ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-10: அங்கிள் சாம் எதையும் ‘சும்மா’ செய்வதில்லை

தோகாவில் உள்ள அல்-ஜசீரா தொலைக்காட்சியின் நிர்வாகிகளிடம் வாய்ஸ் ஆப் அமெரிக்கா அதிகாரிகள் “எங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவீர்களா” என கேட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத அல்-ஜசீரா...

அத்தியாயம் 10

அல்-ஜசீராவின் அதிரடியான காட்சி ஒளிபரப்புகள், அரபு நாடுகளின் அரசாங்கங்களையும் ஆட்டம் காணச் செய்தது. அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பல அரபு நாடுகளின் அரசாங்கங்கள் புதிய கொள்கைகளை வகுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதற்காக மற்றொரு அரபு மாநாட்டைக் கூட்ட வேண்டிய நிலையும் உருவானது.



மோதல் காட்சிகளை தொடர்ந்து சிறப்பான முறையில் ஒளிபரப்பியதாலும், நடுநிலையுடன் காட்டியதாலும் அல்-ஜசீராவின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. துபாயில் அரேபிய மீடியா விருது வழங்கும் விழா நடந்தது. இதில் அல்-ஜசீராவின் வாலித் அல்-ஒமாரிக்கு அந்த ஆண்டின் தலைசிறந்த ‘அரேபிய விஷுவல் மீடியா பர்சனல்’ என்ற விருது கிடைத்தது.

வன்முறைச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் அது தொடர்பாக அல்-ஜசீரா ஒளிபரப்பிய படக்காட்சிகளை சர்வதேச மீடியாக்கள் பலவும் வாங்கி, அவற்றை தங்களது டி.வி. சேனல்களில் ஒளிபரப்பத் தொடங்கின. மேற்கத்தியச் செய்தி நிறுவனங்களுக்குக் கொடுத்த வந்த மரியாதையை அல்-ஜசீராவுக்கும் கொடுக்கத் தொடங்கினர்.

இது மேற்கத்திய நாடுகளிலும் அல்-ஜசீராவுக்கு ஆதரவான அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியது.

இந்தக் கட்டத்தில், அமெரிக்க அரசாங்க அதிகாரிகளும் அல்-ஜசீராவுக்கு ‘சுற்றி வளைத்து’ அங்கீகாரம் அளித்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கிரெக் சுலிவன் கூறும்போது, “அரபு உலகில் அதிகப் பார்வையாளர்களை கொண்டது அல்-ஜசீரா டி.வி. சேனல். அரபு உலகின் குரலாகவும் இந்த டி.வி. சேனலை நாம் கருதுகிறோம். இது அரபு மக்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் மீடியா” என்றார்.

ஆனால், அங்கிள் சாம் எதையும் ‘சும்மா’ செய்வதில்லை. அல்-ஜசீராவுக்கு ஆதரவளிப்பது போன்ற போர்வையில், அமெரிக்க அரசாங்கம் தனது ஆதரவு டி.வி. சேனல் ஒளிபரப்பை அரபு நாடுகளிலும் ஒளிபரப்ப முயன்றது.

அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ டி.வி. சேனல், அரபு நாடுகளில் தனது ஒளிபரப்பைத் துவக்க ஆர்வம் காட்டியது.

தோகாவில் உள்ள அல்-ஜசீரா தொலைக்காட்சியின் நிர்வாகிகளிடம் வாய்ஸ் ஆப் அமெரிக்கா அதிகாரிகள் “எங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவீர்களா” என கேட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத அல்-ஜசீரா நிர்வாகத்தினர் கூடி ஆலோசித்தனர்.

வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் நிகழ்ச்சிகளை தங்களது சேனலில் ஒளிபரப்ப அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தனர். “வாய்ஸ் ஆப் அமெரிக்காவுக்கு அனுமதி கிடையாது” என அல்ஜசீரா நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது. அமெரிக்கா முறைக்க தொடங்கியது.

அதற்கு அமெரிக்கா என்ன செய்தது? தமாஷான ஒரு காரியம் செய்தது. தாமும் பாலஸ்தீன செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது.

இதையடுத்து தலையில் கை வைத்தது இஸ்ரேல். அமெரிக்க மீடியாக்களுக்கும், அல்-ஜசீராவுக்கும் இடையே நடக்கும் போட்டியில், பலஸ்தீன பிரச்சினை தங்களுக்கு எதிராக திருப்பப்படுவதை இஸ்ரேல் உணர்ந்து கொண்டது. இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என தெரியாமல் இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகள் திகைத்தனர்.

மேற்குக் கரை மோதல் சம்பவங்களை அல்-ஜசீரா தங்களுக்கு எதிராகத் திரித்து வெளியிடுவதாக மேற்கத்திய நிருபர்களை சந்திக்கும் போதெல்லாம் இஸ்ரேலிய அதிகாரிகள் குறைபட்டுக் கொண்டனர்.

2001-ம் ஆண்டு மே மாதம் வாஷிங்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பெரஸ், “பலஸ்தீன மோதல்கள் குறித்து அல்-ஜசீராவில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் இஸ்ரேலுக்கு பிரச்னைகளைத் தோற்றுவிக்கும் வகையில் உள்ளதாக நான் கருதுகிறேன். இதில் படங்களைத்தான் காட்டுகின்றனர். உண்மையான நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில்லை” என்று குற்றம் சாட்டினார்.

தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகள், பலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக உள்ளன என்பதை அல்-ஜசீரா எப்போதும் மறுத்ததில்லை.
அல்-ஜசீரா தரப்பில், “பலஸ்தீனத்தில் நடைபெறும் மோதல்களுக்கு வெளிப்படையாக எந்த ஆதரவும் அளிப்பதில்லை. நடக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது இயற்கையாகவே இது போன்று அமைந்து விடுகிறது.

ஒரு கண்ணில் வெண்ணை, மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற கண்ணோட்டத்துடன் இஸ்ரேல் பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் மற்ற அரபு தொலைக்காட்சிகளையும், அல்-ஜசீராவையும் பார்க்கின்றனர்” என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதில் தமாஷ் என்னவென்றால், அல்-ஜசீராவின் ஒளிபரப்புக் குறித்து குறை கூறிய ஷிமோன் பெரசின் வாஷிங்டன் பேச்சையும், அல்-ஜசீரா ஒரு வரி கூட வெட்டாமல் ஒளிபரப்பியது.

அதே நேரத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் அல் ஜசீரா, “சில விடயங்களை மறைத்தோம். ஆனால், எங்களது செய்திகள் ஒருதலைப்பட்சமானது அல்ல” என்று ஒரு தடவை கூறியிருக்கிறது.

அது எப்போது?

தொடரும்..

விறுவிறுப்பு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல