ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

கண்ணீர் அஞ்சலி...

வீட்­டி­லி­ருந்து புத்­தக அலு­மா­ரியை இடம் மாற்றும் நோக்­கத்தில் அலு­மா­ரிக்­க­ருகில் மேசை­யொன்றைப் போட்டு புத்­த­கங்­களைக் கொஞ்சம் கொஞ்­ச­மாக எடுத்து மேசையில் அடுக்­கினேன். மேல் தட்­டி­லி­ருந்த எல்லாப் புத்­த­கங்­க­ளையும் எடுத்து வைத்த பின் தட்டில் விரித்­தி­ருந்த பழ­சாகிப் போன தாள்­களை அகற்­று­வ­தற்­காக அவற்றை எடுத்த போது ஒரு கடித உறை கீழே விழுந்­தது. அதை எடுத்துப் பார்த்தேன். ஆங்­கிலத் தட்­டச்சு எழுத்­துக்­களால் என் பெய­ருடன் சேர்ந்த முக­வரி கடிதம் பிரிக்­கப்­பட்­டி­ருந்­தது.



இக் கடிதம் யாரால் எழு­தப்­பட்­டி­ருக்கும்? இதை யார் பிரித்­தி­ருப்­பார்கள்? இதை ஏன் என்­னிடம் தர­வில்லை? என்று பல கேள்­விகள் மனதில் உதிக்க உறை­யி­லி­ருந்து கடி­தத்தை வெளியில் எடுத்தேன்.

மணி மணி­யான சிங்­கள எழுத்­துக்­களால் நீண்ட தாளொன்றின் இரு பக்­கமும் எழு­தப்­பட்­டி­ருந்­தது. எழுத்தைப் பார்த்­த­துமே யாரு­டைய கடிதம் எனப் புரிந்து கொண்டேன். அக்­க­ணமே கண்கள் கண்­ணீரால் நிறைந்­தன.

செய்து கொண்­டி­ருந்த வேலையை மறந்­த­வ­னாக அப்­ப­டியே சுவரில் சாய்ந்து தரையில் உட்­கார்ந்தேன். மனது பூராகவும் இனம் புரி­யாத ஒரு பர­ப­ரப்­புடன் கடி­தத்தை வாசிக்க ஆரம்­பித்தேன்.

அந்தக் கடி­தத்தை வாசித்து முடிக்க எனக்கு அதிக நேரம் எடுத்­தது. அந்தச் சிங்­களக் கடி­தத்தை இல­கு­வாக வாசித்துக் கொள்­ளு­ம­ள­விற்கு எனக்குச் சிங்­கள மொழி­ய­றிவு இல்­லாத போதும் அதை எழு­தி­ய­வனின் இத­யத்தை முழு­மை­யாகப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய அறிவு எனக்கு இருந்­தது. அதனால் அக்­க­டிதம் கூறி நிற்கும் எண்­ணக்­க­ருவை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்­தது. ஆம் என்­னையும் என் குடும்­பத்­தையும் உயி­ருக்­கு­யிராய் நேசித்த சகோ­தர இனத்­த­வ­னான என் இனிய நண்பன் விஜித்­தவின் கடிதம் தான் அது! இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன் எழு­தப்­பட்­டி­ருந்த அக்­க­டிதம் இன்­றுதான் என் கண்ணில் பட்­டி­ருக்­கி­றது.

கடி­தத்தை வாசித்து முடித்த போது நான் நன்­றாக அழுது விட்­டி­ருந்தேன். அப்­போது ஏதோ அலு­வ­லாக நான் இருந்த பக்­க­மாக வந்த அத்தான்,. நான் இருந்த கோலத்தைப் பார்த்துத் திடுக்­கிட்­ட­வ­ராக 'என்ன தீபன் ஏன் அழு­கிறாய்?' என்று கேட்­ட­படி அருகில் வந்­தவர் 'என்ன கடிதம்? அது யார் எழு­தி­யது?" என்று கேட்டார்.

நான் எதுவும் பேச­வில்லை. மௌன­மாக அத்­தா­னிடம் கடி­தத்தைக் கொடுத்தேன்.

'என்ன இது சிங்­களக் கடிதம் ? யார் அனுப்­பி­யது ? என்று கேட்டார்.

எனது நண்பன் விஜித்த அனுப்­பிய கடிதம் அத்தான். வாசிச்சுப் பாருங்க' என்றேன்.

நானும் அத்­தானும் உரை­யா­டிய சத்தம் கேட்டு அவ்­வி­டத்­திற்கு அம்மா, அக்கா, தங்­கைகள், தம்பி எல்­லோ­ருமே வந்து சேர்ந்து விட்­டனர். நான் அழுத கண்ணும் சிந்­திய மூக்­குமாய் தரையில் உட்­கார்ந்­தி­ருப்பதையும் அத்தான் கையில் கடி­தத்­துடன் நிற்­ப­தையும் பார்த்துக் குழப்­ப­ம­டைந்­த­வர்­க­ளாக ஆளையாள் பார்த்துக் கொண்­டனர். அவர்கள் ஒவ்வொருவராக வினா­வெ­ழுப்­பு­வ­தற்குள் அத்­தானே விபரம் கூறினார்.

விஜித்­தவின் கடி­த­மென அறிந்­ததும் அதை வாசித்துச் சொல்லும் படி எல்­லோரும் அவரை வற்­பு­றுத்­தினர். அத்­தா­னுக்குச் சிங்­களம் தண்­ணீர்­பட்ட பாடு!

அவர் பது­ளையில் பிறந்து வளர்ந்­தவர். சிங்­கள மீடி­யத்தில் கல்வி கற்­றவர். எண்­பத்து மூன்று கல­வ­ரத்தில் இடம்­பெ­யர்ந்து கிழக்கு மாகா­ணத்து வாசி­யாகி எண்­பத்­தொன்­பதில் ஒரு கோவிலில் அக்­காவைக் கண்டு விருப்­பப்­பட்டு தன் பெற்றோர் மூல­மாகப் பெண் கேட்டு முறைப்­படி திரு­மணம் செய்து கொண்­டவர்.

அத்தான் கடி­தத்தை வாசித்து ஒவ்­வொரு வச­ன­மாக தமி­ழாக்கம் செய்தார்.

அன்­பான தீபன்,

'எப்­படி இருக்­கி­றீர்கள்? இருக்­கி­றீர்­களா அல்­லது நடந்து முடிந்த கல­வ­ரத்தில் நீங்­களும் இல்­லாமல் போனீர்­களா? தெரி­ய­வில்லை. கடவுள் கிரு­பை­யினால் உங்கள் பகு­தியில் அப்­ப­டி­யேதும் நடந்­தி­ருக்­கா­தென நம்­பு­கிறேன்.

தீபன் எனக்கு எது­வுமே புரி­ய­வில்லை. நாம் எல்­லோரும் மனி­தர்கள் தானே தீபன் ? ஏன் ஆளை ஆள் அடிக்­கிறோம்? ஒரு­வ­ரை­யொ­ருவர் கொல்­கிறோம்? விலங்­குகள் கூட தம்­மி­னத்தைக் கொல்­வ­தில்­லையே தீபன் ? நாம் ஏன் இப்­படி?

கல­வரம் நடந்த போது நானும் மாலி­னியும் கொழும்பில் தான் இருந்தோம் நான் கண்ட காட்­சி­க­ளையும் தமிழ் மக்கள் பட்ட பாடு­க­ளையும் நேரில் உங்­களைக் காணும் போது சொல்­கிறேன். அந்தக் காட்­சி­களைக் கண்டு நான் அடைந்த மன வேத­னையும் அழுத அழு­கையும் கொஞ்­ச­மல்ல. உண்ண முடி­யாமல் உறங்க முடி­யாமல் தவித்தேன்.

அந்த விரும்­பத்­த­காத காட்­சி­களைப் பார்த்தும் அவற்றைத் தடுக்கக் கூடிய நிலைமை இருக்­க­வில்லை எனக்கு.

நான் மிக மனம் நொந்து போயி­ருந்த வேளையில் என் நண்­ப­னொ­ருவன் என்னைத் தன் வீட்­டிற்கு அழைத்தான். அங்கு நான் சென்றேன். அவ­னது வீட்டில் இரண்டு தமிழ் குடும்­பங்­களைக் கொண்ட ஒன்­பது பேரைத் தன் வீட்டில் இர­க­சி­ய­மாக மறைத்து வைத்துக் காப்­பாற்றிக் கொண்­டி­ருந்தான். அவ­னது இந்தச் செயல் எனது துய­ர­மான மன­துக்கு சற்றே ஆறு­த­ல­ளிப்­ப­தாக இருந்­தது. அந்த இரு குடும்­பங்­க­ளையும் காப்­பாற்றி நிலைமை சற்று சீர­டைந்­ததும் அவர்­களை அவர்­களின் சொந்த இடங்­க­ளுக்கு அனுப்பும் பணியில் நண்­ப­னுக்கு வலது கர­மாக உத­வினேன். எனது நண்­பனை நினைத்துப் பெரு­மை­யாக இருந்­தது. ஆக எல்­லோ­ருமே தப்­பா­ன­வர்­க­ளல்ல. மனித நேயம் இன்னும் மர­ணித்துப் போய் விட­வில்­லை­யென சிறிது நிம்­ம­தி­ய­டைந்தேன். அந்த இரு குடும்­பங்­க­ளுக்கும் உதவும் போது எனக்கு உன்­னையும், அப்பா, அம்மா, தம்பி, தங்­கை­க­ளை­யுமே ஞாப­கத்­திற்கு வந்­தது.

தீபன் ஏனோ தெரி­ய­வில்லை நடந்து முடிந்த இந்த அசம்­பா­வி­தத்­திற்­காக இங்­குள்ள எல்லோர் சார்­பிலும் உன்­னிடம் மன்­னிப்புக் கேட்க வேண்டும் போலி­ருக்­கி­றது. மன்­னித்துக் கொள் தீபன். அப்பா அம்மா தம்பி தங்­கை­க­ளி­டமும் நான் மன்­னிப்புக் கேட்­ட­தாகச் சொல். கடி­தத்தில் சில இடங்­களில் எழுத்­துக்கள் கலங்­கி­யி­ருக்­கின்­றன. அது என் கண்­ணீர்த்­து­ளிகள் பட்ட இடங்கள். முடி­ய­வில்லை தீபன்... என் கண்­ணீரைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யவே இல்லை. வீட்­டி­லுள்­ள­வர்கள் சில சமயம் என்னைக் கிண்டல் செய்­கி­றார்கள். சில சமயம் ஏசு­கி­றார்கள். என் மனதின் வலி எனக்­குத்தானே தெரியும்.

தீபன் நடந்து முடிந்த இந்தக் கோர­மான சம்­ப­வங்­களை காலம் மறக்கச் செய்யும். நாம் முன்­போல ஒற்­று­மை­யாக வாழும் நிலைமை ஏற்­படும். அப்­போது நாம் சந்­திப்போம் அதற்­காகப் பிரார்த்­திப்போம் காத்­தி­ருப்போம். இறைவன் துணை!

உங்­க­ளை­யெல்லாம் மற­வாத விஜித்த.

விஜித்­தவின் கடி­தத்தை அத்தான் வாசித்து முடித்த போது எல்­லோ­ருமே அழுது விட்­டி­ருந்­தனர். கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்டு ஒரு தம்­பி­யையும் சகல உைடமை­க­ளையும் இழந்து இடம்­பெ­யர்ந்து வந்த அத்­தா­னுக்கு சகோ­தர இனத்­தா­ருடன் ஏற்­பட்­டி­ருந்த கசப்­பு­ணர்வு கூட விஜித்­தவின் கடி­தத்தால் மறைந்து விட்­டது போலி­ருந்­தது. அத்­தானும் கண் கலங்கி எப்­பேர்ப்­பட்ட நல்ல மனசு இவ­னுக்கு என்றார் மன­சார!

அவன் மிச்சம் நல்­லவன். இஞ்ச அவன் இருந்த காலத்தில் நான் அவனைப் பத்தி அதி­ச­யப்­பட்­டி­ருக்கன். அவன் ஒரு தெய்வப் பிறப்பு என்றார் அம்மா.

அம்­மாவைத் தொடர்ந்து அக்கா தம்பி தங்­கைகள் எல்லாம் விஜித்த பற்­றிய தமது மனப்­ப­தி­வு­களைப் பகிர்ந்து கொண்­டனர்.

'ஏன் அம்மா இந்தக் கடி­தத்தை என்­னட்டத் தரல்ல? யார் இதை இந்த அலு­மா­ரிக்குள் மறச்சு வச்­சது? என்று அம்­மாவைக் கேட்டேன்.

கடி­தத்தை நாங்க மறச்சு வைக்­கல. இது அப்­பாட வேலை­யா­கத்­தா­னி­ருக்கும். அவர் தானே அடிக்­கடி இதைத் திறப்­பவர் ? இந்தக் கடிதம் வந்­தது கூட எங்­க­ளுக்குத் தெரி­யா­தென்றார் அம்மா.

அம்­மாவின் விளக்கம் சரிதான். ஏதோ காரணம் கருதி இதைப் பற்றி இவர்­க­ளிடம் அப்பா சொல்­லாமல் விட்­டி­ருக்­கலாம். அவர் தான் இப்­போது உயி­ருடன் இல்­லையே என மனசில் நினைத்­துக்­கொண்டேன்.

'இப்­ப­டிப்­பட்ட ஒரு நல்­ல­வனைப் பற்றி இது வரை யாருமே என்­னிட்ட சொல்­ல­லையே என்று கேட்டார் அத்தான்.

சொல்­ல­லத்தான் அத்தான். ஆனாலும் நாங்க யாருமே அவன மறக்­கல. எல்­லார்ட்ட மன­சி­லயும் அவன்ர நினைப்பு இருக்கு. பாவம் கடி­தத்தை அனுப்பி விட்டுப் பதி­லுக்­காக காத்­தி­ருப்பான்" என்றேன் நான்.

'இப்­பதான் நாட்டு நிலைமை நல்­லா­யி­ருக்கே. ஒருக்கப் போய் அவன பார்த்துப் பேசிற்று வர­லாமே' என்றார் அம்மா. 'ஓமம்மா கட்­டாயம் போக­வேணும். ஏன் அத்தான் ஒரு தரம் நான் போகத்தான் வேணும். நீங்­களும் வாறீங்­களா?' என்று அத்­தானை கேட்டேன்.

'கட்­டாயம் போவம் எனக்கு அவரைப் பாக்க வேணும் போலி­ருக்கு' என்றார் அத்தான்.

அன்­றி­ரவு உணவு வேளை­யிலும் அம்மா விஜித்த பற்றி நினைவு கூரவே எல்­லோரும் அவனைப் பற்றி அவ­னது நல்ல குணங்கள் பற்றிப் பேசினோம். அவ­னது மனது மிகவும் புண்­பட்­டி­ருப்­பதை மற்­ற­வர்­களை விட என்னால் நன்கு உணர முடிந்­தது.

இரவு படுக்­கைக்குப் போன எனக்கு தூக்கம் வர­வில்லை. விஜித்­தவின் நினைப்பே தூங்க விடாமல் என்னை அலைக்­க­ழித்­தது.

ஆயி­ரத்து தொளா­யி­ரத்து எழு­பத்­தெட்டாம் ஆண்டு. நான் எனது பிர­தே­சத்து நெல் கொள்­வ­னவு நிலை­ய­மொன்றில் சிற்­றூ­ழி­ய­னாக வேலை செய்தேன். அப்­போது களஞ்­சியப் பொறுப்­பா­ள­ராக வந்து சேர்ந்தார் விஜித்த.

ஆரம்­பத்தில் சாதா­ர­ண­மாக பழ­கிய விஜித்த நாளாக நாளாக என்­னிடம் மிகவும் பிரியம் காட்­டினார். கிட்­டத்­தட்ட என்னை விட எட்டு வயது கூடி­யவர். பல்­க­லைக்­க­ழ­கப்­பட்­ட­தாரி. நான் சாதா­ரண தரத்தில் கோட்டை விட்­டவன். அவர் வச­தி­யான குடும்­பத்­தவர். தனது தேவைக்­காக கார் கூட வைத்­தி­ருக்­கிறார். நான் வறிய குடும்­பத்­தவன்.

இனம், மொழி, வயது, பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வு, கல்­வித்­தரம் எது­வுமே அவரைக் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை. தீபன் தீபன் மல்லி என்று தன் உடன் பிறப்­பாகப் பாசம் காட்­டினார்.

அந்த வருடம் வந்த பொங்கல் திரு­நா­ளுக்கு அவரை என் வீட்­டிற்கு அழைத்தேன். மகிழ்­வோடு வந்தார்.

எனது அப்­பா­வுக்கு சிங்­களம் நன்­றாகத் தெரியும். அதனால் அப்­பா­விடம் பல விட­யங்­களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்­பாவை அவ­ருக்கு மிகவும் பிடித்துப் போனது. அம்மா தம்பி சகோ­த­ரிகள் எல்­லோ­ருமே விஜித்­தவின் நல்ல பண்­பு­க­ளையும் அவ­னது அன்­பையும் பார்த்து மிகச் சந்­தோ­ஷப்­பட்­டனர். மொத்­தத்தில் விஜித்த என் பெற்­றோ­ருக்கு இன்­னொரு மக­னானார். தம்பி சகோ­த­ரி­க­ளுக்கு மற்­றொரு அண்­ண­ணானான்.

எங்கள் வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்­வு­களில் கூட விஜித்த பங்­கேற்றான். எங்கள் அய­ல­வர்­க­ளுடன் அவனும் அன்­பாகப் பழ­கினான். ஊரி­லி­ருந்து வரும் போது றம்­புட்டான், கொய்யா, பலாப்­பழம் என நிறை­யவே கொண்டு வருவான். ஏன் இப்­படி அதி­க­மாக என்று கேட்டால் பக்­கத்து வீடு­க­ளுக்கும் கொடுக்கச் சொல்வான். சில சமயம் அவனே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவான்.

எம்­பி­லிப்­பிட்­டிய என்னும் அவ­னது கிரா­மத்­திற்கு என்னைப் பல தடவை அழைத்துச் சென்­றுள்ளான். அவ­னுக்கு எண்­பத்­தோராம் வருடம் கொழும்பில் திரு­மணம் நடந்த போது எங்கள் குடும்­பத்­தினர் அனை­வ­ரையும் கட்­டாயம் வரச் சொல்லி அவ­னது செலவில் வாக­ன­மொன்­றையும் ஏற்­பாடு செய்து தந்தான். எல்­லோரும் போய் வந்தோம்.

ஆசி­ரி­யை­யான அவ­னது மனை­வியைத் திரு­ம­ணத்­திற்கு அடுத்து வந்த விடு­மு­றையில் அழைத்து வந்து ஒரு வாரம் வரை எங்கள் வீட்டில் தங்க வைத்து எங்­களைச் சந்­தோ­ஷப்­ப­டுத்­தினான். மாலி­னிக்கு நன்­றாகத் தமிழ் பேச முடி­யு­மா­தலால் அவளும் எங்­க­ளுடன் இயல்­பாகப் பழ­கினாள். வீட்டில் நின்ற போது ஒரு நாள் அவர்­க­ளி­ரு­வரும் கடைக்குப் போய் சமை­ய­லுக்­கான எல்லாப் பொருட்­க­ளையும் வாங்கி வந்து அம்­மாவை சமை­ய­லறைப் பக்கம் வரக் கூடா­தென்று வெளி­யேற்றி விட்டு அவர்­க­ளி­ரு­வ­ரு­மாகச் சமைத்து எங்­களை உட்­கார வைத்துப் பரி­மா­றினர்.

எங்­க­ளுக்கும் விஜித்­த­வுக்­கு­மான நட்­பையும் அன்­பையும் பார்த்து எமது அய­ல­வர்கள் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­துண்டு. இது பூர்வ ஜென்மத் தொடர்­பா­கத்­தா­னி­ருக்­கு­மென முன் வீட்டுத் தேவகி மாமி கதைத்­த­துண்டு அது உண்­மை­தானோ என்­னமோ?

எண்­பத்து மூன்று ஜன­வ­ரியில் விஜித்த இட­மாற்றம் பெற்று எங்­களை விட்டுப் பிரிந்­தது ஒரு சோக நிகழ்வு. அவன் அழுத அழு­கையும் பட்ட பாடும் கொஞ்­ச­மல்ல. கடை­சியில் அப்­பாவும் நானும் அவ­னுடன் போய் அவனை விட்டு விட்டு வந்தோம்.

அந்­நாட்­களில் எங்கள் பகு­தியில் தொலைத்­தொ­டர்பு வச­தி­க­ளில்லை. கடிதத் தொடர்­புகள் தான் சுக செய்­தி­களைக் கேட்டு கடிதம் போடுவான். நாங்­களும் பதில் போடுவோம்.

எண்­பத்து மூன்று கல­வரம் நடந்த கையோடு அப்பா என்னை மத்­திய கிழக்கு நாட்டின் றியாத் என்­னு­மி­டத்­திற்கு அனுப்பி விட்டார். அங்­கி­ருந்த போது நான் அவ­னுக்குப் பல தடவை போன் பண்­ணினேன். கடி­தங்கள் போட்டேன்.

அங்­கி­ருந்து வந்த பின் அவ­னது மனை­வியின் கொழும்பு வீட்­டிற்குப் போனேன். அவ் வீட்டில் வேறு ஆட்கள் குடி­யி­ருந்­தார்கள். அவர்­க­ளுக்கு விஜித்த குடும்­பத்­தி­னரைப் பற்றி எதுவும் தெரி­ய­வில்லை. எம்­பி­லிப்­பிட்­டி­ய­வி­லுள்ள அவ­னது வீட்­டிற்குப் போகக்­கூ­டிய சூழ்­நிலை அப்­போது இருக்­க­வில்லை. றியாத்­தி­லி­ருந்து நாடு திரும்­பிய நான் ஆறு மாதங்­க­ளுக்குள் பிரான்ஸ் போய் விட்டேன்.

பிரான்ஸில் நல்ல வேலையும் நல்ல சம்­ப­ளமும் கிடைத்­தது. கிட்­டத்­தட்ட ஐந்து வரு­டங்­க­ளுக்குள் அக்­காவின் திரு­மணம் தங்­கை­களின் படிப்பு, அவர்­களின் திரு­மணம், தம்­பியின் படிப்பு, எல்­லோரும் வாழக் ­கூ­டிய விதத்தில் வீடு என எல்லாக் கட­மை­க­ளையும் முடித்த பின் எனது முப்­பத்து மூன்­றா­வது வயதில் பெற்றோர் ஏற்­பாடு செய்த அமிர்தா என்­கின்ற என் உற­வுக்­காரப் பெண்ணை இந்­தி­யா­வுக்கு வந்து திரு­மணம் செய்து மீண்டும் பிரான்ஸ் சென்று மனை­வியை ஒரு வரு­டத்­திற்குள் அழைப்­பித்துக் கொண்டேன்.

மிக மகிழ்ச்­சி­யான எமது இல் வாழ்க்­கையில் நான்கு ஆண்­டு­க­ளுக்குப் பின் ஒரு பெண் குழந்­தையும் இரண்டு ஆண்­டுகள் கழித்து ஒரு ஆண் குழந்­தையும் கிடைத்­தனர். முதற் குழந்தை கிடைத்­த­தோடு அமிர்தா வேலைக்குச் செல்­வதை நிறுத்தி குழந்­தையைப் பரா­ம­ரித்தாள். மகன் பிறந்த பின் அவளின் முழு நேரமும் பிள்­ளை­க­ளு­ட­னேயே கழிந்­தது.

அப்­பா­வுக்கு உடல் நலக் குறை­வா­யி­ருப்­ப­தாக செய்தி கிடைக்­கவே எல்­லோரும் வர முடி­யா­ததால் நான் மட்டும் நாடு திரும்பி ஒரு மாதம் வரை ஊரில் நின்று மீண்டும் பிரான்ஸ் சென்றேன். அடுத்த மாதமே அப்பா கால­மாகி விட்டார்.

அப்பா கால­மாகி இரு வரு­டங்­களின் பின் என் வாழ்வில் மிகப் பெரிய பேரி­ழப்பை நான் சந்­திக்க நேர்ந்­தது ஆம் என் அன்பு மனைவி அமிர்­தாவும் என் பாசக்­கு­ழந்­தைகள் அம்­ரி­தாவும் மாதுங்­கனும் காரில் செல்லும் போது விபத்­தொன்றில் சிக்கி அவ்­வி­டத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். அந்தப் பேரிடி என் மனதை மிக மோச­மாகப் பாதிக்கச் செய்து மன­நோ­யா­ளி­யாக்கி விட்­டி­ருந்­தது. என்னைப் பிரான்ஸ் எடுப்­ப­தற்கு உத­விய என் நண்பன் மனோ­கரன் தன் கூடவே என்னை வைத்து சிகிச்­சை­ய­ளித்துப் பரா­ம­ரித்து குண­மாக்­கினான். தொடர்ந்தும் பிரான்ஸில் இருக்கப் பிடிக்­காமல் நாடு திரும்பி அம்மா சகோ­த­ரிகள் தம்பி மைத்­துனன் மரு­மக்கள் ஆகி­யோ­ருடன் வாழ்­கின்றேன். இரண்­டா­வ­தாக எனக்­கொரு மனை­வியைத் தேடித் தர அம்மாவும் சகோ­த­ரிகளும் பல­வி­த­மாக வற்­பு­றுத்­திய போதும் நிர்த்­தாட்­சண்­ய­மாக அவர்­களின் வேண்­டு­கோளை நிரா­க­ரித்து அவர்­க­ளு­ட­னேயே வாழ்­கிறேன். இந்த நிலை­மையில் வாழும் எனக்கு விஜித்­தவின் அன்பும் நட்பும் மனதின் ஒரு புற­மாக அமிழ்ந்து விட்­டதில் தவ­றில்­லையே?

ஆயினும் அவ­னது கடிதம் அமிழ்ந்து கிடந்த நினை­வு­களைக் கிளறி விட்­டது. விஜித்த இப்­போது எப்­ப­டி­யி­ருப்பான்? தலை­மு­டி­யெல்லாம் நரைத்து கிழ­வனாகி இருப்­பானோ என்­றெல்லாம் யோசித்த எனக்கு விஜித்­தவின் படங்­களைப் பார்க்கும் எண்ணம் ஏற்­பட்­டது. அவ­னது படங்கள் இருந்த ஆல்­பங்­களைத் தேடினேன். விடிந்­ததும் அம்மா சகோ­த­ரி­க­ளிடம் கேட்டேன். அவை­யெல்லாம் சுனாமி நீரில் அகப்­பட்டு பழு­த­டைந்து விட்­ட­தாகக் கூறினர்.

சில­வேளை அப்­பாவின் அறையில் அவ­ரது பொருட்­க­ளுடன் ஏதும் படங்கள் இருக்­கக்­கூடும். போய்ப் பார் என்றார் அம்மா. அவரின் அறையில் சுவரில் பொருத்தி கண்­ணா­டி­யி­டப்­பட்ட இறாக்கை வடி­வி­லான தட்­டுக்கள் சில இருந்­தன.

அவை உய­ர­மாக இருந்­ததால் சுனாமி நீரினால் சேத­ம­டை­ய­வில்லை என்ற கார­ணத்தால் சற்று நம்­பிக்­கை­யுடன் அவற்­றிலும் தேடினேன். எதுவும் கிடைக்­க­வில்லை. ஆயினும் அப்­பாவின் நாட்­கு­றிப்புக் கொப்­பி­களில் விஜித்த பற்றி அவன் கடை­சி­யாக எழு­திய கடிதம் பற்றி ஏதும் எழு­தி­யி­ருப்பார் என்ற நோக்கில் கடி­தத்­திற்­கு­ரிய எண்­பத்து மூன்­றுக்­கு­ரி­ய­தான கொப்­பியைக் கையி­லெ­டுத்து கொண்­ட­வ­னாக உட்­கார்ந்தேன்.

இந்த இடத்தில் என் அப்­பாவைப் பற்றிச் சில வார்த்தை சொல்­லி­யாக வேண்டும். அவர் சிங்­கள மொழியில் அழ­காகப் பேசுவார். எழுத வாசிக்­கவும் நன்­றாகத் தெரியும். விஜித்­த­வுக்கு தமிழில் எழு­தவும் பேசவும் அவர்தான் கற்­றுக்­கொ­டுத்தார். அதனால் அவ­னுக்கும் அப்பா மீது வெகு பிரியம். அவரை அவன் அப்பா என்றே அழைப்பான்.

அப்பா அன்­றாட விசேட செய்­தி­களை பெரிய அப்­பி­யாசக் கொப்­பியில் மணிச் செய்­தி­யாக எழுதும் வழக்கம் உடை­யவர். அது வீட்டுச் செய்­தி­யா­கவும் இருக்கும். நாட்டுச் செய்­தி­யா­கவும் இருக்கும். ஏன் உலகச் செய்தியாகவும் இருக்கும். கொப்பியின் ஒரு பக்கத்தில் பத்து நாட்களுக்குரிய செய்தி அடங்குமாப்போல எழுதுவார்.

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தெட்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அவர் காலமாகும் வரை இருநூறு பக்கங்கள் கொண்ட ஆறு கொப்பிகள் அழகாக இலக்கமிடப்பட்டு அடுக்கியிருந்தார். அவர் கடைசியாக எழுதிய ஆறாவது கொப்பியைப் புரட்டினேன். விஜித்த பற்றி பல சந்தர்ப்பங்களில் எழுதியிருந்தார். அவன் ஊருக்குப் போனது, திரும்பி வந்தது, திருமணம் செய்தது, மாலினியை அழைத்து வந்தது இடமாற்றம் பெற்றுப் போனது, கடைசியாக அவன் கடிதம் அனுப்பியது எல்லாமே எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை அப்பா வாசித்து விட்டு யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கின்றார் என்று புரிந்தது.

அத்திகதிக்குப் பின் எழுதப்பட்டிருந்த குறிப்புக்களை சுவாரஷ்யமில்லாமல் புரட்டினேன். சிவப்பு மையினால் இரண்டு வரிகளில் ஒரு குறிப்பு!

எனது இன்னுமொரு மகன் விஜித்த மனநிலை பாதிக்கப்பட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்

அப்பாவினால் எழுதப்பட்ட இந்தச் சிவப்பு வரிகளைப் படித்து அழ ஆரம்பித்தேன். என் அழுகைச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். செய்தியை அறிந்து எல்லோரும் அழுதனர். அவனுக்காக இந்த கண்ணீர் அஞ்சலியைத் தவிர எங்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?

 திருக்கோவில் யோகா யோகேந்திரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல