வெள்ளி, 17 டிசம்பர், 2010

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல - தேரர் சாட்சியம்! தமிழ்கட்சிகள் கடும் கண்டனம்

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம், தமிழ்த் தேசி யம் என்று எவரும் உரிமை கொண்டாடமுடியாது. அதற் கான ஆதாரங்களும் இல்லை; வடமுனை முதல் தென்கரை வரை ஆட்சி புரிந்தவர்கள் சிங்களவர்கள் தான் என்று அடித்துக் கூறுகின்றார் எல்லாவல மேத்தானந்த தேரர். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் இணைந்து வாழ்வோம்.

ஆனால் எந்தப் பிரதேசத்தையும் ஆளும் ஆட்சி அதி காரம் தமிழர்களுக்குக் கிடையாது. முழு நாட்டையும் ஆண்ட வர்கள் சிங்கவளர்கள் தான். அதற்கான ஆதாரங்களும், சரித்திரச் சான்றுகளும் நிறையவே உண்டு. வடமுனை முதல் தென்கரை வரை ஆட்சி புரிந்தவர்கள் சிங்களவர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தும் கல்வெட்டுக்களும் உண்டு என்றும் கூறுகிறார் இந்த தேரர்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கை நெறிக்கான நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற நல்லிணக்க ஆணைக் குழுவின் முன் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை ஒரு சிறிய நாடு. இதில் தமிழர் சிங்களவர், இஸ்லாமியர் என அனைவரும் ஒரு குடும்பம் போல் வாழ்வோம், வாழவேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. இதனை இன ரீதியாகவோ மொழி ரீதியாகவோ துண்டுபோடமுடியாது. அதற்கு இடம்மளிக்கவும் மாட்டோம்.

இப்படி நாம் கூறினால் எம்மை இனவாதிகள் என்று விமர்சிக்கின்றனர். நாங்கள் தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ விரோதமானவர்கள் அல்லர். சிங்களவரோ தமிழரோ அல்லது முஸ்லிமோ பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கே நாம் எதிரானவர்கள்.

1983ஆம் ஆண்டில் இடம்பெற்ற வன்முறைக்கும், இனப் படுகொலைகளுக்கும் சிங்களவர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அந்த இனக்கலவரம் அரசியல்வாத காடையர் கும்பலினால் மேற்கொள்ளப்பட்டது; சிங்களவர்களால் அல்ல.
சிங்களவர்கள் எப்போதும் தமிழர்களுடனோ, முஸ்லிம்களுடனோ சண்டையிடவில்லை. பிறமதங்களை நிந்திக்கவில்லை. பிற மத வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் இல்லை.

இலங்கையை ஆண்ட மகாபாராக்கிரமபாகு, பர்மாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் எதிராகப் போரிட்டு, எம் நாட்டின் மீது மேற்கொள்ள முயன்ற ஆக்கிரமிப்பை முறியடித்தார்.
பயங்கரவாதி பிரபாகரனின் அணியினரும் சிறிதும் மனிதாபிமானற்ற முறையில் மாவிலாறு அணையைமூடி அப்பாவிகளான 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைப் பட்டினி போட்டார்.

குடிக்கவும், மனிதாபிமான தேவைகளுக்கும் நீரின்றித் துன்பப்பட்டனர். ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமாதான வழியில் தீர்வு காணவே முயன்றார். ஆனால் பிரபாகரன் அதனை ஏற்கவில்லை.
நேரடியாகப் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஜீவன்களைப் பாதுகாக்கும் மனிதாபிமானப் போராட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி முழு நாட்டையுமே பிரபாகரனின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை பெற்றுக்கொடுத்தார்.
ஜனாதிபதி தமிழர்களை அழிக்கவில்லை. பயங்கரவாதத்தையே அழித்துள்ளார். சர்வதேசம் இதனைப் பாராட்டியது.

எந்த ஒரு வெளிநாட்டுச் சக்திக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டை விமர்சிக்கும் அருகதை கிடையாது. பிரபாகரன் மூன்று நோக்கங்களைக் கொண்டே செயற்பட்டார். ஒன்று தமிழ் மொழியே பிரதான மொழியாக இருக்கவேண்டும். இரண்டாவது வடக்கும் கிழக்கும் இøணைந்த தமிழ்த் தேசியம் உருவாக்கப்படவேண்டும். மூன்றாவது இந்தப் பிரதேசம் அனைத்தையும் தான் ஆளவேண்டும் என்பதே.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் சமாதானம், பொருளாதாரம் மற்றும் நாட்டில் சகல இன மத பாரம்பரிய மதக் கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற மூன்று சிந்தனைகளுடன் செயற்பட்டு வெற்றிகண்டார்.

கடந்த கால சரித்திரத்தைப் புரட்டினால் 2500 வருடங்களுக்கு மேல் 186 சிங்கள மன்னர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இதற்கான கல்வெட்டுகளும் சான்றுகளும் இருக்கின்றன.

இலங்கையை தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று கூறுவது வெறும் கட்டுக்கதை. இதில் எந்த ஒரு உண்மையும் கிடையாது. அவர்கள் கூறுவது போல் தமிழ் மன்னர்கள் ஆண்டிருந்தால் அவர்கள் எந்த ஒரு நீர்த்தேக்கத்தையோ வாவிகளையோ அல்லது அணைக்கட்டுக்களையோ கட்டியிருக்கின்றனரா? இல்லவே இல்லை.

இன்று தமிழர்களின் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்கும் நல்லூர்க் கோவிலைக் கட்டியவர் சபுமல் குமரயா என்ற பராக்கிரபாகு மன்னரின் பிரதிநிதி. இந்தியாவிலிருந்து வந்த காளிங்க மன்னரின் படையெடுப்பை முறியடித்து வெற்றிகண்டதின் ஞாபகமாகவே நல்லூர் கோயில் கட்டப்பட்டது.

காளிங்க மன்னருடன் வந்த கேரள சிப்பாய்களில் பலர் அங்கேயே தங்கிவிட்டனர். இவர்கள் பின்னர் தமிழர்கள் ஆனார்கள். ஆனால் இவர்கள் தமிழர்கள் அல்ல. வந்தேறு குடிகளேயன்றி காலம் காலமாக வாழ்ந்தவர்கள் அல்ல. தமிழ் மொழி அங்கே இருந்தது என்றும் கூறமுடியாது.

பிரபாகரன் திம்புப் பேச்சு முதல் இறுதிப் போர் முடியும்வரை சமாதானத்தில் நாட்டம் கொண்டவராக இருக்கவில்லை.
பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் பல ஆயிரம் தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் உயிரிழந்துள்ளனர். தமிழ் மக்களும் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தே வந்துள்ளனர். வாய்விட்டுச் சொல்லமுடியாத நிலைமை. சுதந்திரமாக நடமாடக்கூட பிரபாகரன் அனுமதிக்கவில்லை.

கப்பம், கட்டாயவரி, பேச்சுச் சுதந்திரம் எல்லாம் தமிழ் மக்களுக்கே வெறுப்பூட்டியுள்ளது. இப்பொழுது இதனை வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

வெளிநாட்டவர்களும், தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீள்குடியேற்றவேண்டும். அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர். ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் பிரபாகரனால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர்கள்தான். சிங்களவர்களை மீள்குடியேற்றவேண்டும். புனர்வாழ்வழிக்கவேண்டும் என்று சிங்கள அரசியல்வாதிகள் கூடச் சிந்திக்கவில்லை.

பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 42 ஆயிரம் சிங்களவர்கள் நிரந்தமாக வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் உண்டு. இவர்கள் அனைவரும் பிரபாகரனால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் மீண்டும் அங்கே குடியேறுவதற்கு சகல உரித்தும் உடையவர்கள்.

எந்தவொரு சிங்களவரும் பிறமத வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிராகச் சண்டை செய்யவும் இல்லை. ஆனால் வடக்குக் கிழக்கில் பௌத்தர்களின் பாரம்பரிய விகாரைகள், தூபிகள் தமிழர்களினால் தகர்க்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

நான் 1950 களில் புதைபொருள் ஆய்வு தொடர்பாக அங்கு சென்று பல விவரங்களைத் திரட்டியுள்ளளேன்.

1583 வாவிகளும் 1083 கிராமங்களும் 1583 பௌத்த வழிபாட்டுத் தலங்களும் இருந்தன. அவற்றைத் திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

ஒவ்வொரு வாவிகளிலும், கால்வாய்களிலும் ஆரம்ப இடத்தில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டன. ஆனால் அவை இப்பொழுது அழிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் புனரமைத்துப் பாதுகாக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களை விட சிங்கள மக்களே கல்வி, பொருளாதாரம் என்பவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஒரு உதாரணம் கல்வி அபிவிருத்தி. கொழும்பில் 17 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இங்கு உயர்தரம் படிப்பிக்கும் பாடசாலைகள் 32 மட்டுமே இருக்கின்றன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் 4 லட்சத்து 92 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கின்றனர். அங்கு உயர்தரம் படிக்க 33 பாடசாலைகள் இருக்கின்றன. இதை நான் கேட்டால் இனவாதியாகுமா?

யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரைதத்த' என்ற பெயர் கொண்ட இனத்தவர்கள் இருந்தனர். இவர்கள் சிங்களவர் என்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

காங்கேசன்துறை துறைமுகம் கூட முதலாவது பராக்கிரமபாகு மன்னரால் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கு காணப்படும் கல்வெட்டுக்கள் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன.

வர்த்தக ரீதியான கட்டளைகளும், சட்டங்களும் அறிவிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து தமிழர்கள் வியாபார நோக்கமாக இங்கு வந்தனர். இவர்களின் மொழி தமிழ். இவர்கள் இந்த அறிவிப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. இப்படி எல்லாவல மேதானந்த தெரிவித்தார்.

ஆணைக்குழு உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தேரர் பதில் அளித்தார்.

கேள்வி: சிதைக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மீண்டும் கட்டப்படவேண்டும் என்கின்றீர்கள். அப்படியானால் இந்துக் கோயில்களை இடித்து பௌத்த விகாரைகளைக் கட்டினால் மீண்டும் ஒரு மதக்கலவரம் வெடிக்காதா?

பதில்: நான் கட்டிய கோவில்களை இடிக்கவேண்டும் என்று கூறவில்லை. அவை அப்படியே இருக்கட்டும். சிங்களவர்களின் புராதன இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறுகின்றேன்.

கேள்வி: 1983ஆம் ஆண்டில் தமிழர்கள் கொல்லப்பட்ட இனக்கலவரத்தால் தான் வடக்கே ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது எனப் பலர் சாட்சியமளித்துள்ளார்களே?

பதில்: சிங்களவர்களால் இனக்கலவரம் ஏற்படவில்லை. அரசியல் காடையர்களினால் ஏற்பட்டது. அதற்கு சிங்களவர்கள் பொறுப்பல்ல. நீங்கள் இதைக் கூறுகின்றீர்கள். அப்படியானால் 16 சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது சரியாகுமா?

கேள்வி: அப்படியானால் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்படவேண்டும்?

பதில்: இங்கு வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். அவர் அவர்களுடைய மதம், மொழி, கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும். பிரிவினையின்றி ஒற்றுமையாக வாழ உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். இது தான் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் என்று தேரர் கூறினார்.




எல்லாவல தேரரின் கருத்துக்குத் தமிழ்க் கட்சிகள் கண்டனம்


ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவல மேதானந்த தேரர் எம்.பி வியாழக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்லவென்றும் அவ்வாறு கூறுவதற்கு எந்த உரிமையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த சாட்சியம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு மற்றும் புளொட் ஆகிய தமிழ்க் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

த. தே. வி. கூ.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் எம்.பியுமான எம். கே. சிவாஜிலிங்கம் இது தொடர்பில் கூறுகையில்,

"சிங்களவர்களின் மகாவம்சம் கூறுகின்ற வரலாறுகளின் அடிப்படையில் தேசத்துரோக குற்றத்துக்காக இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் தனது 700 தோழர்களுடன் இலங்கை வந்தான். அவ்வாறு வந்தவரே இங்கு சிங்களத்தைப் பரப்பினார். இத்தகையவர்களின் வருகைக்கு முன்னரே இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் தமிழ் மன்னர்களின் ராஜ்ஜியங்களுக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

வடக்கு கிழக்கு தமிழருக்கு சொந்தமானது அல்ல என்று கூறுவதற்கு சிங்களவர்களுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் தமிழர் உரிமை கோருவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அநாவசியமாக பேசி மக்களிடத்தில் குழப்பங்களைத் தோற்றுவித்து இனவாதத்தை பரப்பி வருவதானது தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்டத்துக்குள் தள்ளி விடுவதற்கான சதியாகும். இதனைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

த. தே. கூ.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,

"வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீகம். அது தமிழர்களுக்கே உரிய சொத்தாகும். இனவாதத்தைப் பரப்பி நாட்டிலும் மக்களிடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை அபகரித்து விடுவதற்கே திரைமறைவிலான சதிகள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகின்றன.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்காக இனவாதம் கக்கப்பட்டது. அது தற்போது மீண்டும் முளைவிட்டு வருவதானது தமிழின அழிப்புக்கு ஒப்பானதாகவே தெரிகின்றது.

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக பூமி என்பதற்கு பன்மடங்கு ஆதாரங்கள் இருக்கின்றன. உண்மை வரலாறுகளை அறியாத இவர்கள் தாமாகவே வரலாறுகளை எழுதுவதற்கும் அதனை மெய்ப்பிப்பதற்கும் தந்திரோபாய முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இது நல்லதொரு எதிர்காலத்துக்கான அறிகுறியாகவும் தெரியவில்லை" என்றார்.

புளொட்

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன் கூறுகையில்,

"விஹாரைகள் அமைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளை வைத்துக் கொண்டு வடக்கு பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று தீர்மானிக்க முடியாது. அப்படிப் பார்க்கையில் இந்தியா முழுதும் விஹாரைகள் இருக்கின்றன.

புத்தர் என்கின்ற சித்தார்த்தன் யார் என்பதை இன்றைய சிங்களவர்கள் தேடியறிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அநாவசியமான கருத்துக்கள் மக்களிடையே அசௌகரியங்களை உண்டு பண்ணுகின்றன.

எல்லாவல மோதானந்த தேரர் போன்றோரது இவ்வாறான கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு தடையாகவே அமைகின்றன" என்றார்.

ஜ. ம. மு.

இது குறித்து அறிக்கை விடுத்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான மனோ கணேசன் கூறுகையில்,

கம்பராமாயணம் மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது என்றும் திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும் கௌதம புத்தர் அம்பாந்தோட்டையில் பிறந்தார் என்றும் தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக் கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் மேதானந்த எல்லாவல தேரர் நாளை கருத்து தெரிவித்தாலும் கூட நாம் ஆச்சரியப்படப் போவதில்லை.

ஏனென்றால் இவரை எமக்கு மிக நன்றாகத் தெரியும். தன்னைத்தானே 'வரலாற்று சக்கரவத்தி' என அழைத்துக் கொள்ளும் இந்தத் தேரருக்கு இன்றைய இனவாத யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் வரலாற்றைத் திரிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. எனவே இவரது கட்டுக் கதைகளுக்கும் மோசடி கருத்துக்களுக்கும் பதில் கூறி எமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்றார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல