வெள்ளி, 12 நவம்பர், 2010

சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இலங்கை தமிழ்ப்பெண் மரணம்

சவூதிஅரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்த அலவத்துகொட சைஸ்டன் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உயிரிழந்துள்ளார்.

சைஸ்டன் கிராமத்திலுள் ஏழுகாமம் தோட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை புஷ்பவள்ளி (வயது 36) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார். கணவனை இழந்த இவர் தனது நான்கு பிள்ளைகளையும் படிக்க வைப்பதற்காக 2008 ஆம் ஆண்டு குருநாகலிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றின் மூலம் சவூதிஅரேபியாவுக்குச் சென்று பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து புஷ்பவள்ளியின் பெற்றோர் தெரிவிக்கையில்;

எமது மகள் தனது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்ற நேக்கத்திற்காகவே வெளிநாட்டுக்குச் சென்றார். அவர் எங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதேயில்லை. நாம் அவருடன் தொடர்பு கொண்டால் வீட்டுரிமையாளர்கள் தொடர்பைத் துண்டித்துவிடுவார்கள்.

அவர் எம்முடன் கடைசியாக கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி தொடர்புகொண்டு பேசினார். அப்போது வீட்டு எஜமானி தனக்கு ஒழுங்காக மாதமாதம் சம்பளம் வழங்குவதில்லையெனவும் பணத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்டு டிசம்பர் மாதம் கட்டாயம் இலங்கைக்கு வருவதாகவும் கூறினார். அதற்குப் பிறகு அவர் எம்முடன் தொடர்புகொள்ளவில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை சவூதிஅரேபியாவிலிருந்து அடிக்கடி எமக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தது. அவர்கள் அரபு மொழியில் பேசியதால் எமக்கு அவர்கள் கூறியது விளங்கவில்லை. இதனையடுத்து எமது பக்கத்து வீட்டிலிருந்த அரபு மொழி தெரிந்த பெண்ணொருவரை அழைத்து விடயத்தைக் கேட்டுச் சொல்லுமாறு கூறினோம். அவர் விடயத்தைக் கேட்டுவிட்டு புஷ்பவள்ளி இறந்துவிட்டதாக எமக்குக் கூறினார். இதனையடுத்து அங்கிருந்த தமிழ்ப் பெண்ணொருவர் எம்முடன் தொடர்புகொண்டு புஷ்பவள்ளி மூன்றுநாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

நோயினால் இறக்கும் அளவிற்கு எனது மகளுக்குப் பெரியளவில் நோயிருக்கவில்லை. எனவே, வீட்டுரிமையாளர்கள் எனது மகளை சித்திரவதை செய்தே கொலை செய்திருக்க வேண்டுமென நாம் சந்தேகிக்கின்றோம்.

எனவே, இது சம்பந்தமாக பாரபட்சமற்ற விதத்தில் விசாரணை நடத்தி எமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல