வியாழன், 21 நவம்பர், 2013

நண்பனின் சடலத்துடன் 13 வருட காலமாக வாழும் நபர் (படங்கள் இணைப்பு)

வீடு வாசலற்ற நபரொருவர் கல்லறையொன்றில் தனது ஆருயிர் நண்பனின் எலும்புக்கூட்டுடன் கடந்த 13 வருட காலமாக வாழ்ந்து வரும் விசித்திர சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

சான்தா இஸ்பெல் நகரைச் சேர்ந்த முன்னாள் தரகரான பபியோ பெர்ரால்டோ றிகொல் (47 வயது) என்ற மேற்படி நபர், தனது தொழில் வீழ்ச்சியடைந்ததையடுத்து கையில் எதுவித பணமும் இல்லாது வறுமையில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட பபியோவை அவரது குடும்பத்தினர் கைவிட்டதைத் தொடர்ந்து அவர் போதைவஸ்து பாவனைக்கு அடிமையானார். இந்நிலையில் 6 சடலங்களை வைப்பதற்கு போதுமான இடவசதியுடைய தனது ஆருயிர் நண்பரின் கல்லறையில் அவரது சடலத்துடன் தங்க அவர் முடிவெடுத்தார்.

இது தொடர்பில் பபியோ விபரிக்கையில், ''நான் இறந்தவர்களுடன் வாழ்வதை விடவும் உயிருடன் இருப்பவர்களுடன் வாழ்வதற்கே அஞ்சுகின்றேன். நான் ஒரு போதும் பேயைக் கண்டதில்லை. சில சமயங்களில் இங்கு மிக அமைதியாக உள்ளது. நான் பேசுவதில் ஆர்வமுள்ள ஒருவர் அல்லர் என்பதால் இது எனக்கு பொருத்தமானதாக உள்ளது. நான் உயிர் வாழ்பவர்கள் மத்தியில் வாழ்வதை அசெளகரியமாக உணர்கின்றேன்'' என்று தெரிவித்தார்.

''நான் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்த போது வீதியில் அலைந்து திரிந்தேன். ஒரு இரவு கடும் மழையாக இருந்தது. அதன் பின் என்ன நடந்தது என்பது எனக்கு ஞாபகமில்லை. நான் விழித்தெழுந்தபோது இந்த மயானத்தில் இருந்தேன்'' என அவர் மேலும் கூறினார்.

''நான் பகல் பொழுதுகளில் மயானத்தைவிட்டு வெளியேறி நகருக்குள் நுழைந்து பிச்சையெடுத்து உண்டு வருகின்றேன். மழை பெய்யும் போது நான் இந்த கல்லறைக்குள் தங்குகிறேன். நான் எதையும் ஒரு போதும் விரும்பியதில்லை. எனக்கு உணவு தேவைப்படும்போது எவராவது எதையாவது எனக்கு கொடுக்கின்றனர். கடவுள் என்னை ஒரு போதும் பட்டினியால் வாட விடவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

எனினும், மயானத்தில் இறுதிவரை தங்கியிருப்பது தனது நோக்கமல்ல என பபியோ கூறினார்.

''நான் இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன். நான் ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட வீட்டில் வசிக்கவிரும்புகின்றேன். எனக்கு வாய்ப்பு கிடைக்குமானால் வேலைக்குச் செல்வதற்கு ஆர்வமாகவுள்ளேன். எனது வாழ்வு இன்னும் முடிந்து விடவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல