்டையிலும் சக்கை போடு போட்டன.
எல்லோருடைய பேச்சினதும் தொனிப்பொருள் பெண்களுடைய உடைகள் பற்றியதாகவே அதிகம் இருந்தது. பெண்கள் ‘அரைகுறை’ ஆடை அணிவதாகவும், இதனால் தமிழ்க் கலாசாரம் சீரழிவதாகவும் பலரும் கண்ணீர் வடித்தனர்.
இதில் சுவாரஸ்யமான சில வாதங்களை இணையத்தள அரட்டையில் காணக்கிடைத்தது.
“பெண்கள் அரைகுறை ஆடை அணிவதால் ஆண்கள் கெட்டுப்போகிறார்கள் என்றால், பிரச்சினை பெண்களுடைய உடையில் இருக்கிறதா அல்லது ஆண்களின் கண்களிலா?” என்று ஒரு அன்பர் தர்க்கித்திருந்தார்.
இன்னுமொரு பெண்மணி ஒருபடி மேலே போய், “பெண்கள் அரைகுறை ஆடை அணிவதால் ஆண்களது மனம் சஞ்சலப்படுகிறது என்கிறார்களே? மேலங்கி அணியாத ஆண்களைக் கண்டால் எனது மனமும்தான் சஞ்சலப்படுகிறது. அப்போ ஆண்கள் எல்லாம் கோயிலுக்கு மேலங்கி அணிந்து செல்லவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்போகிறீர்களா?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த வாதப் பிரதிவாதங்கள் சரியா, பிழையா என்பதற்கப்பால், கலாசாரம் என்பதை உடையுடன், அதுவும் பெண்களுடைய உடையுடன் மட்டும் மட்டுப்படுத்திப் பார்க்கும் நமது கண்ணோட்டத்திலுள்ள குறைபாட்டை இவை சுட்டிக்காட்டுவதாக இல்லையா?
ஏ-9 பாதை திறந்த பின்னர் பெருமளவு மக்கள் தென்னிலங்கையிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் யாழப்பாணம் வருவதே, பெண்களுடைய ஆடைகள் பற்றிய அதீத அக்கறைக்கும், இதனால் கலாசாரம் சீரழிந்துவிடுமே என்ற அனேகரது ‘ஆதங்க’த்துக்கும் பிரதானமான காரணமாக -நியாயமாகச் சொல்லப்பட்டது.
இது ஒரு வகையில், யாழ்ப்பாணத்துக்கு வருவோரை எதிரிகளாக நோக்கும் தப்பான மனோபாவத்தை நம் மத்தியில் வளர்க்கவும் செய்தது.
வந்தாரை வரவேற்று, விருந்தோம்பும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கொண்டாடும் நமது பண்பாட்டு விழுமியங்களை இது கேள்விக்குட்படுத்திவிட்டது.
கலாசாரத்தை வெறுமனே ஆடையில் மட்டும், அதுவும் பெண்களுடைய ஆடையில் மட்டும் தொங்கும் சமாசாரமாக நோக்குவதே இந்தச் சிக்கலுக்குக் காரணம். கலாசாரம் என்பது, பேசும் மொழி, அணியும் ஆடை, அன்பு, பண்பு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், மனிதநேயம் என்று நீளும் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய ஒன்று. பரஸ்பரப் புரிந்துணர்வு இதன் அத்திவாரம்.
இவை எல்லாவற்றையும் இணைத்த ஒரு தமிழ்க் கலாசாரம், யாழ்ப்பாணத்துக்கேயுரிய ஒரு சிறப்புக் கலாசாரம் நம் மத்தியில் இருந்தது – இருக்கிறது. இதனை வெறுமனே பெண்களுடைய உடைகளுடனும், இளைஞர்களுடைய நடத்தையுடனும் மட்டுப்படுத்தி, அவர்களால்தான் கலாசாரம் சீரழிகிறது என்று அவர்களை மட்டும் குற்றவாளிகளாக்குவது நியாயமற்ற விடயம்.
எல்லோருமாக இணைந்து, இருப்பவற்றைப் பேணி, சுருதிப் பிசுகுகளைச் சீர்செய்து மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கலாசாரத்தை வளர்த்தெடுப்பதே செய்யவேண்டிய காரியம்.
பவித்ரா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக