அத்தியாயம் 18
செப்.11, அமெரிக்காவில் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஒசாமா பின்லேடன்தான் என அமெரிக்க நிர்வாகம் உடனேயே கூறியது. தீவிரவாதத்தை வேரறுக்கும் புதிய சட்டங்கள் உடனடியாக அமலுக்கு வந்தன.
அப்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி, “விமானக் கடத்தல்காரர்கள் 19 பேருக்கும் ஒசாமா பின் லேடனின் அல்-கய்தா அமைப்புடன் தொடர்பு உள்ளது என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் களமாக, ஆப்கனிஸ்தான் அமையலாம்” என்றார்.
இதற்கு ஆப்கனிஸ்தான் ஆட்சியாளர்களான தலிபான் அமைப்பினர் பதில் கொடுத்தது, அல்-ஜசீரா பேட்டி வாயிலாகத்தான். “அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒசாமா பின்லேடனுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் உறுதியான ஆதாரங்களை அமெரிக்க அரசு காண்பிக்காதவரை பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம்” என்று கூறினர்.
ஒசாமா பின் லேடனும் அல்-ஜசீராவுக்காக பிரத்தியேக பேட்டி அளித்தார்.
அவர் அல்-ஜசீராவுக்கு பேட்டியளித்தது அது முதல் முறையல்ல. 1998-ம் ஆண்டு பாக்தாத்துக்கு அமெரிக்காக மிரட்டல் விடுத்தது. அப்போது ஒசாமா பின்லேடனை அல்-ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண்டது. சுமார் 1 மணி நேரம் நீண்ட அந்த பேட்டியில், தனது குழந்தைப் பருவம் குறித்து விவரித்த பின்லேடன், “அமெரிக்கர்களை குறி வைத்து புனிதப் போரில் ஈடுபடுவது முஸ்லிம்களின் கடமை” என்று சீறினார்.
பின் லேடனின் அந்த பேட்டியைத் தொடர்ந்து, தோகாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், கத்தார் அரசிடம் தமது கண்டனத்தைத் தெரிவித்தனர். “அல்-ஜசீரா விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை. அது சுதந்திரமான மீடியா” என்று கையை விரித்துவிட்டது கத்தார் அரசு.
அதன் பின், 2000-ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ஏமன் நாட்டில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஒசாமா பின்லேடனின் மற்றொரு அதிரடி பேட்டியை அல்-ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அந்தப் பேட்டியில், “அமெரிக்கா மீதான மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம்” என்று ஒசாமா பின்லேடன் தெரிவித்தார்.
அந்த அல்-ஜசீரா பேட்டியின்போது, மெலிந்த தோற்றத்துடன் காட்சியளித்த ஒசாமா பின்லேடனின் அருகில் அவரது தளபதிகளான அய்மான் அல் ஜவாகிரி, ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மானின் மகனான அசாத் அல்லா ரஹ்மான் ஆகியோர் இருந்தனர். உலக வர்த்தக மையத்தில் நடந்த முதல் குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர்தான் பின்லேடனின் அருகில் இருந்த அசால் அல்லா ரஹ்மான்.
அமெரிக்காவுக்கு எதிரான குற்றங்களை ஒசாமா பின்லேடன் முதலில் பட்டியலிட்டார்.
அந்தப் பேட்டியின்போது, அருகில் இருந்த அல்-ஜவாகிரியும் சில வார்த்தைகளை பேசினார். “சவுதி அரேபியா, ஏமன், எகிப்து நாடுகளில் தங்களது படைகளைக் குவித்துள்ளவர்கள் (அமெரிக்கா) குறித்து இதுவரைப் பேசியது போதுமானது. இனி நடவடிக்கைதான்” என்றார்.
அசால் அல்லா ரஹ்மான், “இது முன்னேறுவதற்கான நேரம். ரத்தம் சிந்த வைப்பதற்கான சமயம்” என்று ஆவேசமாகக் கூற அருகில் இருந்தவர்ககள் கைதட்டிப் பாராட்டினர்.
ஒசாமா பின்லேடனின் இந்த பேட்டி, ஆப்கனிஸ்தானில் பின்லேடனின் மறைவிடங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுக்கு போதுமானதாக அமைந்தது.
2001-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தெற்கு ஆப்கனிஸ்தான், காந்தஹார் நகரில் பின்லேடனின் மகன் மொகமெட்டுக்கும், பின்லேடனின் நண்பர் மகளுக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரே பத்திரிகையாளர் அல்-ஜசீரா ஆப்கான் நிருபர் அகமது ஜாய்தான் மட்டுமே.
திருமணத்தின் போது காந்தஹாரில் கூடாரம் ஒன்றில் தரை விரிப்பில் பின்லேடன் அமர்ந்திருப்பது, திருமணத்துக்கு வந்த விருந்தினர்களிடம் சிரித்த முகத்துடன் கை குலுக்குவது போன்ற காட்சிகள் அல்-ஜசீராவில் மட்டும் ஒளிபரப்பப்பட்டது.
அந்த நேரத்தில் ஒசாமா பின் லேடனின் தலைக்கு அமெரிக்காக 5 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது.
நூற்றுக்கணக்கான அல்-காய்தா மற்றும் தலிபான் போராளிகள் பாதுகாப்பு கொடுக்க நடந்த இந்தத் திருமண விழாவில் பின் லேடனின் தாய், இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி கலந்து கொண்டிருந்தனர். ஹஜ் புனிதப் பயணிகளை ஏற்றி வருவதற்காக சௌதி அரேபியா சென்ற ஆப்கனிஸ்தான் விமானத்தில், பின்லேடனின் தாய் மற்றும் உறவினர்கள் ஆப்கனுக்கு வந்திருந்தனர்.
அந்த திருமணத்தில் பேரிய பின்லேடன், பலஸ்தீன போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களைப் புகழ்ந்து கவிதை வாசித்தார்.
இதன்பின், ஆப்கனிஸ்தானில் பாமியான் மலையில் இருந்த புத்தர் சிலையை தாலிபான் படையினர் நொறுக்கினர். தாலிபான் ஆட்சியின் வீழ்ச்சிக்கான முதல்படியாக இது அமைந்தது.
புத்தர் சிலைகளை உடைக்கும் உத்தரவு, ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியாளர் முல்லா முகமது ஓமரால் நேரடியாக வழங்கப்பட்டிருந்தது.
இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் அது. சிலை வழிபாடு இருக்கக் கூடாது என்பதற்காக, சிலைகளின் பழமையைக் கருத்தில் கொள்ளாமல், பாமியான் மலையில் இருந்த சிலைகள் உள்பட ஆப்கனிஸ்தானில் இருந்த அனைத்துச் சிலைகளையும் உடைக்க முல்லா ஓமர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ஏற்று தலிபான்கள், பாமியான் குகையில் இருந்த இரண்டு பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை வெடிகுண்டுகளை வைத்துத் தகர்த்தனர்.
தலிபான்கள் உடைந்த இந்தச் சிலைகள் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
இந்தக் காட்சிகள் அல்-ஜசீரா தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பானது. சிலையை உடைத்த தலிபான்களே இந்த காட்சிகளையும் படம் பிடித்து அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்தனர். அல்-ஜசீராவில் ஒளிபரப்பான இந்த காட்சிகளால், சர்வதேச அளவில் தலிபான்களுக்கு கண்டனங்கள் பெருகின. அந்த கண்டனங்களையும் அல்-ஜசீரா ஒளிபரப்ப தவறவில்லை.
சிலைகளை உடைக்கும் முன்னர் அதனைத் தடுக்க அல்-ஜசீராவின் ஷேக் அல் குராதாவி உள்பட பலரும் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை.
“இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளின்படி, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் தங்களது கடவுளைத் தொழ எந்தத் தடையும் இல்லை. இதை முற்காலத்தில் முஸ்லிம் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்” என்றெல்லாம் அல்-ஜசீராவின் ஷேக் அல் குராதாவி வாதிட்டதை தலிபான்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. புத்தர் சிலைகளை உடைத்து நொறுக்கிய பின்னரே ஓய்ந்தனர்.
செப்.11 தாக்குதல்கள் நடந்து 9 நாட்களுக்குப் பின்னர், 2001-ம் ஆண்டு செப்டெம்பர் 20-ம் தேதி, அல்-ஜசீரா, ஒசாமா பின்லேடனின் மற்றொரு பேட்டியை ஒளிபரப்பியது.
இந்தப் பேட்டி உண்மையில், புதிதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டதல்ல. முன்பே எடுக்கப்பட்ட அந்த பேட்டி, செப். 11 தாக்குதலின்பின் ஒளிபரப்பு செய்யப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் ஒரு காரணமும் இருந்தது. (தொடரும்..)
விறுவிறுப்பு இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக