இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.இது ஈழ ஆதரவாளர்களிடையே வேதனையான விஷயமாக இருந்து வந்தது.
இந்நிலையில் ஈழப் போராட்ட வரலாற்றை காஷ்மீர் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார் பேராசிரியர் கிலானி.
‘மே 17 இயக்கம்’ சார்பில் ஈழப் போராளி திலீபன் நினைவு நாள் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது.இதில் காஷ்மீர் விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் மனித உரிமைப் போராளி கிலானி கலந்து கொண்டார்.யார் இந்த கிலானி டெல்லி பல்கலைக்கழகத்தின் உருதுப் பேராசிரியரான கிலானி நாடாளுமன்றத் தாக்குதலின் போது கைது செய்யப்பட்டார்.தாக்குதலுக்கு இவர்தான் மூளையாகச் செயல்பட்டார் என்று கூறி தூக்குதண்டனை வரை கொண்டுபோய் நிறுத்தியது காவல்துறை.விசாரணையில் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளானார்.உயிர் பிழைத்துக் கொண்டாலும் இன்னமும் அவர் உடலில் நான்கு புல்லட்டுகள் இருக்கின்றனவாம். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் எனத் தெரியவில்லை என போலீஸ் சொன்னாலும் ‘ரா’ வின் வேலைதான் என்கிறார்கள் கிலானி ஆதரவாளர்கள். அவர் பேசும்போது,
‘‘காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு. 1850-களில் அங்கு செல்ல வேண்டுமென்றால் விசா அவசியம்.விசா இல்லாமல் சென்ற ஜன சங் தலைவரையே கைது செய்து சிறையிலடைத்தது காஷ்மீர் அரசு. இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் போது ஐ.நா.தலையிட்டு போர் நிறுத்தம் செய்ததோடு ராணுவம் நிற்கும் இடத்தில் லைன் ஆஃப் கண்ட்ரோலை உருவாக்கியது. அந்த லைன் ஆஃப் கண்ட்ரோல் என்பது ஒரு கற்பனைக் கோடு. நிலத்தில் கோடு எதுவும் வரையவில்லை. ஆனால், இந்தியாவும் பாகிஸ்தானும் லைன் ஆஃப் கண்ட்ரோல் வரை உள்ள பகுதி தங்களுக்கே சொந்தம் என்று கூறி வருவதுதான் பிரச்னையின் ஊற்றுக்கண்.
1950-ம் ஆண்டு நேருவும், ஷேக் அப்துல்லாவும் கலந்து கொண்ட கூட்டத்தில் ‘காஷ்மீர் மக்கள் விரும்பும் வரைதான் இந்திய ராணுவம் காஷ்மீரில் இருக்கும்’என்றார் நேரு.ஆனால் 1994-ல் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இன்றைக்கு உலகிலேயே அதிக ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் நாடு காஷ்மீர்தான். 450 தீவிரவாதிகள் இருப்பதாய்ச் சொல்லி அவர்களைப் பிடிக்க 7லட்சம் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு 70 வயது பிச்சைக்காரரைக் கொன்று விட்டு, அவரை முன்னாள் லக்ஷர் இதொய்பா தளபதி என்கிறார்கள்.எட்டு வயதுச் சிறுவன் கூட ராணுவத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.
சமீபத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் அங்கு சென்ற போது காஷ்மீர் மக்கள் எழுப்பிய கோஷம் எங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதுதான்’’ என்று காஷ்மீர் விடுதலையின் அவசியத்தைத் தெளிவாக கூறி விட்டு அமர்ந்தார்.
தமிழகத்தில் திலீபன் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஈழப்பிரச்னை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை அப்செட்டாக்கியது.
அடுத்துப் பேசவந்த கவிஞர் காசி ஆனந்தன்,‘‘காஷ்மீரிலாவது இரண்டு தடவை ஐ.நா. தலையிட்டது. ஆனால், ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது யாருமே கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கும் முள்வேலிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.பெண்கள் பாலியல் ரீதியாய் துன்புறுத்தப்படுகிறார்கள்.சுமார் நாற்பதாயிரம் புலிகளை அழித்து விட்டோம் என்று குதூகலிக்கிறார்கள்.அந்தப் புலிகளுக்கு நெருங்கிய ரத்த உறவினர்கள் இரண்டு லட்சம் பேரின் இதயத்திலாவது தீ கனன்று கொண்டிருக்கும்.அது தனி ஈழம் அமையும் வரை ஓயாது’’ என்றவர்,பேராசிரியர் கிலானியைப் பார்த்து,‘‘காஷ்மீர் மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தமிழ்நாட்டில் தமிழர்கள் மேடை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.அதுபோல் நீங்கள் காஷ்மீரில் எங்களுக்கு மேடை அமைத்துத் தாருங்கள்’’ என்றார்.
மறுநாள் தான் தங்கியிருந்த ஓட்டலில் காசி ஆனந்தன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களிடம் ஈழப்பிரச்னை குறித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார் கிலானி. இதில் விடுதலைப்புலிகள், பிரபாகரன், ஈழ வரலாறு குறித்து அவருக்கு தெளிவாக விளக்கியிருக்கிறார் காசி ஆனந்தன். அதனை கவனமாகக் கேட்ட கிலானி, ‘காஷ்மீரில் ஈழ ஆதரவுக் களம் அமைக்க ஒப்புக் கொண்டார்’ என்கிறார்கள்.
இதுபற்றி மே 17 இயக்கத்தின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லேனா.குமாரிடம் பேசினோம்.‘‘ஈழ மக்களின் துயரம் கேட்டு அதிர்ந்து போன கிலானி, காஷ்மீர் மக்களும், ஈழ மக்களும் படும் துன்பங்கள் ஒரே மாதிரியானவைதான்.இந்திய ராணுவத்தால் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே காஷ்மீரில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிப் பேசினால் அந்த மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.
அது சம்பந்தமான ஆடியோ, வீடியோக்களை எனக்கு அனுப்பி வையுங்கள். காஷ்மீரில் உள்ள பத்திரிகைகளில் அதை பிரசுரம் செய்வோம்.
அப்போதுதான் காஷ்மீர் மக்கள் பிரச்னையைப் புரிந்து கொண்டு ஈழ விடுதலைக்கு ஆதரவு தருவார்கள் என்றபோது எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி’’ என்றவர் தொடர்ந்து,
‘‘முள்ளிவாய்க்காலில் அவ்வளவு பெரிய துயரம் நடைபெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் எந்த ரியாக்ஷனும் இல்லை.
எனவேதான் தனி ஈழப் போராட்ட வரலாற்றை இந்தியா முழுக்க கொண்டு செல்லப் போகிறது மே 17 இயக்கம். அதன் முதல்கட்டமாக பேராசிரியர் கிலானியைப் பேச வைத்திருக்கிறோம்.அடுத்தகட்டமாக தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவரராவ்,பஞ்சாப் பத்திரிகையாளர் ஜக்மோகன்சிங், காஷ்மீர் ஹூரியத் தலைவர் கிலானி ஆகியோரையும் அழைத்து வந்து பேச வைக்கப் போகிறோம்.இதன் மூலம் இந்தியா முழுக்க தனி ஈழக் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதுதான் எங்கள் திட்டம்’’ என்றார்.
ஈழ மக்களின் நல்வாழ்வு இந்தியாவைத் தவிர்த்து சாத்தியமில்லை என ஈழ ஆதரவாளர்களே ஒப்புக்கொள்ளும் நிலையில், மே 17 இயக்கத்தினரின் இந்த முயற்சி நிச்சயம் பயனளிக்கும் என நம்புவோம்.
ஏ.டி. சாமி < குமுதம் ரிப்போட்டர் img alt="Image Hosted by ImageShack.us" src="http://img688.imageshack.us/img688/2993/thanksz.gif" />
வெள்ளி, 1 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



இவர்கள் முயற்சி வெற்றி பெறவேண்டும். காஷ்மீரத்து சகோதரர்களின் துன்பத்திற்கு குறைந்ததல்ல ஈழத்து வேதனை. அந்த சகோதரர்களுக்கு சுதந்திரம் கிட்டவேண்டும். அதுபோல ஈழமும் சுதந்திரமடைய வேண்டும். பயங்கரவாத இந்திய பாக்கிஸ்தானிய, சிங்கள அரசுகளின் முகமூடிகள் கிழிக்கப்பட வேண்டும்.
பதிலளிநீக்கு