செவ்வாய், 11 ஜனவரி, 2011

நடிகை ஷோபனா தற்கொலை!

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நகைச்சுவை நடிகை ஷோபனா நேற்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

காதல் பிரச்சினை காரணமாக அவர் இந்த சோகமான முடிவுக்கு வந்தாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஷோபனா

நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட நிறைய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் `எச்' பிளாக்கில் வசித்து வந்தார்.

நேற்று காலை 10.30 மணியளவில் தாயார் ராணி வங்கிக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷோபனா திடீரென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கதவை உள்பக்கம் சங்கிலியால் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஷோபனா உயிரை விட்டுவிட்டார்.

வங்கிக்கு போய்விட்டு திரும்பி வந்த தாயார் ராணி கதவை நீண்டநேரம் தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகள் ஷோபனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஷோபனாவை எடுத்து சென்றனர். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, ஷோபனா ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர்.

ஷோபனா தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷோபனாவின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.

தாயார் கண்ணீர் பேட்டி
ஷோபனா திடீர் தற்கொலை முடிவை எடுத்தது குறித்து அவரது தாயார் வைரம் ராணி அளித்த கண்ணீர் பேட்டி வருமாறு:-

எங்கள் குடும்பமே சினிமா குடும்பம்தான். நானும், நாடகம் மற்றும் சினிமாவில் நடித்துள்ளேன். வைரம் நாடக குழுவில் நடித்ததால் எனது பெயர் வைரம் ராணி என்று ஆயிற்று. எனது கணவர் ஜெயராமனும் நாடக நடிகர் தான். எனது மூத்த மகள் ஆனந்தி, டைரக்டர் குருசங்கரை மணந்துகொண்டு தியாகராயநகரில் தனியாக வசிக்கிறாள். ஷோபனா எனக்கு 2-வது மகள். பி.காம். பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். 15-வது வயதிலிருந்தே அவள் நாடகங்களில் நடித்து வந்தாள்.

வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சினிமாவிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறாள். நடிகர் வடிவேலுவுடனும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளாள். `மீண்டும் மீண்டும் சிரிப்பு' என்ற டி.வி. சீரியலில் வெண்ணிற ஆடைமூர்த்தியோடு நடித்து ஷோபனா பிரபலமானாள். `ஜில்லுன்னு ஒரு காதல்', `சுறா' உள்பட 100 படங்களில் நடித்துள்ளாள். `இளைஞன்', `சிறுத்தை' உள்பட அவள் நடித்துள்ள இன்னும் 10 படங்கள் திரைக்கு வர இருக்கிறது. `மாமா மாப்ளே' டி.வி. தொடரிலும் ஷோபனா தற்போது நடித்து வந்தாள்.

திருமண ஏமாற்றம்
ஒரு ஆள் காதலித்து திருமணம் செய்வதாக கூறிவிட்டு, ஷோபனாவை ஏமாற்றிவிட்டான். அது, அவளுடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது.

நான் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஷோபனா இனிமேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். `சிக்குன்குனியா' நோயால் பாதிக்கப்பட்டு அவள் அண்மையில் மிகவும் கஷ்டப்பட்டாள். சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு கூட அவளால் போக முடியவில்லை. அவள் மிகவும் நல்லவள். சினிமாவில் நடித்தாலும்கூட அவள் எந்த தவறுக்கும் போகவில்லை.

அவளுடன் நடிக்கும் சக நடிகர்-நடிகைகள் மிகவும் நல்ல பெண் ஷோபனா என்று தான் பாராட்டுவார்கள். சினிமா, டி.வி. தொடரில் நடிப்பதற்காக ஷோபனாவுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி காசோலையாகத்தான் தருவார்கள். அதுபோல கிடைத்த ஒரு காசோலையை வங்கியில் போடுவதற்காக நான் காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள வங்கிக்கு போனேன். நான் போகும்போது ஷோபனாதான் எனக்கு 2 தோசை சுட்டுக்கொடுத்தாள். டீயும் போட்டுக்கொடுத்தாள். அப்போது அவளுடைய மனதில் எந்தவித சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.

சமையலுக்கு கீரை வாங்கி வைத்திருந்தோம். அந்த கீரையை நறுக்கி வேகவைத்துவிட்டு நான் குளிக்க போகிறேன். அதற்குள் நீங்கள் வந்துவிடுங்கள் என்று ஷோபனா சிரித்துக்கொண்டே என்னை வங்கிக்கு அனுப்பி வைத்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்? என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை. அவள், என்னை விட்டு சென்றுவிட்டாள்.

இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.

காதல் பிரச்சினையா?
ஷோபனா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோபனாவின் சோக முடிவுக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஷோபனாவின் தாயார் வைரம் ராணி சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவின் உடல்நிலையும் அவரை கலவரப்படுத்தவே, தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஷோபனாவின் திடீர் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்திலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல