புதன், 2 பிப்ரவரி, 2011

துவிச்சக்கர வண்டியை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்

மிலேனியம் ஆண்டாக மிளிரு கின்ற இன்றைய காலகட்டத் தில் நாம் நினைத்த இடத்திற்கு விரைவில் செல்லும் வகையில் போக்குவரத்துக்கான வாகனங்கள் (TRANSPORT VEHICLES) நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக இப்பூவுலகம் வெகுவாகச் சுருங்கி விட்டது என்றும் கூறலாம்.

வணிகத்துறை விற்பனையில் முக்கிய பங்கினை வகிக்கின்ற மனித வலுவைக் கொண்டு இயங்குகின்ற சைக்கிளைப் பாதுகாக்கும் வழிமுறைகள், உதிரிப்பாகங்களின் (SPARE PARTS) பயன்பாடு, சைக்கிள் சவாரி செய்வதினால் தேக ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள், சைக்கிளைப் பழுது பார்த்தல் (REPAIR) என்பவை பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.

சைக்கிள் வைத்திருப்பவர்கள் பாக்கிய சாலிகள் என்றால் தங்கள் துவிச்சக்கர வண்டியை தாங்களே ரிப்பேர் செய்து கொள்ளத் தெரிந்து கொண்டவர்கள் மகாபாக்கியசாலிகள் என்றும் கூறலாம்.

இனி உதிரிப் பாகங்களின் பயன் பாடுகளைச் சற்றுப் பார்ப்போம். சைக்கிள் பாகங்களின் முக்கியத்துவம், அவற்றின் செயற்பாடு, பழுதுபட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவற்றை துவிச்சக்கர வண்டி வைத்திருப்பவர்கள் ஓரளவேனும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

சைக்கிளின் முக்கியமான பகுதிகளிளொன்று பிரேம் (FRAME) ஆகும். புதிய சைக்கிளாக இருந்தாலும் சரி பழைய துவிச்சக்கர வண்டியாக இருந்தாலும் சரி கொள்வனவு செய்யும் போது பிரேம் நன்றாக, உறுதியாக இருக்கிறதா என்று பரீட்சித்துப்பார்த்து வாங்குவது அவசியமானதாகும்.

பிரேமில் இணைக்கப்பட்டுள்ள ஏனைய பாகங்களை நோக்குமிடத்து “ஹேண்டில்” (HANDLE) முக்கிய பங்கினை வகிக்கின்றது எனலாம். காருக்கு ஸ்டியரிங் எப்படியோ அப்படித்தான் சைக்கிளுக்கு ஹண்டில் பார் திகழுகின்றது. சைக்கிளுக்கான பிரேக், பெல் (BELL),, லைட் (LIGHT)என்பவற்றைத் தாங்கிக் கொள்வதும் ஹண்டில் பார்தான்.

ஹண்டில் பாரின் இரண்டு முனைகளிலும் பிடிப்பதற்கு இருக்கும் பகுதிக்கு ஹண்டில் கிரிப்ஸ் என்று பெயர். குரோமியர் பூசப்பட்ட ஹண்டில் பாரில் இப்பிளாஸ்டிக் பிடிகள் இல்லை என்றால் ஹண்டில் வழுக்கும் தன்மையினால் விபத்துக்கள் நேரிடலாம். அடுத்த முக்கியமான பகுதி ஃபோர்க் ஆகும்.

ஹண்டில் பார் ஃபோர்க் அசெம்பிளி, பாட்ம் பிராக்கெட் அசெம்பிளி, கிராங்வீல் அசெம்பிளி போன்ற பகுதிகளை அடுத்து பெடலைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வோம்.

சைக்கிளில் இரண்டு பெடல்கள் உள்ளன. பெடல் இல்லையெனில் துவிச்சக்கர வண்டியை ஓட்டுவது மிகவும் சிரமமான காரியமாகும். பெடலை கிராங் லீவருடன் இணைக்க உதவுவது ஆக்ஸில் ஆகும். இதனை பெடல் ஆக்ஸில் என்றும் அழைப்பார்கள். பெடல் பேரிங் அசெம்பிளியின் பாகங்களை நான்காக வகுக்கலாம். பெடலுக்கு றப்பர் உறை போடுவது அவசியம்.

முன்புறச் சக்கரத்திலும் பின்புறச் சக்கரத்திலும் மேற்புறமாகப் பொருத்தப் பட்டுள்ள பாகத்தை மட்கார்டுகள் எனலாம். துவிச்சக்கர வண்டியின் அழகிற்கு பிரதான காரணியாக அமைவது இம்மட்கார்டுகளே.

நாம் சைக்கிளைச் செலுத்தும் வேளை யில் முன்பக்கச் சக்கரம் நேராகச் செல்லாமல் சற்று வலது பக்கம் இடது பக்கம் அசைந்து, அசைந்து சென்றால் சக்கரத்தில் ‘ஷேக்’ உள்ளதை உணரலாம்.

சக்கரத்தில் ஷேக் ஏற்பட்டால் ‘வீல் பேரிங் அசெம்பிளியில்’ ஏதோ கோளாறு என்பது நிச்சயம்.

சக்கரத்தை சரி செய்ய சக்கரம் எளி தாக உருள ‘கோன் (CONE) உதவும்.

இனி பின்பக்கச் சக்கரம் பற்றிப் பார்ப்போம். இதுவும் முன்பக்கச் சக்கரம் போன்றதுதான். ஆனால் ‘ஃபிரிவில்’ அமைப்பை ஏற்றுச் செயற்படும். ரிம்மைச் சுற்றிலும் பின்னல்போல் இரண்டு பக்கங்களிலும் ஹப்பையும் ரிம்மையும் இணைத்திருப்பவை ‘ஸ்போக்ஸ்’ எனப்படும் தம்பிகளாகும்.

முன்பக்கச் சக்கர ஹப்பிற்கும் பின்பக்க ஹப்பிற்கும் சற்று வித்தியாசம் உண்டு. முன்பக்க ஹப் முப்பத்து இரண்டு ஸ்போக் கம்பிகளை ரிம்முடன் இணைக்க வல்லது. பின் பக்கச் சக்கர ஹப் நாற்பது ஸ்போக்ஸ் கம்பிகளை ரிம்முடன் இணைக்க வல்லது.

சாதாரணமாக ‘வீல் (WHEEL) பெண்ட்’ ஆவது என்பது ஒரு ஸ்போக்ஸ் உடைந்துவிட்டாலே போதும். அந்த வீல் சற்று ஆட்டம் காணும்.

“காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று மனித உடலைப்பற்றிக் கூறினார்கள். நதியிலே செல்லும் ஓடம், கடலிலே செல்லும் கலம் என்பவற்றில் சிறு துவாரம் ஏற்பட்டால் அவை பயணத்தை மேற்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன. அதேபோல் சைக்கிள் டியூப்பில் சிறு துவாரம் ஏற்பட்டுவிட்டால் காற்று தங்காது. காற்று இல்லையெனில் ஒரு மீற்றர் கூட நகராது.

சைக்கிள் டியூப்பிலே துவாரம் ஏற்படுவதைத்தான் பங்சர் (PUNCTURE) என்கின்றோம்.

சிறிய குண்டூசி, முள், மாட்டின் லாடத்தின் ஆணி, செருப்பு ஆணி, கூரான கற்கள் என்பவற்றால் சைக்கிள் டியூப் பங்சர் ஆகின்றது. பங்சர் ஒட்டுவதற்கு என்னென்ன தேவை? எப்படி ஒட்டுவது என்பதை எளிதாகப் புரிந்து கொண்டோமானால் இக்கைங்கரியத்தை நாமே வீட்டில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ரிம்மில் டியூப் - டயர் இவை பொருத்துவதற்கு முன்னர் ஒரு அங்குல அகலம் ரிம்மின் உட்புறம் சுற்றிலும் பொருத்தப்பட்டிருப்பதற்குப் பெயர் ரிம் டேப் என்பதாகும். ரிம்டேப் இரண்டு வகைளில் கிடைக்கும். ஒன்று சாதாரண நாடாவினாலும் மற்றொன்று றப்பரினாலும் தயாரிக்கப்பட்டிருக்கும்.

சைக்கிளில் உள்ள இரண்டு சக்கரங்களையும் இயக்க பிரதான காரணமாக அமைவது ஃபிரீவீலே ஆகும். இதில் ஒரு பல் தேய்ந்து விட்டால் கூட இதன் இயக்கம் சரியாக இருக்காது. துவிச்சக்கர வண்டியின் பகுதிகளில் மிகவும் வலிமை வாய்ந்தது செயின் (CHAIN) ஆகும். தேய்ந்துவிட்ட செயின் நல்ல நிலையில் உள்ள ஃபிரீவீலின் பற்களையும் தேய்த்து விடும் இயல்புடையது.

சைக்கிளின் மிக முக்கியமான பாகங்களிளொன்று ‘பிரேக்’ ஆகும். கடிவாளம் இல்லாத குதிரை, மூக்கணங் கயிறு இல்லாத காளை ஆகியவற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறே பிரேக் இல்லாத துவிச்சக்கர வண்டியின் ஓட்டத்தை நிறுத்தவே இயலாது. இதனால் விபரீத விபத்துக்கள் தான் ஏற்படும்.

சைக்கிளுக்கு ‘லைட்’ மிகவும் அவசியம். இரவு நேரங்களில் விளக்கு இல்லாமல் துவிச்சக்கர வண்டியைச் செலுத்துவது சட்டப்படி குற்றமாகும். இதில் நம்முடைய பாதுகாப்பும் அடங்கியுள்ளது.

அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் சைக்கிளில் பெரும்பாலும் ‘கேரியல்’ பொருத்தப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இக்கேரியரில் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும் தினப்பத்திரிகை, பால், விறகு, மீன், மரக்கறி வகைகளை வீடு வீடாகக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் உறுதுணையாக அமைகின்றது எனலாம்.

சாதாரண மக்களின் வாகனமான சைக்கிளில் பழுது எதுவும் ஏற்பட்டால் அவற்றை உகந்த முறையில் ரிப்பேர் செய்யும் தொழில்நுட்ப அறிவை கண்டிப்பாக எல்லோரும் அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும். இதனால் பணமும் நேரமும் மிச்சப்படுகின்றமை என்பது வெள்ளிடைமலை.


அருணா தருமலிங்கம்,
வந்தாறுமூலை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல