வெள்ளி, 12 நவம்பர், 2010

நேற்றைய சாட்சியங்கள்

சரணடைந்த முக்கிய புலி உறுப்பினர்களை அரசாங்கம் சுட்டுக்கொன்று விட்டது! - துணை அரசியல்துறை பொறுப்பாளரின் மனைவி சாட்சியம்

விடுதலைப்புலிகள் அமைப்பில் துணை அரசியல் பொறுப்பாளராக இருந்த விஜிதரன் என்று அழைக்கப்படும் சிவசிதம்பரப்பிள்ளை ரவிச்சந்திரன் ஆகிய எனது கணவர் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

எனினும் சரணடைந்ததற்குப்பின் அவர் தொடர்பில் எதுவித தகவல்களும் இல்லை.ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை அரசு சுட்டுக்கொலை செய்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு ரவிச்சந்திரன் அறிவொளி கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று நண்பகல் சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலர் பிரிவு மற்றும் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு மக்களிடம் சாட்சியங் களை பதிவு செய்தது.சித்தன்கேணி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இவ் விசா ரணைகளின் போது சாட்சியமளித்த வட்டுக்கோட்டை அராலி மத்தியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அறிவொளி தெரிவித்ததாவது,

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுமாத்தளனை நெருங்கிய இராணுவத்தினர் மக்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை அகோரமாக மேற்கொண்டனர். இதன்போது ஏப்ரல் 2ஆம் திகதி காயமடைந்த நான் ஐ.சி. ஆர்.சி. கப்பல் மூலம் திருகோணமலைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டேன்.

எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பில் துணை அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த விஜிதரன் என்று அழைக்கப்படும் சிவசிதம்பரப்பிள்ளை ரவிச்சந்திரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறை வடைந்த பின் யூனில் ஓமந்தை இராணுவத்திடம் எனது சகோதரனுக்கு முன் சரணடைந்தார்.எனினும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் எனது கணவர் தொடர்பான எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை.

எனது கணவரைத்தேடி பூஸா, வெலிக்கந்தை முகாம்களுக்கு நேரில் சென்றதுடன் ஐ.சி.ஆர்.சி., மனித உரிமைக்குழு என எல்லாவற்றிலும் முறைப்பாடு செய்தும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அரசாங்கம் சுட்டுக் கொன்றுவிட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்தது. எனவே எனது கணவர் தொடர்பான தகவல்களை பெற்றுத் தாருங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிவொளி ரவிச்சந்திரன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.


512 ஆவது படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட "எனது மகனை விடுவிக்காவிடின் தற்கொலை செய்துகொள்வேன்' - சாட்சியத்தில் தாயார் கதறல்

512 ஆவது படையினரால் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட எனது மகன் நிர்மலநாதன் மயூரனை மீட்டெடுத்துத்தாருங்கள் என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன் தாயார் கதறி அழுதார். இல்லாவிடின் நான் தற்கொலைசெய்து கொள்வேன் எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவு மக்களிடம் சாட்சியங்களைப் பதிவதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்றிரவு குருநகர் கலாசார மண்டபத்தில் கூடியது. இதன்போது சாட்சியமளிக்கையிலேயே நிர்மலநாதன் மேரிரஞ்சினி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில்,

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த 512-வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத் தினர் எனது மகன் நிர்மலநாதன் மயூரனை அழைத்துச்சென்றனர். இது தொடர்பில் உடனடியாக நான் மனித உரிமை ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்தேன்.

மேற்படி இடங்களில் நான் முறைப்பாடுகளை பதிவுசெய்துவிட்டு வருவதற்குள் எனது மகனை மாலை 4.00 மணிக்கு இராணுவத்தினர் வீதியால் இழுத்துச்சென்றதை அயலவர்கள் கண்டுள்ளார்கள். இதனை நான் மீண்டும் மனிதஉரிமை ஆணைக்குழுவிடம் நேரில் சென்று தெரிவித்தேன்.

அத்துடன் எனது மகனை அழைத்துச் சென்ற இராணுவத்தினர் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் இலக்கத்தையும் முறைப் பாட்டில் குறிப்பிட்டிருந்தேன். இது தொடர்பில் யாழ்ப்பாணம் வருகை தந்த வாசுதேவ நாணயக்கார, ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டியூ குணசேகர ஆகியோருக்கு கூறியுள்ளேன். ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை என்றார்.

எனவே எனது மகனை மீட்டெடுத்துத்தாருங்கள் இல்லாவிடின் நான் தற்கொலை செய்வேன்.இவ்வாறு நிர்மலநாதன் மேரிரஞ்சினி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.



சிங்கள மக்களை குடியமர்த்தும் அரசு எங்களை ஏன் குடியமர்த்தவில்லை - ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்தவர் கேள்வி

உயர் பாதுகாப்பு வலயங்களில் தமிழர்களை குடியமர்த்த உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமுல்செய்யப்படவில்லை.ஆனால் வடக்கு கிழக்கை பிரிக்கும் உத்தரவு உடனடியாக செயற் படுத்தப்பட்டது. இவ்வாறு நல்லிணக்க ஆணைக் குழுவின் முன் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று சங்கானை மற்றும் சித்தன்கேணியில் நடைபெற்ற சாட்சியமளிப்பின்போது, சிங்கள மக்கள் இரவோடிரவாக நாவற்குழி யில் குடியமர்த்தப்படுகின்றபோதும் 20 வரு டங்களாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேறியுள்ள மக்கள் இதுவரை குடியமர்த்தப்படவில்லை என்று ஒருவர் சாட் சியமளித்தார். இதேவேளை வலி.வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளி யேற்றப்பட்ட நிலையில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக் கல் செய்த ஒருவர் இங்கு சாட்சியம ளிக்கையில், தாம் தாக்கல் செய்த வழக்குக்கு உயர்நீதிமன்றம் உடனடியாக தம்மை குடியமர்த்துமாறு தீர்ப்பு வழங்கியது.

எனினும் அந்தத் தீர்ப்பை இலங்கை அரசாங்கம் இன்றுவரை செயற்படுத்தவில்லை.அதேவேளை தாம் வழக்கு தாக்கல் செய்த நேரத்தில் தாக்கல் செய்யப் பட்ட, வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமாறு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்தியதாக அவர் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கமே மதிக்காதபோது யாரிடம் முறையிடுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



காணாமல் போனவர்களை மீட்பதற்காக இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தோம்

யாழ் குடாநாட்டில் காணாமல் போன கணவன்மார் மற்றும் பிள்ளைகளை இதுவரை கண்டறிய முடியாத நிலையில் அவர்களது பெயர்களைக் கூறி திட்டமிட்ட வகையில் கட்டணங்கள் அறவிடப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அளவெட்டி மகாசபையில் நேற்று நல்லிணக்க ஆணைக் குழு வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அங்கு பிரசன்னமாகி யிருந்த 4க்கும் அதிகமான பெண்மணிகள் இந்த வாக்குமூலத்தினை தெரிவித்திருந்தனர்.அப்பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவர் ஊடாக தொலை பேசி இலக்கங்கள் வழங்கப்பட்டு குறித்த நபரை தொடர்பு கொள்ளுமாறு தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவும் அந்த தொலைபேசி இலக்க நபர் தனது மகன்மார் தொடர்பான முழுமையான விபரங்களைக் கூறி அவர்களை விடுவிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நடைமுறைகளின் கீழ் யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள 512 வது படைத்தளத்திற்கு தம்மை வருமாறு அழைத்ததாகவும் அதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்து அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுமார் 20லட்சம் ரூபாய் பணத்தினை தம்மிடம் பெற்றுச் சென்றதாகவும் அவர்கள் கூறினர். எனினும் படையினரோ இவ்வாறு எவரும் தம்மால் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவித்ததாகவும், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தெல்லிப்பளைப் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் வாக்கு மூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டனர். அவர்களிடம் குறித்த தொலை பேசிப் பரிமாற்றங்கள் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மேலும் பலர் இருப்பதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து இது தொடர்பாகவும் ஆணைக்குழு தீவிரமாக முழு மையான விசாரணைகளை மேற் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழரின் அரசியல் அபிலாசைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை - புத்திஜீவிகள் ஆணைக்குழு முன் சாட்சியம்

கடந்த காலங்களில் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் விடுதலைப்புலிகள் வரையில் தென்பகுதி அரசியல் தலைவர்கள், அரசாங்கங்களுடன் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக தோல்வியிலேயே முடிபடைந்தன.ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எந்த முடிபும் காணப்பட வில்லை என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் நேற்று சாட்சிய மளித்த புத்திஜீவிகள் சுட்டிக்காட்டினர்.

நேற்று பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், பேராசிரியர் ஜீவன் கூல், பேராசிரியர் பொ.பாலசுந் தரம்பிள்ளை, முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டோர் நேற்று சாட்சியமளித்தனர். சாட்சியத்தின் போது ஒரே கருத்துக்களை முன்வைத்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் இரண்டாவது நாளாக நேற்று அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பெரும் பாலானவை இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பது வலி யுறுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்தினரால் கூட்டிச் செல்லப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்களின் கதி என்ன என்பது தெரியாதிருப்பதாக நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று அளிக்கப்பட்ட சாட்சியத்தின் போது தமிழர்களது இன அடையாளம் உறுதிப்படுத் தப்பட்டு அவர்களுக்கு ஆட்சியதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என பேராசிரியர் சி.க.சிற்றம் பலம் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன் னாள் ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் விடுதலைப்புலிகள் வரையில் தென்பகுதி அரசியல் தலைவர்கள், அரசாங்கங்களுடன் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக தோல்வியிலேயே முடிபடைந்ததாகவும் ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முடிபு காணப்படவில்லை என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் நேற்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.

அரசியல் தீர்வு அவசியம்

தமிழர் தாயகமாகிய வடகிழக்கு மாகாணங் களை உள்ளடக்கிய மொழி வழித் தமிழ் அர சின் அமைப்பில்தான் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார்.

இத்தகைய அரசு பிராந்திய அடிப்படை யிலே வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற நேரத்தில் மத்தியில் போதியளவு அதிகாரங் கள் பகிரப்படவேண்டும்.இவ்வாறான நிலைப் பாட்டிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். இதற்கான அடிப்படைக் காரணங்களைப் பார்க்கும் போது அரசியல் திருத்தங்களிலே அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அமைகின்ற அரசியல் அபிலாசைகள் உள் ளடக்கப்படவில்லை.இவ்வாறான அரசியல் திருத்தச் சட்டங்களை மாற்றி அமைக்கின்ற போ தே பல்லின மக்கள் பரந்து வாழ்கின்ற நாடாக இலங்கை புதுப்பொலிவு பெறும் என்றார். ஆயுதப் போராட்டம் ஏற்படலாம்

யுத்தம் முடிபடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிபு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது என நல்லிணக்க ஆணைக்குழு முன் சீ.வீ.கே சிவஞானம் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.அடிப்படையான கட்டுமானப் பணிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினை களுக்கு முடிபை எட்டமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரச கரும மொழியாக தமிழை உள்ளடக்க வேண்டும்

அரசியல் அமைப்புகளில் குறிப்பிடப் பட்டுள்ளது போன்று தமிழ் மொழியை அரச கருமமொழியாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியரும் சமாதானத்துக்கும் நல்லெண் ணத்துக்குமான மக்கள் குழுவின் தலைவரு மான பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தமிழ்க் கைதிகளின் விடுதலை, மீள் குடி யேற்றம் போன்றவை குறித்து பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல