எனவே எனது கணவரை தேடித்தாருங்கள். நல்லிணக்க ஆணைக்குழுவை நம்பித்தான் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு வந்துள்ளேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல் கற்றறறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை அதன் அமர்வு தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் நடைபெற்றது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப் பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
வினோதராஜா சிவரஞ்சனி என்ற அந்தப் பெண் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில் : எனது கணவர் திருகோணமலையில் வைத்து 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் காணாமல் போனார். வாயை கட்டி கடத்தி சென்றனர். யார் கடத்தியவர்கள் என்று தெரியவில்லை.
பின்னர் நாங்கள் கடற்படை முகாமுக்கு சென்று விசாரித்தோம். அவர்கள் தெரியாது என்று கூறிவிட்டனர். மனித உரிமை அமைப்பிலும் முறைப்பாடு செய்தேன்.
இதுவரையும் ஒரு தகவலும் இல்லாமல் உள்ளது.
நான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் இருந்து சாட்சியமளிப்பதற்காக இங்கு வந்தேன்.
எனது பிள்ளைக்கு ஆறு வயதாகின்றது.
அப்பா எங்கே? எனக்கு அப்பா வேண்டும் என்று எனது குழந்தை அடிக்கடி என்னிடம் வினவுகின்றது. காணாமல் போயுள்ள எனது கணவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில் நான் குழந்தைக்கு என்ன பதிலை அளிப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றேன்.
குழந்தை அப்பா வேண்டும் என்று கேட்கும் போது வேதனையை தாங்க முடியவில்லை.
எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு எனது கணவரை தேடித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கோமலேஷ்வரி சுசிதா என்பவர் சாட்சியமளிக்கையில் :
எனது கணவர் ஆட்டோ சாரதியாக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு 7 மாதம் 10 ஆம் திகதி இரண்டு முஸ்லிம் இனத்தவர்கள் இருவர் வந்து எனது கணவரை ஆட்டோவில் வாடகைக்கு வருமாறு அழைத்து சென்றனர். இன்று வரை கணவர் தொடர்பில் தகவல் இல்லை. ஆட்டோ தொடர்பிலும் தகவல் இல்லாமல் இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
அதன் பிறகு குறித்த முஸ்லிம் இனத்தவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
நான் பொலிஸில் முறைப்பாடு செய்தபோது சிங்களம் மொழி தெரியாமையினால் கஷ்டப்பட்டேன்.
எனவே எனது கணவரை எப்படியாவது நல்லிணக்க ஆணைக்குழு கண்டுபிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சுமதி என்பவர் சாட்சியமளிக்கையில் :
நான் புளியங்குளத்தை சேர்ந்தவர். எனது கணவர் 2006 ஆம் ஆண்டு 9 மாதம் 18 ஆம் திகதி கடத்தப்பட்டார். வெள்ளை வானிலேயே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் ஆட்டோ சாரதியாக இருந்தவர்.
ஆட்டோவுடன் சென்றவர் திரும்பி வரவில்லை. பொலிஸ் முறைப்பாடு செய்தேன். அவர் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லாதவர். எனவே எனது கணவரை இந்த நல்லிணக்க ஆணைக்குழு எவ்வாறாவது கண்டுபிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
ஆணைக்குழுவின் தலைவர்: காணா மல்போன உங்கள் கணவர் தொடர்பான தகவல்களை எமது செயலகத்தில் எழுத்து மூலம் ஒப்படையுங்கள். நாங்கள் விசாத்துப் பார்க்கின்றோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக