ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-21: மொசாத் என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா?

அத்தியாயம் 21

அல்-ஜசீரா அலுவலகத்துக்கு பின்லேடனின் பேக்ஸ் வந்த சில நாட்களில், வந்த மற்றொரு பேக்ஸ், தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமரின் பெயரில் வந்திருந்தது. அதில் இருந்த விஷயம் சிக்கலானது. அதை அப்படியே ஒளிபரப்பினால், சிக்கல் ஏற்படும் என அல்-ஜசீரா தலைமைக்கு புரிந்தது.



அந்த அறிக்கையில் முலாலா ஓமர், “ஆப்கனிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் போர் தொடுக்க, முஸ்லிம்கள் நிதி உதவி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார். நீண்ட ஆலோசனை, மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளின் பின், இந்த அறிக்கை அல்-ஜசீராவில் ஒளிபரப்பப்பட்டது.

உடனடியாகவே, ‘அல்-ஜசீரா தீவிரவாதிகளின் ஊதுகுழல்’ என்ற மேற்கத்தியப் பிரசாரம் உச்சக் கட்டத்துக்கு சென்றது.

வாஷிங்டனில் இருந்த அல்-ஜசீரா பிரிவின் தலைவர் ஹபீஸ் அல் மிராசி, “அல்-காய்தாவுடன் அல்லது தலிபான்களுடன் எங்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தச் சிறப்பு தொடர்பும் இல்லை” என வெளிப்படையாக மறுத்தார். ஆனால், அமெரிக்க ஊடகங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஹபீஸ் அல் மிராசி, “பின்லேடன் தனது அறிவிப்புகளை வெளியிட அல்-ஜசீராவை தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவருக்கு அல்-ஜசீரா எந்த விதமான விசுவாசமும் காட்டாது” என்றும் தெரிவித்தார்.

நியூயோர்க் போஸ்ட் பத்திரிகைக்கு ஹபீஸ் அல் மிராசி, அளித்த மற்றொரு பேட்டியில், “எமக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் காலின் பவல் பேட்டி தருவது எதற்கு? அமெரிக்க ஜனாதிபதி புஷ், அரபு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினால் எங்களை அழைப்பது எதற்கு?

இந்த கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு தெரியும். அரபு நாடுகளின் பார்வையாளர்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை புரிந்து கொண்டுதான் அழைக்கிறார்கள். நாங்கள் அந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஒளிபரப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்” என்று சொன்னார்.

“தலைவர்கள் பேட்டியளிக்க சம்மதித்தாலும், அமெரிக்க அதிகாரிகள் பலர் எங்களுக்கு பேட்டி தர மறுக்கின்றனர். இது எங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகிறது. தயவு செய்து எங்களிடம் பேச வாருங்கள். உங்களது எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்” என்று அல் மிராசி அமெரிக்க அதிகாரிகளுக்கு அழைப்பும் விடுத்தார்.

ஆனால், இப்போதுகூட அமெரிக்க அதிகாரிகள் அல்-ஜசீரா என்றால், சற்று விலகியே இருப்பார்கள்.

அல்-ஜசீரா தொலைக்காட்சியில் பி.பி.சி. தொலைக்காட்சியில் பயிற்சி பெற்ற நிருபர்கள் பலர் வேலை செய்து வந்தனர். மூத்த நிருபரான ஜமீல் அசாரும் இவர்களில் ஒருவர். பி.பி.சி.யில் இருந்து அல்-ஜசீராவுக்கு வந்த ஜமீர் அசாரை எகிப்து பத்திரிகைகள், மொசாத் உளவாளி என்றும், பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6ன் ஏஜண்ட் என்றும் எழுதுவது வழக்கம்.

அல்-ஜசீராவுக்கு பின்லேடனிடம் இருந்து பேக்ஸ் வந்த மறுநாள், மற்றொரு கதையை எகிப்து பத்திரிகைகள் முதல் பக்க தலைப்பு செய்தியாக வெளியிட்டன. “ஜமீர் அசாருக்கு பின்-லேடனின் மறைவிடம் தெரியும்” என்பதே அந்த தலைப்பு செய்தி.

இந்த சென்சேஷனுக்கு ஏ.எப்.பியிடம் பதில் கூறினார் ஜமீர் அசார். “அறிக்கை பேக்ஸ் எந்திரத்தில் வந்தது. இந்த அறிக்கை பாகிஸ்தான் அல்லது தஜிகிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம். அது எங்கிருந்து வந்தது என்று எங்களுக்குத் தெரியாது. அல்-ஜசீராவின் வெளிப்படையான செய்தி சேகரிப்பு முறை, உலகளவிலான கவரேஜ் ஆகியவை பின்லேடனுக்கு பிடித்திருக்கலாம்.

என்னை மொசாத்தின் உளவாளி என்றார்கள். பிரிட்டனின் உளவாளி என்றார்கள், இப்போது பின்லேடனின் ஏஜென்ட் என்கிறார்கள். நாளை அமெரிக்க ஜனாதிபதியின் பேட்டி கிடைத்தால், அவரின் அடியாள் என்பார்கள். இப்படி எழுதுபவர்களில் எத்தனை பேருக்கு மொசாத் என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் தெரியும் என்று கேட்டுப்பாருங்கள். கிடைக்கும் பதில் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்”

பரவலாக எதிர்ப்பு இருந்தாலும், மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து அல்-ஜசீராவின் நிகழ்ச்சிகளை வெளியிட்டு வந்தன.

இங்கிலாந்தில் உள்ள அரபு மொழி பேசும் மக்களை கருத்தில் கொண்டு ஸ்கை தொலைக்காட்சி, அல்-ஜசீராவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. இதன் மூலம் அல்-ஜசீராவை ஐரோப்பாவிலும் பார்க்கும் வாய்ப்பு உருவானது. ருபெர்ட் முர்டோச்சுக்கு சொந்தமான நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பி-ஸ்கை-பி சந்தாதாரர்கள் அல்-ஜசீரா தொலைக்காட்சியை இலவசமாக பார்க்க அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

“எங்களை அமெரிக்க சேனல், சி.என்.என்.னுடன் ஒப்பிடுவதை விட, பிரிட்டனின் பி.பி.சி.யுடன் ஒப்பிடுவதையே நாம் விரும்புகிறோம்” என அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்தது.

“ஆப்கானிஸ்தானில் பின்லேடனை மறைத்து வைத்திருக்கும் தலிபான்களுக்கு பாடம் புகட்டுவோம்” என அமெரிக்க மக்களை ஜனாதிபதி புஷ் எச்சரித்த சம்பவம், அடுத்து நடந்தது. உடனடியாகவே சர்வதேச ஊடகங்கள், தலிபான்கள் மீது அமெரிக்க படைகள் நடத்தும் தாக்குதலை லைவ்வாக கவர் செய்வதற்காக காபூல் நகருக்கு செல்ல துடித்துக்கொண்டு இருந்தன.

அமெரிக்க செப்.11 தாக்குதலுக்கு முன்னர், காபூலில் மூன்று வெளிநாட்டவர்கள் மட்டுமே செய்தியாளர்களாக இருந்தனர். அவர்களும் ஏ.எப்.பி., ஏ.பி., ரொய்ட்டர்ஸ் ஆகிய சர்வதேச செய்தி ஏஜன்சிகளின் செய்தியாளர்கள்.

செப்.11 தாக்குதலுக்கு பின்னர் அனைத்து வெளிநாட்டவர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். புதியவர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

அமெரிக்க படைகள் ஆப்கனிஸ்தானுக்குள் நுழையும் நேரத்தில் அங்கிருக்க சர்வதேச ஊடகங்கள் பலவித முயற்சிகளை செய்தன. பாகிஸ்தானில் பதிவு செய்துள்ள 450 செய்தியாளர்கள் ஆப்கனிஸ்தானுக்குள் செல்லத் தயாராக இருப்பதாக அக்டோபர் 1-ம் தேதி ஏ.பி. தெரிவித்தது. இந்த எண்ணிக்கை எழுநூறையும் தாண்டும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதின.

ஆப்கனிஸ்தான் நாட்டுக்கு செல்ல, விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பொறுமை இழந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் காத்திருந்தனர்.

ஆனால், தலிபான் ஆட்சியாளர் முல்லா முகமது ஓமர், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் ஆப்கனிஸ்தானில் நுழையத் தடை விதித்து எல்லைகளை மூட உத்தரவிட்டு விட்டார். இந்த நிலையில், அல்-ஜசீரா களத்தில் குதிக்க முடிவு செய்தது.

(தொடரும்)

விறுவிறுப்பு இணையம்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல