வியாழன், 18 மார்ச், 2010

கலா பல்கலைக்கழகம் போகிறாள்

""ஒரு பொம்புளப்புள்ள பக்குவப்பட்டாச் சரி. புறகு கலியாணம்தான். அந்தப் புள்ளய ஒரு கடிதத்தையாவது நல்லா எழுத வாசிக்கிற அளவிலெண்டாலும் படிப்பிச்சுட வேணுமே! பிஞ்செலும்பெல்லாம் முத்தி, புள்ள குட்டிகளப் பெத்தெடுக்கிறதுக்கு நல்ல திடகாத்தரமான உடம்போடு இருக்க வேணுமே! ஒரு வீடு வாசலக் கட்டி, சாமான் சட்டுகளைத் தேடி, கழுத்திலயும் காதிலயும் ஒரு சின்னதாக எண்டாலும் போட வாங்கிக் சைக்! ஒரு அறிவுமில்லாத நம்ம கிராமத்துச் சனங்கள் எப்பதான் திருந்தப் போகுதுகளோ அந்தப் பெரிய சாமிக்குத் தான் வெளிச்சம்!''

""மாமி, இதெல்லாம் இப்பத்தையப் பழக்கமா? நம்மட பாட்டன் பூட்டன்ட காலத்திலி ருந்தே உண்டான பழக்கம்தானே! நானும் நீயும் கதச்சாப்ப மாத்திப் போடலாமா? இஞ்ச பாரன் மாமி, நம்மட முருகேசன்ட பொட்ட முந்தனாத்துத்தான் பக்குவப்பட்டவள்! நாளைக்கோ நாளையண்ணைக்கோ கல்யாணமாம்!''

""மெய்தானா இழவில! இதென்னத்துக்காகும் அந்தப் பொடிச்சிர உடம்பு? நானும் புத்தியறிஞ்சி அஞ்சாறு வருடம் கழிஞ்சப்பிறகு தான் வாழ்க்கப்பட்டனான் புள்ள!''

""ஏன் மாமி, நானெண்டாப்ப எப்படி? உங்களப் போலதானே நல்லா வயசேறின புறகு தானே மாமி, கழுத்த நீட்டினனான்!'' ""என்ர அப்பனும் அம்மையும் என்னப் படிக்கச் சொல்லி எவ்வளவோ தெண்டிச்சதுகள் தான்! ஆனா என்ட மரமண்டைக்குள்ள படிப்பு ஏறல்லப்புள்ள!

ரவுண் பள்ளியில படிச்சிருந்தா என்னெண்டாலும் ஒரு வேலையில சேர்ந்து உழைச்சிருக்கலாம். நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கல்ல. ஆனாலும் புள்ள நீ இருந்து பார்! என்ர புள்ள கலாவப் படிப்பிச்சி, ஒரு கர காணாம நான் சாக மாட்டன்! அதுக்குப் பிறகு தான் கலியாணம், புளியாணம் எண்டுற வேலயெல்லாம்'' இப்படி அம்மாவும் பக்கத்து வீட்டுப் பார்வதியும் பேசிக் கொண்டிருந்ததை நான் ஒருநாள் கேட்டன்.

இண்டைக்கு அம்மா, அப்பா, எவருமே உயிரோட இல்ல. சுனாமிப் பேரலை வந்து எல்லாரோடையும் சேத்து அவங்களையும் அள்ளிக் கொண்டு பொயித்து.

ஆனாலும் அந்நேரத்திலேயே அம்மாட மனசில இருந்த முற்போக்கான எண்ணங்கள் இண்டைக்கு என்னுடைய வாழ்க்கைய முன்னேத்தி வச்சிருக்கு எண்டு நினைக்கும்போது ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் கவலையாகவும் இருக்கிறது!''

கலா, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பதவியேற்கப் போன முதல் நாளே அவளுக்கு இந்தப் பழைய நினைவுகள்தான் நெஞ்சில் எழுந்தன.

சக விவுரையாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் ஓடிவந்து கலாவுக்குக் கை கொடுத்து, வாழ்த்துச் சொன்னார்கள்.

அது அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் ஏனோ தெரியவில்லை. அவளுக்கு அந்த நேரத்தில் அவருடைய பழைய நினைவுகள் தான் எண்ணத் தோன்றி சினிமாப் படம் போலவிருந்து கொண்டிருந்தன வாகரையிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மூன்றரைக் கிலோ மைல் தூரத்தில் அமைந்திருப்பதுதான் பால் சேனை என்ற கிராமம். இங்குள்ளவர்களின் பிரதான தொழில்களாக மீன் பிடித்தலும் வேட்டையாடுதலுமே இருந்தன. தேன் எடுப்பது காடுகளை வெட்டி சேனைப் பயிர் செய்வது போன்றவற்றையும் சீசனுக்குச் சீசன் செய்து வந்தார்கள்.

மிகவும் பின்தங்கிய கிராமமான இந்தக் கிராமத்தில் வாழ்ந்தவர்களும் பொருளாதாரத்தில் கல்வியில் பின்தங்கியே காணப்பட்டார்கள்.இவர்களில் கரைவலை வாடிவைத்துத் தொழில் பார்த்து வந்த பொன்னம்பலம் மனைவி பொன்னம்மாவும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய், தந்தையாக இருந்தார்கள்.

ஆண் பிள்ளையான குமரன்தான் மூத்தவன்.
கலா இரண்டாவது மகள்.

குமரன் தந்தையைப் போல கட்டுமஸ்தான உடலைக் கொண்ட கரிய நிறள்ளவன், இளையவர் கலா தாய் பொன்னம்மாவைப் போலவே அழகானவள்.

கடலில் கரைவலை போட்டு இழுத்து, மீன் பிடிக்கும் தொழிலை நடத்திவந்த பொன்னம் பலத்தின் வாடியில் இருபது தொழிலாளர்கள் வரை தொழில்புரிந்து வந்தார்கள். வலையில் படும் மீன்களை விற்று வரும் பணத்தில் அரைப் பங்கைப் பிரித்து தொழிலாளர்களுக்கு அன்றைக்கன்றே சமமாகப் கொடுப்பதில் பொன்னம்பலம் தவறுவதேயில்லை. இதை விட அவரவருக்கு வீட்டுக்குப் போகும் போது கறிக்கும் மீன் தாராளமாகக் கொடுத்து விடுவார்.
தொழிலாளர்கள் இல்லாமல் கடலில் விரித்த கரைவலையை தனியாகக் கரையேற்ற முடியாது என்பதனால்தான் இந்த ஏற்பாடெல்லாம். தொழில் சுமாராக நடந்தது.

அந்த இருபது தொழிலாளர்களின் குடும்பம் பொன்னம்பலத்தின் புண்ணியத்தில் தளப்பமில்லாமல் வாழ்ந்தது. பொன்னம்பலம் உழைத்த பணத்தில் வீட்டுச் செலவுகள் போக மகள் கலாவின் பெயரில் கொஞ்சம் கொஞ்சம் வங்கியில் இருப்பு வைத்து வந்தான்.

குமரனும் கலாவும் ஊர்ப் பள்ளியிலேயே படித்து வந்தார்கள். குமரனுக்கு பள்ளிப் படிப்பு பாவற்கா யாகக் கசந்தது. அதனால் எட்டாம் வகுப்போடேயே படிப்பை நிறுத்திக் கொண்டு, தந்தையின் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு உழைக்கத் தொடங்கினான். இதைத் தந்தையான பொன்னம்பலமோ, தாய் பொன்னம்மாவோ கண்டிக்கவில்லை.

""அவன் ஆம்பிளப் பிள்ளதானே! ஏதாவதொரு தொழிலைப் பழகிக் கொண்டால் பிற்காலத்துக்கு எப்படி யாவது பிழைத்துக் கொள்வான்.
என்னைப் போல எண்ட சீவியத் துக்குப் பிறகு ஒரு கரைவலை முதலாளியாக வந்தாலே போதும்!'' என்று பொன்னம்பலம் ஒருநாள் மனைவி பொன்னம்மாவிடம் சொன்னபோது அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்காமல் ஒத்துக் கொண் டாள்.

கலா, படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். வகுப்பிலும் ஒவ் வொரு முறையும் முதலாவது பிள்ளை யாகவே வந்தாள். அதனால் பொன்னம்பலமும் பொன்னம்மாவும் மகள் மீது பெரிய நபிக்கை வைத்திருந்தார்கள். நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்றை நினைக் கும் என்பார்களே! அப்படி ஒரு நிகழ்வு எதிர் பாராத விதமாக நடந்துவிட்டது.

சீறி வந்த சுனாமிப் பேரலை பால் சேனையையும் விட்டு வைக்காமல் கழுவிப் போனது.
இந்த பேரழிவில் தப்பிப் பிழைத்தவர்கள் மிகச் சிலர்தான். அவர்களில் குமரனும் கலாவும் பொன்னம்பலத்தின் அண்ணனான கதிர்காமத் தம்பியும் அடங்குவார்கள்.

கடற்கரைப் பகுதியில் வாழ்ந்து தப்பிப் பிழைத்தவர்களெல்லாம் மேட்டு நிலப் பரப்பில் காடாகக் கிடந்த பகுதிகளை வெட்டித் துப்பரவு செய்து குடியேறிக் கொண்டார்கள்.

குமரன் கலாவோடு அவர்களின் பெரியப்பாவான கதிர்காமத் தம்பியும் வேறு வழியின்றி இணைந்து கொண்டார்.

ஏற்கனவே பொன்னம்பலத்தார் உழைத்து மகள் கலாவின் பெயரில் வங்கியில் போட்டது போல பிற்காலத்தில் அவள் திருமணம் செய்யும்போது சீதனமாகக் கொடுப்பதற்காக மேட்டு நிலப் பகுதியில் வாங்கிப் போட்ட பெரிய காணி அத்திவாரம் போட்டது போல் அப்படியே கிடந்தது.
அதற்குள்ளே சின்னதாக ஒரு குடிலைப் போட்டுக் கொண்டு குமரன், கலா, கதிர்காமத் தம்பி வரும் வந்திருந்து கொண்டார்கள்.

மக்கள் சுனாமியை மறக்க டியாமல் மறந்த படி பழையபடி தங்கள் ஜீவியத்தைக் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

காலம் நீண்டு சென்றது.

மீண்டும் கலா பாடசாலைக்குப் போய், அவளுடைய படிப்பைத் தொடர்ந்தாள்.
அன்றாடம் சீவியத்திற்குத் தட்டுப்பாடு எல்லோரையும் போல அவர்கள் குடும்பத்திற்கும் உண்டானது. இந்தவேளையில் சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிதான வீடுகளைக் கட்டுவதில் பல நிறுவனங்கள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

மேசனுக்குக் கூலியாளாக குமரன் இணைந்து கொண்டபின் அவனுடைய உழைப்பின் காரணமாக அவர்கள் குடும்பம் தட்டுப்பாடில்லாமல் வாழத் தொடங்கியது.

வீட்டின் சமையல் வேலைகளை அவர்கள் பெரியப்பா கதிர்காமத் தம்பியர் கவனிக்க, கலா தன் கல்வியை உற்சாகமாகத் தொடர்ந்தாள். காலப் போக்கில் ஓ.எல். பரீட்சைக்கு முகம் கொடுத்து நல்ல பெறுபேற்றைக் கலா பெற்றுக் கொண்டாள். இதையறிந்து அந்தக் கிராமமே உயர்ந்து விட்டதாக நினைத்துப் பெருமிதம் அடைந்தது.

தங்கள் சீவியம் கிராமம்தான் தங்கள் உலகம் என்று வாழ்பவர்கள் அந்த மக்கள்.
வெளியூர்த் தொடர்புகளோ, பரீட்சயமோ இல்லாமலும் தெரியாமலும் இருப்பவர்கள்.

இதுவரை காலம் தங்கள் கிராமத்துப் பாட சாலையில் படித்து எவருமே ஓ.எல்.
சோதனையைத் தாண்டாமல் இருக்கும் போது கலா மாத்திரம் சித்தியடைந்தது சிலருக்குப் பொறாமையாக இருந்தாலும் பலருக்கு மகிழ்ச் சியாகவே இருந்தது.

இனி என்ன செய்வது?

குமரனும் பெரியப்பா கதிர்காமத் தம்பியரும் கலாவுடன் சேர்ந்து மந்திர ஆலோசனை செய்தார்கள். இறுதியில் கலா மட்டக்களப்புக்குச் சென்று ஏ எல் வகுப்பில் சேர்ந்து படிப்பதாக முடிவாயிற்று.

அங்கே போய்ப் படிப்பைத் தொடர்வதனால் அங்கேயே தங்கியிருந்தால்தான் காரியம் நிறைவேறும். பெரியப்பாவை ஊரிலேயே விட்டு விட்டு குமரனும் கலாவும் கிராமத்தை விட்டுப் பிரிந்து செல்ல மனது இடம் கொடுக்கவில்லை. இது இந்தளவில் இருக்க அவர்கள் சந்தோஷத்திற்காக கலா சித்தியடைந்த மகிழச்சியைச் சின்னதாகவாவது கொண்டாட வேண்டும் என்று பெரியப்பா விரும்பினார். அதற்குக் குமரனும் கலாவும் சம்மதம் தெரிவித் தார்கள். பெரியப்பா குடிப்பழக் கம் உள்ளவர். அவர் மனைவி, பிள்ளைகள் சுனாமியினால் அடித்துச் சென்றபிறகு கொஞ்சம் அதிகமா கவே குடித்து வந்தார். அடிக்கடி நெஞ்சுக்குள் நோகிறது என்று சொல்வார். பனடோலை வாங்கிப் போட்டு நிலைமையை அவராகவே சமாளித்துக் கொள்வார். அவருக்கு இந்த நோய்களைப் பற்றியோ வருத்தம் வாதைகள் ஏற்படுவதைப் பற்றியோ அவர் சிறிதும் யோசிக்க வில்லை.

குமரனின் செலவிலேயே அவருக்கொரு போத்தலை வாங்கிக் கொடுத்து ஒரு இரவு அவர்களுக் குள்ளேயே பாட்டியை வைத்து மகிழ்ச்சியடைந்தார்கள். அன்றிரவு நடுச் சாமம் போல பெரியப்பாவுக்கு நெஞ்சு வலி உண்டானது. குமரனை யும் கலாவையும் எழுப்பி விசயத்தைச் சொன்னார். இந்த நடுச்சாம வேளையில் அவரை எப்படி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வது?
போக்குவ ரத்து வசதிகள் அந்த நேரத்தில் இல்லை.
வாகரை ஆஸ்பத்திக்குக் கொண்டு போவதானாலும் விடிந்தால் தான் முடியும்.

பெரியப்பா துடியாகத் துடித்தார்.

அவரைப் பார்க்கவே அவர்களுக்குப் பரிதாபமாக இருந்தது.

கலா வெள்ளைப்பூடு, உலுவா அரிசியை அவளுக்குத் தெரிந்த மாதி அவித்து வந்து பெரியப் பாவுக்குக் கொடுத்தாள்.

அதைக் குடித்ததும் ஓரளவு சுகம் போல தெரிந்தது என்றாலும் பிறகும் குத்துவலி உண்டானது.

விடிந்ததும் முதல் வந்த பஸ்ஸிலேயே அவரை வாகரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். ஆனாலும் அவரைத் தப்ப வைக்க முடியவில்லை. வாகரை ஆஸ்பத்திரியிலேயே காலமாகிவிட்டார்.

தங்களுக்காக இருந்த ஒரேயொரு துணையும் பிரிந்து போனதை எண்ணிக் குமரனும் கலாவும் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். குமரனும் கலாவும் தனித்துப் போனதை நினைத்து நினைத்து விம்மி விம்மித் துடித்தார்கள். அகதிக்கு ஆண்டவன் துணை என்பது போல இவர்களது பரிதாப நிலையை அறிந்து கல்லூ அதிபரும் கலாவைப் படிப்பித்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் தங் களாலான உதவிகளைச் செய்ய முன்னுக்கு வந்தார்கள்.

அவர்கள் மூலமாக குமரனும் கலாவும் பெரியப்பாவின் முப்பத்தொன்று கழிந்ததும் மட்டக்களப்புக்குச் செல்ல ஏற்பாடாயிற்று.

உள்ளூர் நிறுவனமொன்றின் உதவியால் மட்டக்களப்பிலிருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் கடமையாற்றக் குமரனுக்கு ஒரு செக்கியூறிட்டிக் காட் வேலையும் கிடைத்தது. கலாவின் தந்தையும் அண்ணன் குமரனும் கலாவுக்காக வங்கியில் போட்டு வைத்திருந்த பணம் அவர்களுக்குத் தக்க சமையத்தில் கை கொடுத்தது. இதற்கும் மேலாக அந்தக் கிராமத்துப் பாடசாலைக்குப் பக்கத்தில் அவர்கள் வசித்து வந்த பெரியவளவை நிறுவனமொன்று விலைக்கு வாங்கி ஏதோ பில்டிங்கொன்று கட்டுவதற்குத் திட்டம் போட்டது.

கல்லூரி அதிபர் இது விடயமாகக் குமரனிடம் கலாவிடம் பேசிச் சம்மதம் வாங்கி, நிறுவனம் கொடுத்த நியாயமான பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.
ஒரு பின் தங்கிய கிராமத்துப் பிள்ளை படித்து உயர வேண்டுமானால் எப்டியான கஷ் டங்களையெல்லாம் பட வேண்டியிருக்கிறது என்பதை கலாவின் மூலமாக அறிந்து கொண்ட அதிபர் நிம்மதிப் பெருச்சை விட்டுக் கொண்டார்.

குமரனும் கலாவும் பால் சேனையில் படிப்பித்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியரின் உதவியால் ஒரு வசதியான ரூமை எடுத்துத் தங்கிக் கொண்டார்கள்.

காலம் வேகமாகக் கடந்து சென்றது.

கலா தன்னுடைய கடந்த கால வாழ்வையும் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்த்து ஊக்கமாகப் படித்து ஏ.எல். பட்சையிலும் திறமையாகச் சித்தி பெற்று பல்கலைக்கலைக்கழகம் போகவும் தெரிவானாள்.

தான் படித்து முன்னேறி நல்ல உத்தியோகம் பார்த்து அம்மாவின் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்ற வைராக்கியமான உறுதி அவளின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துபோய் இருந்ததனால் இன்று அவள் பல்கலைக்கழகத்திலும் தனது திறமையைக் காட்டி கிளாஸ் அடித்து ஒரு விவுரையாளராகவும் வந்து விட்டாள்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபடி விரிவுரை நடக்கும் மண்டபத்தில் அமர்ந்திருந்த போது அவளையுமறியாமல் பனித்துளி போல அவள் விழிகளில் கண்ணீர் பூத்தது. அன்புத் தாயின் நினைவு அவளுக்கு வந்திருக்க வேண்டும்.

எவரும் அதைப் பார்த்துக் கொள்ளாமல் கைக் குட்டையால் மெதுவாக ஒற்றிவிட்டு விரிவுரையாற்ற எழுந்து நின்றாள் கலா.

செ.குணரத்தினம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல