புதன், 2 பிப்ரவரி, 2011

நித்யானந்தா பேட்டி

``ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சியை வெளியிடாமல் இருக்க ரூ.100 கோடி பேரம் பேசினார்கள்'' என்று நித்யானந்தா கூறினார்.

நித்யானந்தா பேட்டி

 
பெங்களூர் அருகே பிடுதியில் தியான பீடம் நடத்தி வரும் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி கடந்த ஆண்டு வெளியானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல்முறையாக நித்யானந்தா தனது ஆசிரமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.100 கோடி பேரம்

 
நடிகை ரஞ்சிதாவுடன் நான் இருப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இது முற்றிலும் பொய்யானது. நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானோ, எனது உடலோ அல்ல. இந்த வீடியோ காட்சிகள் பொய் என்று அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீடியோ காட்சிகளை திரித்து வெளியிட்டு உள்ளனர்.

இந்த ஆபாச வீடியோவை வெளியிடுவதற்கு முன் ரூ.100 கோடி கேட்டு எங்களிடம் பேரம் பேசினார்கள். பின்னர் படிப்படியாக குறைத்து 60 கோடி ரூபாய் என குறைத்து கொண்டே வந்தனர். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக பணம் கொடுக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டேன். எங்களிடம் அவ்வளவு பணமும் இல்லை என்றும் கூறிவிட்டோம். இறுதியாக எனது பக்தர்களிடம் பேரம் பேசி ஒரு தொகையை அவர்கள் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு இந்த ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.

தலைமறைவாக இருக்கவில்லை

 
இந்த வீடியோ காட்சிகள் வெளியானபோது நான் கும்பமேளாவில் கலந்து கொண்டு இருந்தேன். அந்த காட்சிகள் வெளியான பிறகு இங்கு ஒரு அசாதாரணமான நிலை ஏற்பட்டது. ஆசிரமத்தின் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினார்கள். தீ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பிடுதி ஆசிரமத்திலும் அதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் கன்னடர்கள் இல்லை.

கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் கூட அதுபோன்ற செயலை செய்யவில்லை. பிடுதியில் 3 பிரமச்சாரினி பெண்களை அறையில் வைத்து பூட்டு போட்டு தீ வைத்தனர். ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள் அவர்களை வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார்கள். இது போன்ற ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் எனக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டது. அதனால் நான் வெளியில் தங்கி இருந்தேன். நான் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கவில்லை. நான் தங்கிய அந்த இடத்திலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினேன். வெளிப்படையாக வெளியில் கடைக்கு எல்லாம் சென்று வந்தேன்.

ஆச்சரியமாக இருக்கிறது

 
அதிகாரம் மிக்க 2 பேர் இந்த சம்பவத்தின் பின்னால் இருந்து செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்ற விவரத்தை உங்களிடம் சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படி சொன்னால் எங்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்? இதுகுறித்து சி.ஐ.டி. போலீசாரிடம் எல்லா தகவல்களையும் கூறி இருக்கிறேன்.

என் மீது 376-வது பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இல்லாத நிலையில் என் மீது சட்டவிரோதமாக இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்து உள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு வழக்கு முன் எப்போதும் பதிவு செய்யப்படவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

மன ரீதியாக பாதிப்பு

 
என் மீது போலீசார் தொடக்கம் முதலே சட்டவிரோதமாக நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். என்னால் செக்ஸ் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையில் கூட தெரிவிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து எனக்கும், எனது பக்தர்களுக்கும் துன்புறுத்தல்களை, தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். இதனால் நாங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

அவர்கள் ஒட்டு மொத்த இந்து மதத்தையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சட்டவிரோதமாக என்னை கைது செய்துவிட்டு தற்போது அதை நியாயப்படுத்துகிறார்கள். இப்போதாவது அதை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும்.

1 லட்சம் கடிதங்கள்

 
எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவு கடிதங்கள் வந்து கொண்டு இருக்கிறது. படித்தவர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என 1 லட்சம் கடிதங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் கடிதம் அனுப்பி உள்ளார். அவரை போன்று பல நாட்டுக்காரர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்கள்.

வருகிற மார்ச் 2-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை பல்வேறு மத தலைவர்கள் நேரில் சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளேன். அதன் பிறகு அந்த 1 லட்சம் கடிதங்களை பிரதமர், ஜனாதிபதி, கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் கவர்னர் ஆகியோருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

பாதயாத்திரை

 
அப்போது எங்கள் மீதான அச்சுறுத்தல், அத்துமீறல், துன்புறுத்தல் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்துவோம். ஏனென்றால் இன்னும் கூட எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள். வெளியில் நடமாடும் எனது பக்தர்களை குறி வைத்து ஒரு கும்பல் தாக்குதலை நடத்தி வருகிறது. இது ஏன்? என்று எனக்கு புரியவில்லை.

மக்களிடம் நீதி கேட்டு தமிழ்நாடு கன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பீதர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளேன்.

ரஞ்சிதாவுக்கு ஆதரவு

 
ஆபாச வீடியோ காட்சி வெளியான பிறகு நான் தொடர்ந்து நடிகை ரஞ்சிதாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் 100-க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வந்தேன். என் மீது குற்றச்சாட்டை பதிவு செய்த போலீசார், ஆபாச வீடியோ காட்சியை கோர்ட்டில் ஏன் தாக்கல் செய்யவில்லை.

இந்த ஆசிரமத்தில் எந்தவிதமான செக்ஸ் தொடர்பான நடவடிக்கைகளும் நடக்கவில்லை. இனிமேலும் நடைபெறாது. மதுபானங்களும் யாரும் பயன்படுத்துவதில்லை. மற்ற சாமியார்கள் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.

செக்ஸ் உறவு கிடையாது

 
என் வாழ்நாளில் நான் இதுவரை எந்த ஒரு பெண்ணுடனும் செக்ஸ் உறவு வைத்தது கிடையாது. ஒரு துளி மதுவை கூட குடித்தது இல்லை. அதேபோல் அசைவ உணவையும் சாப்பிடவில்லை. இனி எனது வாழ்க்கையிலும் இதே நிலையை தான் கடைபிடிப்பேன்.

ஆசிரமத்தில் புதியதாக சேருபவர்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் நாங்கள் பெறவில்லை. இது முற்றிலும் பொய்யானது. நான் ஆண்மை இல்லாதவன் என்று போலீசார் பொய் தகவலை பரப்பினர். ஆண், பெண்ணை விட எனக்கு உணர்வுகள் அதிகமாக உள்ளது என்றுதான் சொன்னேன். நான் ஆண்மை இல்லாதவன் என்று எப்போதும் சொல்லவில்லை. பிடுதியில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி ஒன்று விரைவில் கட்டப்படும்.

இவ்வாறு நித்யானந்தா கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல