வியாழன், 18 மார்ச், 2010

பணத்தைப் பற்றி எழுதிய கார்ல் மாக்ஸிற்கு சம்பாதிக்க தெரியவில்லை

மூலதனத்தின் அடிமைகளாகக் கிடக்கும் உழைப்பாளி வர்க்கத்துக்கு விடுதலை உண்டா என்று எழுந்த கேள்விக்கு உண்டு என்ற பதிலை உறுதியாகக் கிளப்பியவர் கார்ல்மாக்ஸ். மேதை என்று போற்றுவார்க்கு மத்தியிலும் பேதை என்று தூற்றுவார்க்கு மத்தியிலும் இலட்சிய வேட்கை மிகுந்தவராக கார்ல் மாக்ஸ் எழுந்து நிற்கின்றார். மனிதனின் தன்மை, சமூகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு, சமூகத்தை மாற்றியமைப்பதில் மனிதனின் முக்கியத்துவம் ஆகிய விடயங்களில் கார்ல் மாக்ஸின் கவனம் அதிகமாகவே இருந்தது.

1818ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி கார்ல் மாக்ஸ் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு யூத வக்கீலாவார். குடும்பம் செல்வச் செழிப்போடு இருந்தபோதுதான் கார்ல் மாக்ஸ் பிறந்தார். கார்ல் மாக்ஸினுடைய குடும்பம் புரட்சிகரமான குடும்பமாக இல்லாத போதும் வருங்கால புரட்சிகளுக்கு எல்லாம் வித்திட்டவராக கார்ல் மாக்ஸ் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மார்க்ஸின் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர் என்ற போதும் இவர்களுள் நான்கு பேர் எலும்புருக்கி நோயால் மடிந்தனர். பள்ளியில் படிக்கின்ற காலங்களில் முரடனாக இருந்த கார்ல் மாக்ஸினைக் கண்டு மற்ற மாணவர்களெல்லோரும் பயம் கொள்ளலாயினர்.

தத்துவப் பற்று மிக்கவராக காணப்பட்ட கால்மார்க்ஸ் 1841ஆம் ஆண்டு பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியேறினார். 1843இல் கார்ல் மார்க்ஸ் ஜென்னி என்ற பெண்ணை திருமணம் முடித்தார். ஜென்னி மார்க்ஸை விட நான்கு ஆண்டுகள் த்தவராவார். வள் ளுவனுக்கேற்ற வாசுகி போல் ஜென்னி கார்ல் மாக்ஸுக்கு ஏற்ற மனைவியாக இருந்து வந்துள்ளாள் என்பதனை வரலாறுகள் எடுத்துக் கூறுகின்றன.

வறுமையை பொறுமையோடு சகித்துக் கொண்ட விதமும் நெஞ்சைப் பிழியும் துயரங்களை தாங்கிக் கொண்ட மேன்மையும் மார்க்ஸ் போகும் இடமெல்லாம் போய் அரும் துணை வகித்த விதமும் ஜென்னியின் பொறுமைக்கும் பெருமைக்கும் சான்றாக விளங்குவதாக புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர். பின்பு ரைன்லாந்து கெஜட் என்ற பத்திரிகையின் ஆசிரியராக கார்ல் மார்க்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இப் பத்திரிகையின் ஊடாக இவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் "அரசாங்கத்துக்காகவே மக்கள்' என்ற நிலையில் இருந்து "மக்களுக்காகவே அரசாங்கம்' என்ற கருத்தியலை மக்களிடையே ஓங்கச் செய்தது.
எனினும் அரசாங்கத்தினால் பலமுறை தணிக்கை செய்யப்பட்ட இப் பத்திரிகை 1833ஆம் ஆண்டுடன் மூடப்பட்டது.

சுதந்திரத்துக்காக என்று சொல்லிக் கொண்டு பல்லை இளிப்பது, கெஞ்சிக் கூத்தாடுவது, மிருக பலத்தைக் கையாள்வது, குதர்க்கம் செய்வது, கீழ்த்தரமாகப் பணிந்து போவது இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வது மகா கேவலம். அரசாங்கம் என்னை ஆசிரியர் பொறுப்பினின்றும் விடுதலை செய்து விட்டது. இனி நான் ஜெர்மனியிலே இருக்க வேண்டுமானால் எனக்கு நானே பொய்யனாக வேண்டும். என்னை நானே ஏமாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு நான் தயாரில்லை எனக் கூறிய மார்க்ஸ தனது மனைவி ஜென்னியுடன் பாரிஸில் சென்று குடியேறி னார்.

மனித நடத்தை மூலம் உலகை மாற்றுதல் வேண்டும் என்னும் கருத்தை ஏற்றுக் கொண்ட கார்ல் மாக்ஸ் தனது கருத்துக்களின் ஊடாக உலகை பல்வேறு வழிகளிலும் மாற்றியமைத்தார். அரிஸ்டோட்டலினால் விவேகமுள்ள விலங்கு என்று குறிப்பிடப்பட்ட மனிதனை கார்ல் மார்க்ஸ் "உழைக்கும் விலங்கு' என்று குறிப்பிடுகின்றார். மனிதனின் தொழிற்படு தன்மையின் விசேடமான தன்மை உற்பத்தித் திறனாகும். இதனை உணர்ந்து உற்பத்தி கருமத் தொடர் சம்பந்தமான முக்கியமான அடிப்படை பகுப்பாய்வை மேற்கொண்டவராக கார்ல் மாக்ஸ் விளங்குகின்றார். மனிதனை அம் மனிதனுடனும் அயற் சுற்றாடலுடனும் ஒன்றி ணைப்பதும் ஐக்கியப்படுத்துவதும் கால் மார்க்ஸின் கருத்தாகும்.

கல்வி நிலையங்கள் அனைத்தும் இலவசமாக பொது மக்கள் அனைவருக்கும் திறக்கப்படல் வேண்டும். தேவாலயத்தினதும் அரசினதும் தலையீடுகளில் இருந்து அவை விடுபடுதல் வேண்டும். இதன் மூலம் கல்விக்கான நுழைவாயில்கள் அனைத்தும் திறக்கப்படுவதோடு மட்டுமல்லாது அறிவின் வலிமை அதன் பால் பெருமளவில் பங்களிப்பு செய்யவும் வழி பிறக்கின்றது என்ற கருத்தினை 1870இல் பரிஸ் கொமியூன் பொதுமக்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அனுமதித்து எழுதிய ஆவணத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் ஏஞ்செல்ஸ் பல்வேறு வழிகளிலும் கார்ல் மாக்ஸிற்கு உதவியுள்ளார். தத்துவத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி கார்ல் மாக்ஸ் ஏஞ்செல்ஸ் இருவரது வாழ்க்கையும் ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்து கொண்டுதான் வருகின்றது. மார்க்ஸ் ஏஞ்செல்ஸ் இருவரினதும் சித்தாந்தங்கள் உலகம் முழுவதிலும் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பாட்டாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கு ஒரு புரட்சிகரமான வர்க்கமாக அதன் ஆற்றல் அதிகரிக்கும். சோசலிசம் கிட்ட நெருங்கி வரும் என்பது மார்க்ஸ் ஏஞ்செல்ஸ் இருவரினதும் ஏகோபித்த கருத்தாக இருந்தது.

மார்க்ஸ் வறுமைப்பட்ட காலகட்டத்தில் அவரின் சிறிய குழந்தை ஒன்று மார்புச் சளியால் இறந்து போனது. அக்குழந்தையை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கக் கூட இவரின் கையில் காசு இருக்கவில்லை. இந்த கொடுமையினை ஜென்னி "அந்த குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை. இறந்தபோது சவப்பெட்டி இல்லை' என்கிறாள். மார்க்ஸின் போதனைகளும் தத்துவங்களும் மாக்ஸீசம் என்று அழைக்கப்படுகின்றன. "அம்மாவுக்கு என் மீது ரொம்ப வருத்தம். பணத்தைப் பற்றி எனக்கு எழுதத் தெரிந்ததே தவிர சம்பாதிக்க தெரியவில்லையே என்று அவள் அடிக்கடி குறைபட்டுக் கொள்வது வழக்கம்' என்று கார்ல்மாக்ஸ் தெரிவிக்கின்றார்.

1883 மார்ச் 14ஆம் திகதி கார்ல் மாக்ஸ் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றார் என்ற போதும் அவரின் தத்துவங்களும் போதனைகளும் உலகம் உள்ளவரை நின்று நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

துரைசாமி நடராஜா
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல