நாடாளுமன்றத் தேர்தலின்போது சீருடை அணியா ஆண், பெண் பொலீசார் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்காக பணியாற்றிய எகிப்திய கேமராமேனின் கை உடைந்தது...
அத்தியாயம் 06
லிபியா ஜனாதிபதி கடாபியின் பேச்சை ‘லைவ்’வாக ஒளிபரப்பியதால், அரபு நாடுகளுக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவதே, அல்-ஜசீராதான் என்று அரபு நாடுகள் குற்றம்சாட்டின.
இதனை அல்-ஜசீரா மறுத்த போதிலும், யாரும் அதை அரபு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அல்-ஜசீரா எதிர்ப்பில் பிரதானமாக நின்றது எகிப்திய அரசு.
லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்த எகிப்திய அரசின் ஆத்திரம்தான், அல்-ஜசீரா தொலைக்காட்சியின் மீது திரும்பியிருந்தது. அல்-ஜசீராவை பழி வாங்க எகிப்தியர்கள் முடிவு செய்தனர்.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் போக்கை அல்-ஜசீரா கொண்டிருப்பதாக எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டத் தொடங்கினர். அல்-ஜசீரா மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளைப் பொதுமக்கள் மத்தியில் அள்ளி வீசினர்.
“அரேபியர்களை, குறிப்பாக எகிப்தை போரில் சிக்கவைக்க அல்-ஜசீரா தூண்டுகிறது” என்று எகிப்தின் அரசாங்கத் தொலைக்காட்சியில் தலைமை வெளியுறவு அதிகாரி தெரிவித்தார். ஆனால், எகிப்து அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவருடைய பேட்டியே குழப்பமாக இருந்தது.
எகிப்து தகவல் துறை அமைச்சரும் அரசு டி.வி.யில் பேட்டி அளித்தார். ஒருபுறம் எல்லாவற்றுக்கும் காரணம் அல்-ஜசீராதான் என்று முதலில் கூறிய அவர், அதற்கு சில நிமிடங்களின் பின் அதே பேட்டியில், “எகிப்தியர் என்ற அடிப்படையில் நாங்கள் போரில் ஈடுபடுவோம் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் இஸ்ரேலியர்கள் தங்களது சிகப்பு எல்லையை தாண்டி விட்டனர். இதனால் அரேபியர்கள் கோபத்தில் உள்ளனர். நானும் கோபமடைந்துள்ளேன்” என்றார்.
இவர்களது குழப்ப வாதங்களுக்கு அல்-ஜசீரா தொலைக்காட்சியும் பதிலடி கொடுத்தது. “நாங்கள் மக்களைத் தூண்டி விடவில்லை. தங்களுக்கு எந்தத் தலைமை வேண்டும் என்று எகிப்திய மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். காரணம், இங்கு நடப்பதெல்லாம் மிக மோசமானவை” என்று அல்-ஜசீரா தொலைக்காட்சியின் வாலித் அல்-ஒமாரி தெரிவித்தார்.
(அன்று அல்-ஜசீரா கணித்தது, இன்று சரியாகியுள்ளது. எகிப்திய அரசுத் தலைமைக்கு எதிராக மக்கள் புரட்சி செய்து, தலைமையையே மாற்றினர்)
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க லிபிய ஜனாதிபதி கடாபி, “பலஸ்தீனத்துக்கு ஆதரவாக சண்டையிட எந்த அரபு நாடும் தாமாக முன்வரவில்லை” என அரபு நாடுகளின் மாநாட்டுக்குப் பின்னர் தகவலை கசியவிட்டார். “போரால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனிய மக்களின் உணவு மற்றும் மருந்துக்காக ஏராளமாக நிதி வேண்டும். இதற்கு சுமார் 693 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
அல்-ஜசீரா வெளியிட்ட செய்திகளின் தாக்கத்தால், மக்கள் மூலம் ஏற்பட்ட நெருக்கடிதான், இவ்வளவு பெரிய தொகையை திரட்ட வேண்டும் என்று கடாபி கூற முக்கியக் காரணமாய் இருந்தது.
கடாபியின் பேச்சை வேறு விதமாக எதிர்கொண்டார் முபாரக்.
அரபு நாடுகள் பற்றி பலஸ்தீன மக்களுக்கு எழுந்த சந்தேகத்தை, நிதியுதவி கொடுத்து போக்கியிருக்கலாம். அதை செய்யவில்லை. மாறாக ஹோசினி முபாரக், இஸ்ரேலுக்கான தனது தூதரைத் திரும்ப பெற்றுக் கொண்டார்.
“இஸ்ரேலிய போர் வீரர்களை எதிர்த்து பலஸ்தீனிய இளைஞர்கள் போரிடுவதைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவை முறித்துக் கொண்டேன்” என்று கூறினார்.
இதற்கு யார் என்ன செய்ய முடியும்?
அரபு நாடுகளின் மாநாடு முடிந்த பின்னர், அக்டோபர் மாதம் முழுவதும் ‘அல்-அக்சா இன்திபதா’ என்ற ரத்தம் தோய்ந்த காட்சிகளை அல்-ஜசீரா ஓய்வின்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பியது. அல்-ஜசீராவின் விவாத அரங்கங்களில், பலஸ்தீனியர்களை காட்டிக் கொடுப்போர் பற்றி வெளிச்சம் போட்டது.
பொதுமக்கள் கலந்து கொள்ளும் டாக்-ஷோக்களில், பலஸ்தீன இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, இஸ்ரேல் மீதான எகிப்தின் அணுகுமுறையை தாக்கிப் பேசினர்.
லெபனான் பாடகர் ஜூலியா போடஸின் இசை வீடியோ ‘மில்லியன்கள் எங்கே?’ (Where are the millions) அப்போது வெளியானது. அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதன் மூலம் அல்-ஜசீராவின் இமேஜ் உயர்ந்தது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்தன.
எகிப்திய கொடிகளும், ஹோசினி முபாரக்கின் உருவப் படமும் போராட்டக்காரர்களின் எரிப்பு பட்டியலில் இடம் பெற்றன. அந்த நேரத்தில், புரட்சியை நோக்கி எகிப்து நாடு அடியெடுத்து வைப்பது போன்ற தோற்றம் முதல் தடவையாக உருவானது.
‘அல்-அக்சா இன்திபதா’ ஒளிபரப்பப்பட்ட அக்டோபர் மாதம் முழுவதும் எகிப்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் வீதிகளில் போராட்டங்கள் நடந்தன. பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாது நடுநிலை, துவக்கப்பள்ளிகளில் கூட ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
“இராணுவம் எங்கே?” என்ற பிரபலமான கோஷம் எழுந்தது அப்போதுதான். செயலற்று நிலையில் இருந்த எகிப்திய அரசை விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “எகிப்திய இராணுவம் எங்கே?” என கோஷமிட்டனர். ஹிஸ்புல்லா அமைப்பைப் புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.
இஸ்ரேலிய தயாரிப்பு பொருட்களையும், மெக்டொனால்ட்ஸ், கோகோ கோலா உள்பட பிரபலமான அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளையும் எகிப்தியர்கள் புறக்கணிக்கத் துவங்கினர். இதனால், அந்த நிறுவனங்களின் வர்த்தகத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு சரிவு ஏற்பட்டது.
போராட்டங்களுக்கு எந்த ஒரு சமூக அமைப்போ, அரசியல் கட்சிகளோ பொறுப்பேற்கவில்லை. ‘அமைதிக்கான தலைமுறை’ என்று தங்களை அழைத்துக் கொண்ட இளைஞர்கள் ‘இஸ்ரேலுடன் எகிப்து போர் புரிந்தால், அதில் தோல்வியும் ஏற்படலாம்’ என்பதை அறியாதவர்களாக போராட்டக் களத்தில் குதித்தனர். சுருக்கமாக சொன்னால், ஒருவித உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர்.
அதேநேரத்தில் இந்த போராட்டங்களின் பின்னால் மத காரணம் ஒன்றும் இருந்தது. இஸ்லாமியர்களின் புனித தலங்களுக்கு ஜினோயிசக்காரர்கள் மிரட்டல் விடுத்ததும், எகிப்திய இளைஞர்கள் போராட காரணமாக அமைந்தது.
படித்து வேலையில்லாமல் இருந்த பல்லாயிரக்கணக்கான எகிப்திய இளைஞர்கள், அரசின் கையாலாகாததனத்தினால் எரிச்சலடைந்து இருந்தனர். எகிப்தில் ஊழலை ஒழிப்பதாக ஹோசினி முபாரக் வாக்குறுதி கொடுத்ததோடு சரி, ஊழலை ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இதே நேரத்தில் எகிப்திய நாடாளுமன்றத் தேர்தலில் முபாரக்கின் தேசிய ஜனநாயக கட்சிக்கு லேசான சரிவும் ஏற்பட்டது.
எகிப்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது சீருடை அணியா ஆண், பெண் பொலீசார் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்காக பணியாற்றிய எகிப்திய கேமராமேனின் கை உடைந்தது. இவர் கய்ரோவில் உள்ள பொலீஸ் ஸ்டேஷன் ஒன்று சட்டவிரோதமாக பூட்டப்பட்டிருந்ததை படமெடுத்து ஒளிபரப்பியிருந்தார். அதை மனதில் வைத்து பொலீசார் அவரது கையை உடைத்தனர்.
இது தவிர பத்திரிகையாளர்கள் பலருக்கும் எதிரான நடவடிக்கைகளில் எகிப்திய போலீசார் ஈடுபட்டனர்.
2000-ம் ஆண்டு அக்டோபரில் மத்திய கிழக்கில் புதிய மண்டலப் பிரச்னை வெடிக்கப் போவதாக பல்வேறு சர்வதேச விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அரபு நாடுகளில் தெருக்கள் போருக்கு தயாரானது போல் காட்சியளித்தன.
தொடரும்..
விறுவிறுப்பு இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக