திங்கள், 11 அக்டோபர், 2010

சி.ஐ.டி.யினரின் வார்த்தையை நம்பி நான் ஆடை அணிந்து கொண்டு காத்திருந்தேன் - இளந்திரயனின் மனைவி

எனது கணவரை காண்பிப்பதற்கு அழைத்துச் செல்வதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்(சி.ஐ.டி.யினர்) என்னிடம் தெரிவித்தனர்.

முதலில் மறுப்பு தெரிவித்த நான் பின்னர் ஆடைகளை அணிந்து கொண்டு காத்திருந்தேன். ஆனால், இன்றுவரையிலும் அவரை காட்டவில்லை என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் ராசையா சிவரூபனின் (இளந்திரயனின்) மனைவி சாட்சியமளித்தார்.சிறு காயத்துடன் 2009 மே மாதம் 16ஆம் திகதி அவர் வந்தபோது மருந்து போடுவதற்காக அழைத்து செல்வதாகவே என்னிடம் படையினர் தெரிவித்தனர் என்றும் அவர் சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை சாட்சியமளிக்கையிலேயே இளந்திரையனின் மனைவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், வன்னியிலிருந்து 15 மே 2009ஆம் திகதியன்று இடம்பெயர்ந்து சென்றபோது, படையினர் எங்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். எனது கணவர் சிறு காயங்களுடன் எங்களுடன் வந்தார். கைகளிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஓமந்தையில் வைத்து எனது கணவரை படையினர் அழைத்துச் சென்றனர். 15 நாட்கள் அவரைப்பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் நான் பிள்ளையுடன் முகாமிற்கு சென்றுவிட்டேன்.

15 நாட்களுக்கு பின்னர் வருகைதந்தோர் தாங்கள் சி.ஐ.டி.யினர் என்றும் கணவரை காண்பிப்பதற்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் வைத்தியசாலையிலேயே சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறினர். உங்களை எவ்வாறு நம்புவது எனக் கேட்டேன்.

உடனே அவர்கள் சி.ஐ.டி.யினர் என்பதை உறுதிப்படுத்தினர்.

உங்களுடன் வருவதற்கு பயமாக இருக்கின்றது என்றேன். ஆடைகளை அணிந்து கொண்டு தயாராக இருக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அதன் படி நான் தயாராக இருந்தேன். எனினும் என்னை அழைத்துச்செல்வதற்கு அவர்கள் வரவில்லை.

விடுவிக்கப்பட்ட நான் 2009 ஆகஸ்ட் 08ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வந்து விட்டேன். படையினர் வாகனத்திலேயே எங்களை அழைத்து வந்து விட்டனர். பிள்ளைகள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். புலமைப் பசில் பரிட்சையில் எனது மகள் 130 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர்களுக்காவது எனது கணவரைக் காட்டுங்கள் என ஆணைக்குழுவினடம் கோரி நின்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல