நேற்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் அநாதரவாக கைவிடப்பட்டிருந்த பேரீச்சம்பழ பையை திருடியவர் ஈ.பி.டீ.பி. அமைப்பைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் செய்தி நேற்று மாலை காட்டுத்தீபோல் குடாநாடெங்கும் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இவ் விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, நேற்று காலையிலிருந்து யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் பருத்தித்துறை பஸ்வண்டிகள் பயணிகளை ஏற்ற தரித்து நிற்கும் இடத்தில் மண் நிறத்திலான ‘சொப்பிங்’ பையொன்று அநாதரவாக கைவிடப்பட்டிருந்துள்ளது. இதனை பல பஸ் பிரயாணிகள் கவனித்திருந்திருப்பினும் அதனை எடுக்கவோ அல்லது திறந்து பார்க்கவோ எவரும் எத்தனித்திருந்திருக்கவில்லை. இந் நிலையில் நேற்று மாலை நான்கு மணியளவில் பருத்தித்துறை பஸ்ஸில் பிரயாணம் செய்ய வந்த இளைஞர் ஒருவர் பஸ்ஸில் ஏறிய பின்னர் இறங்கிவந்து அந்த ‘சொப்பிங்’ பையை எடுத்து திறந்து பார்த்துவிட்டு அதனை தன்னுடன் எடுத்து மீண்டும் அதே பஸ்ஸில் ஏறியிருக்கிறார். இதனை கவனித்த பொது மக்கள் அவரை மடக்கிப் பிடித்து அருகிலிருந்த பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர். இச் செய்தி குடாநாட்டு பத்திரிகைகளின் காதுகளுக்கு எட்டியவுடன் பத்திரிகை நிருபர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டவர் ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவரா என பொலிஸ் அதிகாரிகளை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தனர். பொலிசார் இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல மறுத்து தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகள் முடியும்வரை எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர் அவசர அவசரமாக பத்திரிகையாளர் மாநாடொன்றைக் கூட்டியிருந்த பொலிஸார் அங்கு தெரிவித்ததாவது : “ நேற்று மாலை நாலு மணியளவில் எமக்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலொன்றின்படி யாழ் பேரூந்து நிலையத்தில் பருத்தித்துறைக்குப் புறப்பட இருந்த சிவப்பு நிற அரச பேரூந்து ஒன்றிலிருந்து முப்பத்தி நான்கு வயதுள்ள ஒருவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்திருந்தோம். அவர் நீல நிற சேர்ட்டும் கறுப்பு நிற டெனிம் முழுக் காற்சட்டையும் அணிந்திருந்தார். அவர் ரீ சேர்ட்டோ சாரமோ அணிந்திருக்கவில்லை. அவரை நாம் கைதுசெய்தபோது அவரிடமிருந்து இருபது ரூபாய் பணமும் ஒரு கிலோ அளவு பேரீச்சம்பழங்களுடன் மண் நிறத்திலான ஒரு பையும் கைப்பற்றப்பட்டது. அவரைக் கைது செய்தவுடன் நாம் முதலில் அவரது பெயரையும், முகவரியையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்ததாக அவர் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினரா எனக் கேட்டதற்கு அவர் ஆம் என்று பதிலளித்துள்ளார். இதன் பின்னர் நாம் அவரிடம் எந்த மேலதிக கேள்விகளும் கேட்காமல் நிலத்தில் கைவிடப்பட்டிருந்த பேரீச்சம் பழத்தை களவெடுத்த சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளோம்”.
“பொலிஸ் நிலையத்தில்வைத்து மேலதிக விசாரணைகள் செய்ய முற்பட்டு முதலாவதாக நாம் அவரிடம் அவர் பருத்தித்துறை போகும் பஸ்ஸில் ஏன் இருந்தார் எனக் கேட்டதற்கு அவர் தான் கோப்பாய்க்குப் போவதற்கே பருத்தித்துறை பஸ்ஸில் ஏறி இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். கோப்பாய்க்குப் போவதற்கு ஏன் கோப்பாய் பஸ்ஸி;ல் ஏறாமல் பருத்தித்துறை பஸ்ஸில் ஏறினார் என்பதற்கு அவர் தெளிவான பதில்களைத் தரத் தவறியுள்ளார். இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவர் திடுக்குற்றது எமக்கு அவர்மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் அவர்மீது சந்தேகமுற்ற நாம் அவரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்து வருகிறோம். யாழ்ப்பாணத்திலிருந்து கோப்பாய்க்குப் போகவேண்டியவர் கோப்பாய்க்குப் போகும் பஸ்ஸில் ஏறாமல் பருத்தித்துறைபோகும் பஸ்ஸில் ஏறியதற்கு வேறேதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்” என மேலும் தெரிவித்தனர்.
இவ் விடயம் தெரிந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது மிகவும் பாரதூரமான விடயமெனவும், தமிழ் மக்களை அவர்களது சொந்த வாழ்விடங்களிலேயே நிம்மதியாக வாழவிடாது தடுக்க சிறீ லங்கா அரசு துணைப்படைக் குழுக்களுடன் சேர்ந்து செய்யும் சதியெனவும் காட்டமாக குறிப்பிட்டார். இது பற்றி தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் பொலிசார் இவ்விடயம்பற்றி முழுமையாக விசாரித்து ஈ.பி.டி.பி. கட்சியில் வேறு எவருக்கும் இந்த பேரீச்சம்பழ களவுடன் தொடர்புண்டா என்பதை கண்டறிவது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.
இவ் விடயம் பற்றி நேற்றிரவு கருத்துத் தெரிவித்த ‘உதயன்’ பத்திரிகை நிறுவனரும், ஜக்கிய தேசிய கட்சி, தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் பாரளுமன்ற உறுப்பினர் சப்றா சரவணபவன் அவர்கள், இச் சம்பவங்களின் பின்னணியில் அரசுடன் இயங்கும் ஆயுதக்குழுக்கள் இருப்பதாகவும், இச் சம்பவம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும், அத்துடன் கோப்பாய் போக வேண்டியவர் ஏன் மினி பஸ்ஸில் ஏறாமல் அரச பேரூந்தில் ஏறினார் என்பதையும் பொலிசார் கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமெனவும், இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு ஒரு கடிதமெழுதப் போவதாகவும் தெரிவித்தார்.
இச் சம்பவம்பற்றி யாழ் புத்தி சீவிகள் குழுவும் கவலை தெரிவித்துள்ளது. பேராசிரியர் இரா சிவச்சந்திரன் இச்சம்பவம்பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தென்னிலங்கை அரசுகளின் திட்டமிட்ட செயற்பாடுகளால் யாழ் கலாச்சாரம் எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமெனவும், அரச படைகளால் அல்லது துணை ராணுவக் குழுக்களால் திட்டமிட்டே இப் பேரீச்சம்பழ பை அநாதரவாக நிலத்தில் கைவிடப்பட்டிருந்தது என்றே தான் கருதுவதாகவும், நிலத்தில் கைவிடப்பட்ட பேரீச்சம்பழத்தை எடுத்துச் செல்வது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானதெனவும், இச் சம்பவம் கலாச்சார சீரழிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டெனவும், நல்லூரில் உல்லாச விடுதி அமைக்கும் அரசின் திட்டம் நடைமுறைக்கு வந்தால் இப்படிக் கைவிடப்படும் பொருட்களை பலர் எடுத்துச் சென்று தமிழ் கலாச்சாரச் சீரழிவிற்கு இடமேற்படுமெனவும் கவலை தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி.யின் யாழ் பொறுப்பாளர் திரு கமலேந்திரனுடன் தொடர்பு கொண்டு இவ் விடயம்பற்றி கேட்டபோது, இதுபற்றி நாளை தமது அறிக்கை வெளிவரும் என சுருக்கமாகத் தெரிவித்தார்.
நாளைய யாழ் குடா நாட்டுப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் இச் சம்பவம்பற்றி மேலதிக விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக