வெள்ளி, 8 அக்டோபர், 2010

அதிக‌ரித்து வ‌ரும் ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளும் வ‌க்கிர‌ உண‌ர்வுக‌ளும்

துணி துவைக்கும் இயந்திரத்தில் தனது எட்டு மாத ஆண் குழந்தையைப் போட்டு இயந்திரத்தை இயக்கி குழந்தையை கொலை செய்த பெண்ணொருவர் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.

கேரளா மாநிலம் ஆலபுலா என்ற பகுதியைச் சேர்ந்த 40 வயதான இளம் தாயொருவரே இச்செயலில் ஈடுபட்டவராவார். பொலிஸார் இவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து இவர் ஓர் மனநோயாளி என்ற விடயம் தெரியவந்தது. இவ்வாறு விசித்திரமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இந்தியாவில் மாத்திரமன்றி உலகில் பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி இடம்பெற்று வருவதுண்டு.

இதற்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல என்ற வகையில் இங்கும் அண்மைக்காலமாக இவ்வாறான விசித்திரமான சம்பவங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. அது பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்வது, வீதிகளில் போட்டு விட்டுச் செல்வது, விலைகூறி விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக மிகமோசமாக இடம் பெற்று வருகின்றன. அந்தவகையில், பிறந்து சில மணித்தியாலங்களேயான சிசு ஒன்றை குத்தி கொலை செய்து சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த பெண்ணொருவரை சப்புகஸ்கந்த பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

வயிற்றுவலியெனக் கூறி கழிவறைக்குச் சென்ற குறித்த பெண் குழந்தையை பிரசவித்ததாகவும் அதேவேளை, அக்குழந்தையின் கணவர் குளிர்சாதனப் பெட்டியில் இரத்தக் கறையைக் கண்டு அதனை திறந்து பார்த்தபோது அங்கு சிசுவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்ததாகவும் தெரியவருகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் வக்கிர உணர்வுகள் அதிகரி த்திருப்பதையே இவை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

கடந்தவாரம் பதுளையைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் பிரசவித்த குழந்தையை 20 ஆயிரம் ரூபாவுக்கு கூறி விற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. பசறை மடுல்சீமை ரோபத் தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவரே குடும்ப வறுமை காரணமாக தனது பிள்ளையை இவ்வாறு விற்பனை செய்துள்ளார்.

இதேவேளை, 11 வயதான தனது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ட்படுத்தியதாக சிறுமியின் பாட்டனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆனமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின் தந்தை தாயை விட்டு பிரிந்து சென்ற நிலையில் சிறுமி தனது தாயின் பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் பாடசாலை விட்டு வீடு திரும்பி தனிமையில் இருந்த வேளையிலேயே பாட்டனாரால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காலம் போகும் போக்கில் சொந்த சகோதரர்கள் மற்றும் வயதானவர்களைக்கூட நம்பி பெண் பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாதுள்ளது. குறிப்பாக பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் தாய்மார் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அடிக்கடி முகம் கொடுக்க வேண்டி யுள்ளது.

இதனிடையே சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தில் சகோதரன் ஒருவன் தனது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதனால் 14 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். தங்கள் தந்தை சிறு வயதிலேயே இறந்து போனதன் காரணமாக சகோதரனே குடும்பத்தை பராமரி த்து வந்ததாகவும் அதனால் தனது சகோதரனின் செயல் குறித்து வெளிப்படுத்தாமல் மறைத்து வந்ததாகவும் குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்று வருகின்றபோதிலும் ஒரு சில சம்பவங்களே வெளிச்சத்திற்கு வருகின்றன. இது மாத்திரமன்றி பலதரப்பட்ட குற்றச் செயல்களும் நாட்டில் சர்வசாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வீட்டில் பிள்ளைகளுக்கிடையே இடம்பெற்ற சிறு சச்சரவை அடுத்து தனது சொந்த மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

எந்தவித ஈவிரக்கமின்றி மனிதனை மனிதனே வேட்டையாடுவது, துன்புறுத்துவது போன்ற ஈனச் செயல்கள் நாட்டில் சர்வசாதாரணமாக அதிகரித்துள்ளன. இதற்கான பிரதான காரணங்களை ஆராயுமிடத்து மக்கள் மத்தியில் உள்ள அறியாமை மற்றும் தனிமை, வறுமை, பாதுகாப்பின்மை என்பவற்றை பொதுவாக குறிப்பிடலாம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கணவனுக்கும், மனைவிக்குமிடையேயான பிரிவு காரணமாக குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமடைகின்றன. ஒரு சில குடும்பத் தலைவர்கள் மதுவுக்கு அடிமையாவதால் அந்த குடும்பம் பொருளாதார ரிதியாக பாரி ய நெருக்கடிக்கு முகம் கொடுப்பதுடன், குற்றச் செயல்களிலும் சர்வசாதாரணமாக ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

அதேபோன்று, வறுமை காரணமாக கணவனையும், பிள்ளைகளையும் விட்டு அநேகமான தாய்மார் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று வருடக்கணக்கில் அங்கு வாழ்கின்றனர். இந்நிலையே அவர்களின் பிள்ளைகள் உள ரிதியாகவும், உடல் ரிதியாகவும் பாதிப்படைய காரணமாக அமைகின்றது.

இவ்வாறான நிலைமைகள் கட்டுப்படுத்தப்படவும், தடுத்து நிறுத்தப்படவும் வேண்டுமானால் சமுகக் கட்டுக்கோப்புகள் தளர்வடையாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அத்தியாவசியமாகும். அதேவேளை இளைஞர், யுவதிகள் முழு நேர தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடவும் அவர்கள் மத்தியில் பொழுதுபோக்கான நிகழ்வுகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம். மாறாக, அவர்கள் எந்தவித வேலை வாய்ப்புமின்றி வீடுகளில் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களே அநாவசியமான சிந்தனைகளுக்கும், போக்குகளுக்கும் வழி வகுக்கின்றன.

அது மாத்திரமன்றி, வெளிநாடுகளுக்கு செல்லும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை சரியான வகையில் உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, கிராமப்புறங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. எனவே, இவ்வாறான செயல்களால் ஏற்படும் பாரதூரமான விபரிதங்கள் குறித்து அவர்களுக்கு அறிவூட்டுவதும் சரியான வழியை போதிப்பதும் மதகுருமார்களினதும், புத்திஜீவிகளினதும் கடப்பாடாகும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் மத வழிபாடு அருகி வருவதையும் காண முடிகின்றது. இதன் காரணமாகவே பலர் வாழ்க்கையில் தவறு செய்வதற்கும் தூண்டப்படுகின்றனர். எனவே, மக்கள் மத்தியில் சமய நம்பிக்கையை வலுப்படுத்தவும், சமய போதனைகளை எடுத்துக்கூறவும் உரிய நடவடிக்கைகள் அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல