வெள்ளி, 8 அக்டோபர், 2010

இலங்கை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி: தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது

புதுவை தேங்காய்திட்டில் இருந்து இலங்கை அகதிகளை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சி நடப்பதாக சி.ஐ.டி. போலீசாருக்குரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சி.ஐ.டி. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஒரு மர்ம படகு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த மீன்பிடி விசைப்படகை, கடலோரக் காவல் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட படகு, புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் சக்திவேலுக்கு சொந்த மானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து புதுவை சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தமிழக பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் சிலரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக, கடந்த 4-ந்தேதி கவுன்சிலர் சக்திவேலுக்கு சொந்தமான படகில் புதுவை தேங்காய் திட்டு துறைமுக பகுதியில் இருந்து ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த விவரம் சி.ஐ.டி. போலீசாரின் கவனத்திற்கு சென்றது.

இதையறிந்த படகில் இருந்தவர்கள், இலங்கை அகதிகளை மீண்டும் புதுவைக்கு அழைத்து வந்து விட்டுள்ளனர். பின்னர் அந்த படகை புதுவையிலிருந்து காரைக்கால் துறைமுக பகுதிக்கு ஓட்டிச் சென்று, அங்கேயே விட்டு விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் மற்றும் வீராம்பட்டினத்தை சேர்ந்த சிலோன் கண்ணன், வைத்திக்குப்பம் ஜீவா, பெரியார் திராவிடர் கழக புதுவை மாநில தலைவர் லோகு அய்யப்பன் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.

கைதான 4 பேர் மீதும் பாஸ்போர்ட் சட்டம் 1967 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 34, பிரிவு 14 (1) (கூட்டு சதி), வெளிநாட்டினர் சட்டம் 1946 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் கூறியதாவது:-

கவுன்சிலர் சக்திவேலின் படகில் ஏற்றிச்சென்ற அகதிகள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அகதிகளை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயன்றார்களா அல்லது இலங்கைக்கு அனுப்ப முய்னறார்களா என்பது விசாரணையில் தெரியவரும்.

கைதான சிலோன் கண்ணனின் பூர்வீகம் இலங்கை. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுவைக்கு வந்துள்ளார். கண்ணன் மீது இங்கு எந்த வழக்கும் இல்லை.

பிடிபட்டவர்கள் 4 பேருக்கும் விடுதலைப்புலிகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபரங்களை கண்டறிவதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தெரிவித்தார். சி.ஐ.டி. எஸ்.பி. ரவீந்திரன் உடன் இருந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல