செவ்வாய், 16 நவம்பர், 2010

ஜே.ஆரின் “கைவரிசை’

பதினெட்டு வருடங்களுக்குப் பின் ‘பொல்லாத’ மழை. கொழும்பு நகரின் பெரும் பகுதி வெள்ளக்காடாகியது. பல வீதிகள் நீரில் மூழ்கின. இந்த வீதிகளில் போக்குவரத்து அறவே இடம் பெறவில்லை.

பாராளுமன்றத்துக்குச் செல்லும் பாதை மாத்திரமன்றி பாராளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கியது. பாராளுமன்றக் கூட்டத்துக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவக் கவச வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை. ஏழு நிமிடங்கள் மாத்திரமே கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்றம் என்பது நாட்டின் உயிர்நாடி. நாட்டை நிர்வகிக்கும் சட்டங்கள் அனைத்தும் அங்கே தான் ஆக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் பாராளுமன்றம் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்.கடுமையான மழைக்கும் வெள்ளத்துக்கும் மத்தியிலும் பல அலுவலகங்கள் வழமை போலச் செயற்பட்டன. கொழும்பு கோட்டையில் உள்ள அலுவலகங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் செயற்பட்டன. ஆனால் பாராளுமன்றம் செயற்பட முடியவில்லை.

உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பழைய பாராளுமன்றக் கட்டடத்தில் இடவசதி போதாது. சட்டசபைக் காலத்தில் அன்றைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை மனதில் வைத்துக் கட்டப்பட்டதே பழைய பாராளுமன்றக் கட்டடம். சுதந்திரத்துக்குப் பின் காலத்துக்குக் காலம் அதிகரித்த எண்ணிக்கையை ஓரளவு உள்ளடக்கியது.

பாராளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் கட்டுவது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்திலேயே அது நிர்மாணிக்கப்பட்டது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதைச் செய்தாலும் அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஒரு ‘வருத்தம்’ ஜே. ஆர். ஜயவர்த்தனவுக்கு இருந்தது பலருக்குத் தெரியும். முதலில் அரசியலமைப்பை மாற்றினார். அதனால் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளை நாட்டு மக்கள் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் நிர்மாணிப்பதிலும் ஜே. ஆரின் இந்த ‘வருத்தம்’ செயற்பட்டது.

கொழும்பு கோட்டையில் புதிய பாராளுமன்றக் கட்டடம் அமைப்பதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் போட்ட திட்டம். அதை மாற்றுவது ஜே. ஆரின் பாணி. கொழும்பு கோட்டைக்குப் பதிலாக ஜயவர்த்தனபுர கோட்டேயில் பாராளுமன்றக் கட்டடத்தைக் கட்டத் தீர்மானித்தார். தீர்மானித்தபடி கட்டி முடித்தார்.பெரிதாக மழை பெய்தால் வெள்ளம் மூடுமா என்றெல்லாம் அவர் சிந்திக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே சிந்தனையாக இருந்தது.

கொழும்பு கோட்டையில் பாராளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டிருந்தால் அடைமழைக் காலத்திலும் தடை இல்லாமல் கூட்டத்தை நடத்தியிருக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல