விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்குச் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதனை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அதிரடித் தகவல் வெளியிட்டுள்ளது. வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை இலங்கைக் கடற்படையினர் தாக்க முனைந்த சமயம் விடுதலைப்புலிகளுக்குச் சரியான சமயத்தில் தகவல்களைக் கொடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியதாக 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி அனுப்பப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான நோர்வேயின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரைகேவ் ரெலிப்சென் என்பவரை நீக்க வேண்டும் எனக் கடிதம் அனுப்பியிருந்தார். விடுதலைப்புலிகளின் கப்பலை கடற்படையினர் கண்டறிவதைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தடுத்துள்ளது. அதற்கு ரெலிப் சென்தான் முக்கிய காரணம். அவர் தொலைபேசி மூலம் விடுதலைப் புலிகளுக்குத் தகவல்களை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கப்பல் தப்பிச்சென்று விட்டதெனச் சந்திரிகா நோர்வேக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒக்ரோபர் 16ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர், கண்காணிப்புக்குழுவின் தலைவர் ரெலிப்செனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது விடுதலைப்புலிகளின் கப்பல் ஒன்று வடக்குக்கிழக்குக் கடலில் பயணிக்கின்றதா எனத் தாம் தவறுதலாக விடுதலைப் புலிகளிடம் தொலைபேசி மூலம் கேட்டுவிட்டதாக ரெலிப்சென் தெரிவித்திருந்தார்.
எனினும் ரெலிப்செனின் நடவடிக்கைகளில் தனக்குச் சந்தேகம் உள்ளதாகவும் அவரை நீக்கும்படியும் சந்திரிகா வலியுறுத்தியிருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக