எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன.
கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய பழங்குடிகள் அவுஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர், 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது.
பின்னர் மக்கள் தொகை பெருக, அவுஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய அவுஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும்.
1955 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக