வியாழன், 21 அக்டோபர், 2010

தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலா? – நியுயார்க் நீதிபதி கேள்வி

(அசோசியேட் பிரஸ்)

மூன்றாண்டுகளுக்கு மேலாக மத்திய முகவர்களினால், புலிகளின் அமெரிக்கப் பிரதிநிதி என்கிற குற்றச்காட்டின் பெயரில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் ஒரு ஸ்ரீலங்கா குடியேற்ற வாசியின் தலைவிதி இந்தச் சிக்கலான கேள்வியுடன் பிணைந்திருக்கிறது. இந்தப் போராளிக் குழு அமெரிக்கர்களுக்கு ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலாக உள்ளதா?

மத்திய வழக்குத் தொடுனர், கருணாகரன் கந்தசாமி மீது பயங்கரவாதத்துக்கு துணை செய்தார் எனச் சுமத்தப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு சொல்லும் பதில் “ஆம்” என்பதே. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகப் போராடிய ஒரு பிரிவினைக் குழுவிற்கு நிதி சேகரித்தார் என்பதற்காக அவருக்கு மிகவும் கடும் தண்டனையாக 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்கவேண்டுமென்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒரு நீதிபதி சமீபத்தில் தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

சிறையிலிருக்கும் கந்தசாமி மீதான வழக்கு “ மிகவும் வெளிப்படையான அல்லது பொதுவாக குறிப்பிடத்தக்க வழக்குகளிலோ அங்கு ….. எங்களது பாதுகாப்பு நாட்டங்கள் விட்டுக் கொடுக்கப் பட்டதாகவோ மற்றும் எங்களது பிரஜைகளின் பாதுகாப்பு இடர்களுக்குள்ளானதாக” கூறும் காரணங்களுடன் நன்கு பொருத்தப் படவில்லை. அமெரிக்க மாவட்ட நீதிபதி றேமன் டியரி இம்மாத முற்பகுதியில் கந்தசாமியின் அட்டவணைப் படுத்தப்பட்ட தீர்ப்பை ஒத்திவைத்த போது சொல்லியிருக்கிறார்.

“சுலபமாக பயங்கரவாதம் என்கிற சிவப்புக் கொடியினைக் காட்டி உயர்ந்தபட்ச தண்டனைகளை நாங்கள் திணிக்கலாமா?”

அமெரிக்க அரச உதவி வழக்குத் தொடுனர் ஜெப்ரி நொக்ஸ் தமிழ் புலிகள் அரச திணைக்களத்தினால் ஸ்ரீலங்காவில் வாழும் அமெரிக்கர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவர்கள் என்கிற பகுதியில் பயங்கரவாத இயக்கமாக அடையாளப் படுத்தப் பட்டுள்ளார்கள், என்று வாதாடினார். அவர் மேலும் கூறியது, இக்குழவின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஸ்ரீலங்காக் குடியேற்றவாசிகளிடமிருந்து வற்புறுத்திப் பணம் வசூலித்துள்ளார்கள் என்று.

தமிழ் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் முன்னோடிகள், அதில் மிகச் செம்மையான தொழில்நுட்பத்திறனும் வாய்ந்தவர்கள். நொக்ஸ் மேலும் கூறுகையில்” சில சந்தர்ப்பங்களில் இத்தொழில்நுட்பம் கடன் வாங்கப்பட்டு பிரதி செய்யப்பட்டு வேறு பல பயங்கரவாத இயக்கங்களுக்கு விற்கப்பட்டுள்ளது. – அவையானவை அல்குவைதா போன்ற இயக்கம் அது அமெரிக்க அரச நிறுவனங்கள் மீது நேரடியாகத் தாக்குதல்கள் நடத்தியது,மற்றும் பிராந்தியத்திலுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, போன்ற இன்னும் பல இயக்கங்களும்.”

உள்ளக ஆவணங்கள் காட்டுவது, தமிழ் புலிகள் மற்றைய பயங்கரவாத இயக்கங்களைச் சகோதர சுதந்திர போராட்ட வீரர்களாகக் கருதியதுடன் கருப்புச் சந்தை ஆயுதங்கள், மற்றும் வெடிமருந்து கப்பல் ஏற்றுமதிகள், நிதியமைப்பு முறைகள் வங்கிக் கணக்குகள் என்பனவற்றை தம்மிடையே பகிரும் கொள்கையைக் கொண்டிருந்தனர் என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டதிலிருந்து முதுகுத்தண்டு பிரச்சினையாலும், மேலும் பல தீவிர நோய்களுடனும் போராடிக் கொண்டிருக்கும் கந்தசாமி தன்மீது கருணைகாட்டும்படி கேட்டுக் கொண்டபடியால் நீதிபதி தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளார்;. “நான் இந்த மண்ணையும் இந்த நாட்டையும் நேசிக்கிறேன். நான் நோயாளியாகி விட்டேன், என்னுடைய குடும்பத்துடன் திரும்பவும் சுதந்திரமாக வாழ ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டேனோ என அஞ்சுகிறேன்”. 54 வயதான முன்னாள் வாடகைச் சீருந்துச் சாரதி மொழிமாற்றுனரின் துணையோடு இவ்வாறு கூறினார். புதிய தீர்ப்புக்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அமெரிக்க வழக்குத்தொடுனரின் புருக்லீன் அலுவலகப் பேச்சாளர் வெள்ளிக்கிழமையன்று இதுபற்றிக் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

கந்தசாமியின் சொந்த நாட்டில் தோன்றியுள்ள சில சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த திருப்பங்களால் அவரது வழக்கில் சிறிய முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த வருடம் தமிழ் புலிகள் ஸ்ரீலங்கா அரசுடனான தங்களது 25 வருடப் போரின் தோல்வியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இந்தப் போராட்டத்தில் தனித்து மறைந்து வாழ்ந்த அப்பிரிவினைக் குழுவின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட 70,000 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

போராளிகள் ஒருமுறை தீவின் வடபகுதி மக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்து நடப்பின்படி மெய்யான ஒரு அரசாங்கத்தை நிறுவி, 1983 முதல் பல தசாப்தங்களாக பெரும்பான்மை சிங்களவரின் அடக்குமுறையினால் அவதிப்படும் தமிழ் சிறுபான்மை மக்களுக்காக ஒரு தனிநாடு கோரிப் போராடிவந்தார்கள். 1991ல் நிகழ்ந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுட்பட நூற்றுக் கணக்கான தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான தமிழ் புலிகள் சர்வதேசரீதியில் வெறுக்கப்பட்டும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்றவற்றால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுமிருந்தார்கள்.

நியுயோர்க் மத்திய அதிகாரிகள் புலிகளுக்கான ஆதரவை நிறுத்துவதற்காக, 2006 – 2007 காலப்பகுதியில் அதன் கிழக்குகரை குடியேற்ற சமூகத்திலுள்ள புலிகளின் அனுதாபிகளை பயங்கரவாத இயக்கமொன்றுக்கு மூலப்பொருட்கள் வழங்கி சதி புரிந்தார்கள் என்கிற குற்றச்சாடடின் பேரில் கைது செய்தார்கள். சிலர் வெடிபொருட்கள்,ஏவுகணைகள்,விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்,மற்றும் ஆயுதங்களை வாங்க உதவி புரிந்ததுடன் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து புலிகளை நீக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்க முயன்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். கந்தசாமி உட்பட்ட மற்றும் சிலர் இரகசிய பிரச்சாரமொன்றின் மூலமாக ஒரு தர்ம ஸ்தாபனத்தினூடாக நிதி சேகரிக்கவும் சட்டபூர்வமற்றவகையில் மில்லியன் கணக்கான டொலர்களை அனுப்பவும் உதவினார்கள் என்கிற குற்றச் சாட்டுடன் இணைக்கப் பட்டிருந்தார்கள்.

கந்தசாமியும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் பயங்கரவாதக் குற்றச்செயல்களுக்கான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். சிலருக்கு 25 வருடங்கள் வரையான தண்டனை வழங்கப் பட்டுள்ளது.எதிர் தரப்பு வழக்கறிஞர் சாள்ஸ் றொஸ் தனது தரப்பினரின் தண்டனை 5 வருடங்களுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும். 20 வருடம் என்பது அவர் சொன்னது “அநேகமாக அதிகப்படியான ஒரு தானியங்கித் தண்டனை”. அது ஸ்ரீலங்காவில் உள்ள குடியியல் சமூகத்தைப் பாதிக்கும் சிக்கலான நிலையை கருத்தில் கொள்ளவில்லை.

சமீபத்தில் விசாரணையின்போது கந்தசாமி கூறியது, தான் ஸ்ரீலங்காவை விட்டுத் தப்பி வந்தது எதனாலெனில் “சிங்களவர்கள் எமது மக்களைக் கொல்கிறார்கள். நான் என்னுடையதும் எனது குடும்பத்தினரதும் உயிர்களையிட்டு அச்சமடைந்தேன்”. கந்தசாமிக்கு அரசியல் தஞ்சம் கிடைத்ததும் அவரது வழக்கறிஞர் கூறியது, கந்தசாமியின் பிரதான இலக்கு அதிக பணம் சம்பாதித்து அவரது பிரியப் பட்டவர்களை அமெரிக்காவுக்கு கொண்டுவருவதே என்று.

மனிதாபிமான காரணங்களைக் காட்டி அவர் ஒரு தமிழ் தரும ஸ்தாபனத்துக்காக நிதி திரட்டினார்.“அவர் பிரதானமாக ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஆயதம் வழங்குவதை கவனத்தில கொள்ளவில்லை” றொஸ் கூறியது “கனம் நீதிபதி அவர்களே அவர் பிரதானமாகக் கருதியது தனது மக்களுக்கு உதவி செய்வதையே”.

வழக்குத் தொடுனர் சொல்வது கந்தசாமியும் மற்றவர்களும் தாங்கள் சேகரிக்கும் நிதி வன்முறைத் தீக்கு எண்ணெய் ஊற்ற உதவுகிறது என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். தமிழ் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர்களை சேகரித்து உதவியுள்ளார்கள், என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மற்றும் போராளிக் குழுவின் தளபதிகளைச் சந்திப்பதற்காக அவர் ஸ்ரீலங்கா சென்றுள்ளார்.

இந்தப் போராட்டத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதில் கேள்விக்கு இடமில்லை, நொக்ஸ் கூறினார்,ஆனால் (கந்தசாமி) குற்றம் சாட்டப்பட முடியாதவரல்ல.

(நன்றி: AP )

தமிழில்: எஸ்.குமார்

தேணி இணையம்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல