இந்த வாழ்க்கையில் உங்களுக்கு பலவிதமான உறவுகள் இருக்கின்றன. அந்த உறவுகளின் எண்ணிக்கைக்கு நிகராக சிக்கல்களும் இருக்கத்தான் செய்யும். உங்கள் செயற்பாடுகள் அதிகமாகும் போது, உறவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
சிக்கல்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போகும். அந்தச் சிக்கல்களுக்கு பயந்து நாம் உறவுகளை அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியாது.அந்த அதிகரிக்கும் உறவுகளுக்கிடையிலான புரிதலை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.
ஒரு சிறிய அறையில் ஒரு கம்பியூட்டருடன் ஒரு நபருடன் நீங்கள் பணியாற்றும் போது உங்களுக்கு குறைந்த அளவு புரிதல் இருந்தால் போதும். ஆனால் பலரை நிர்வகிக்கும் நிலையில் நீங்கள் இருந்தால் அத்தனை பேரையும் நீங்கள் பரவலாக புந்து கொள்ளுதல் அவசியம். அவர்கள் அனைவரும் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தால் அங்கு நிர்வாகம் நடக்காது.
நீங்கள் அவர்களுடைய நிறைகுறைகளையும் திறமைகளையும் புரிந்து செயல்படுவது அவசியம். அப்போது தான் சூழ்நிலைகளை உங்களுக்கு ஏற்ற விதத்தில் இயக்கிக்கொள்ள முடியும். அனைவரும் என்னை புரிந்து கொள்ள வேண்டும் என காத்திருந்தால் அது வெறும் பகல் கனவு தான். என்றைக்கும் அப்படி நிகழப்போவதும் இல்லை.
அவர்களை புரிந்து கொள்ள எந்த அளவு முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவு அவர்களுடன் உங்கள் உறவு நெருக்கமாக இருக்கும். ஒருவரை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டு விட்டால், பிறகு அவர் மீது உங்களுக்கு நெருக்கம் பிரியம் ஏற்படுகிறது. அப்போது அந்த நெருக்கத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்கள். அதோ போல் அவர் உங்களை புரிந்து கொள்ளும் போது, அவரும் அந்த உறவின் நெருக்கத்தை அனுபவிக்கிறார்.
அடுத்தவர் உங்களை புரிந்து கொள்ளவே மறுப்பதாக நீங்கள் நினைக்கக்கூடாது. பிறர் உங்களை நன்றாக புரிந்து கொள்வதற்கான சூழலை நீங்கள் உருவாக்க முடியும். அடுத்தவர்களின் குறைபாடுகள், சாத்தியங்கள், தேவைகள், திறமைகள் போன்ற எதையும் நீங்கள் புரிந்து கொள்ளாமல், எப்போதும் அவர்களே உங்களை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால் மோதல் தான் ஏற்படும்.
துரதிர்ஷ்டவசமாக மிக நெருக்கமான இருவர் மத்தியில் ஏற்படும் மோதல்கள், எதிரிகளுக் கிடையே ஏற்படும் மோதல்களை விட அதிகமாக இருக்கும்.இல்லையா..?
இதற்குக் காரணம் இருவருடைய புரிதலும் வெவ்வேறாக இருக்கிறது. அவர்களது எல்லை க்கோட்டினை நீங்கள் கடந்தால் அவர்கள் வெறி பிடித்தவர்கள் போல் ஆகி விடுவார்கள்.
உங்கள் எல்லைக்கோட்டை அவர்கள் கடந்தால் உங்களுக்கு வெறி பிடித்தது போல் ஆகி விடுகிறது. அடுத்தவன் புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய குறைபாடுகளையும் திறமைகளையும் இயல்பாகவே ஏற்றுக் கொள்கிறீர்கள்.
அனைவரிடம் நல்ல அம்சங்களும் உண்டு தீய அம்சங்களும் உண்டு. இவை அனைத்தையும் உங்கள் புரிதலுக்குள் கொண்டு வந்து விட்டால், உங்கள் விருப்பம் போல் எந்த உறவையும் தேவையானபடி அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் உங்கள் புரிதலைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் பிறகு உறவு மிக தற்செயலானதாக ஒன்றாகவே அமையும். உங்களுடைய வாழ்வில் ஒவ்வொருவருடைய உறவும் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்பவர் நீங்களாக இருக்க வேண்டு மானால் உங்கள் புரிதலுக்குள் அனைத்தையும், அனைவரையும் கொண்டு வாருங்கள்.
மனிதர்களின் பைத்தியக்காரத்தனத்தையும் தாண்டி அவர்களை புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் உங்களுக்குள் ஏற்பட வேண்டும்.
உங்களைச் சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது சில சமயம் சில நிமிடங்களுக்கு அவர்கள் பைத்தியக் காரத்தனமாக நடந்து கொள்வார்கள்.
இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் நீங்கள் அவர்களை இழக்க நேரிடும். புரிந்து கொண் டால் அவர்களை கையாளும் முறை உங்களுக்குத் தெரிந்து விடும்.வாழ்க்கை எப்போதும் ஒரு நேர்க்கோடாக இருந்து விடுவதில்லை. அதை நடத்திச் செல்ல பல விஷயங்களையும் நீங்கள் செய்ய வேண்டியுள்ளது.
புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் இழந்து விட்டால் உங்கள் செயல் திறனையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்.எனவே உங் களைச் சுற்றியுள்ள மக்களை புரிந்து கொள்ளத் தேவையான முயற்சிகளை நீங்கள் எடுப்பதே சாலச்சிறந்தது. புரிதல் எனபது மிகச்சிறந்த மந்திரம் என்பதை மறந்து விட வேண்டாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக